பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்

3 to 7 years

Parentune Support

3.4M பார்வை

4 years ago

 பாரம்பரிய விளையாட்டுகள் மூலம்  குழந்தைகளுக்கு கிடைக்கும்  நன்மைகள்

ஐ-டெக் தொழில்நுட்ப கருவிகளுடன் நெருக்கமான வீடுகளிலும், வானுயர்ந்த அப்பார்ட்மெண்ட்களிலும் எப்போதுமே சாத்தப்பட்ட கதவுகளுக்கு பின்னால் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோரா நீங்கள்? தயங்க வேண்டாம், நாகரிக வளர்ச்சி மற்றும் நகரமயமாதலின் விளைவுகள் இவை.

Advertisement - Continue Reading Below

இப்போது இதைப் படிக்கும் நம்முள் எத்தனை பேர் நம் குழந்தைகளை பள்ளிவிட்டு வந்ததும் வெளியில் விளையாட அனுப்புகின்றோம்? பாதுகாப்பு போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு குழந்தைகளை வெளியில் அனுப்ப தயங்குகின்றோம். அப்படியே  நாம்  அவர்களை அனுப்பினாலும் எத்தனை குழந்தைகள் ஆர்வமுடன் விளையாட வெளியில் செல்கிறார்கள்?

அவர்கள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் கையில் செல்போனையும், டி.வி., ரிமோட்டையும் கொடுத்து  நேரத்தை செலவு செய்ய வைப்பதே இன்றைய சூழலில் யதார்த்தமாக உள்ளது.  ஆனால் வெளிப்புற விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும், கற்றலையும் இயல்பாக அளிக்கின்றது. அதற்கு இந்த பாரம்பரிய விளையாட்டுகளே அடித்தளமாக இருந்து வருகின்றது. அதை நம் குழந்தைகளுக்கும் மறவாமல் கற்றுக் கொடுத்து நன்மைகள் பெற செய்யலாம்.

பாரம்பரிய விளையாட்டுகளின் நன்மைகள்

Advertisement - Continue Reading Below

தமிழகத்தில் கண்ணாமூச்சி, கபடி, கில்லி, சில்லுக் கோடு, கிச்சுகிச்சு தம்பாளம், குலைகுலையாய் முந்திரிக்கா, கல்லாங்காய், பல்லாங்குழி, நொண்டி, பம்பரம் விடுதல், பச்சை குதிரை போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கா பஞ்சம்? இந்த விளையாட்டுகளை எப்படி விளையாடுவது என்பதை விடுங்கள், இப்படியெல்லாம் விளையாட்டுகள் உள்ளன என்றாவது நம் பிள்ளைகளுக்கு தெரியுமா? இதை கற்றுத்தர தவறுவது யாருடைய தவறு?

  • புழுதித் தெருக்களில் புரண்டு விளையாடிய நாம்தான் இன்று கான்கிரீட் தெருக்களில் கூட குழந்தைகளின் பாதம் பதியாமல் பார்த்துக்கொள்கிறோம். இயற்கை சூழலில், கடற்கரை மணலில் என மணல் வீடு கட்டுவது, கிச்சு கிச்சு தம்பாளம் என மண்ணோடு விளையாடுவதால் குழந்தைகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

 

  • கல்லாங்காயை தட்டி பிடித்து கணக்கை பயில முடியும், பல்லாங்குழியில் சேமிப்பையும், பங்கீட்டு யுக்திகளையும் அறியலாம், நொண்டியில் உடலுடன் மனதையும் சமநிலை படுத்த கற்றுக்கொள்ளலாம், பாட்டுப் பாடி சடுகுடு ஆடி பாய்ந்து சென்று வெற்றியை எட்டிப்பிடிக்க  கற்றுக் கொள்ளலாம்.
  • கண்ணாமூச்சியில் ஓடி ஒளிந்தாலும், தேடி அலைந்தாலும் கூடி விளையாடுவதன் மகிழ்ச்சியை பெற்றோம். இதன் மூலம் கோபம், பயம், தயக்கம், தனிமை உணர்வு போன்ற இன்றைய குழந்தைகள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் இருந்து அன்று நாம் தப்பித்தோம்.
  • வேடிக்கைக்குத்தான் விளையாட்டு என்றாலும், விழிப்புடன் இருந்தால் வெற்றி நிச்சயம் என்கிற மிகப் பெரிய வாழ்க்கை பாடத்தை இந்த விளையாட்டுகள் நமக்கு சொல்லிக் கொடுக்காமலேயே அறிந்து கொள்ள முடியும்.
  • உள் அரங்க விளையாட்டு, வெளி அரங்க விளையாட்டு, தனி விளையாட்டு, குழு விளையாட்டு என எந்த வகையில் விளையாடினாலும் குழந்தைகளில் தலைமைப்பண்பு மற்றும் தனித்திறன் வளர்ச்சி மேம்படுகின்றது.
  • இந்த பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகள் மத்தியில் சகிப்புத்தன்மை, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் அவர்கள் வந்த மரபையும் உணரச் செய்கிறது.
  • கேட்ஜெட்ஸ் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் பாரம்பரிய விளையாட்டுகளில் பல ஏற்கனவே காணாமல் போய்விட்டது. நம் நினைவுகளில் மட்டும் மீதம் இருக்கும் ஒரு சில விளையாட்டுகளையாவது இன்றைய தலைமுறைக்கு கற்றுத்தரலாம். இண்டர்நெட், வீடியோ கேம்ஸ் என நம் பிள்ளைகளுக்கு என்னதான் இந்த விளையாட்டுகள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவர்களை அடிமைப்படுத்தி, வேறெதிலும் முறையாக கவனம் செலுத்த விடாமல் செய்வதோடு, இந்த நிழல் பிம்பங்கள் அவர்களின் நிஜத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துவிடும் ஆபத்தும் இருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

இனியாவது மடிக்கணினியில் விளையாடும் நேரத்தை குறைத்துவிட்டு, மணலில் இயற்கையின் மடியில் அவர்கள் விளையாடட்டும், திரைகளை தடவி விளையாடியது போதும், தரையில் புரண்டு அவர்கள் தவழ்ந்தாடட்டும். சமூகமயமாதலையும், யதார்த்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் இந்த பாரம்பரிய விளையாட்டுகள் நிச்சயமாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். அதற்கான வாய்ப்புகளை பெற்றோர்கள் நாம் உருவாக்கிக் கொடுக்க எப்போதும் தயாராக இருப்போம்.

 

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...