சதுர்த்தி ஹெல்தி கொழுக்கட்டைகள் - வலிமை கொடுக்கும் விநாயகரை வணங்குவோம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Sep 09, 2021

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
என்ற ஒளவையார் பாடலைப் பாடி குழந்தைகளோடு இனிமையாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்
முழு முதற் கடவுளாக விளங்குபவர் விநாயகர். இவர் அவதார தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
சதுர்த்தி அன்று விநாயகருக்கு எப்படி பூஜை செய்வது
வீடுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு அருகம்புல் மாலை அல்லது எருக்கம்பூ மாலை, செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்கள் அணிவித்து வாழை இலையில் வெற்றிலை பாக்கு பழம் ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என அர்ச்சனை செய்வது வழக்கம் .
இவ்வாறு பூஜை செய்பவர்களுக்கு தெடங்கிய காரியத்தில் வெற்றியையும், எடுக்கும் காரியங்களில் சித்தியையும் அளிக்கிறார்' என்பது நம்பிக்கை.
விநாயகருக்கு நைவேத்தியம் என்றால் விருப்பம்
அவருக்கு விருப்பமான அப்பம், அவல் பொரி, மோதகம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடலாம்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் சிறப்பு. பொதுவாக அரிசி மாவு வெல்ல பூரண கொழுக்கட்டை (அ) எள்ளு பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்வது வழக்கம். நான் சில வித்தியாசமான கொழுக்கட்டை செய்முறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
பிஸ்கட் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு - 1 கப்
- தண்ணீர் - தேவையான அளவு
பூரணம் தயாரிக்க
- மேரி பிஸ்கட். - 10
- சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
- நெய் - 1டீஸ்பூன்
- தேங்காய் பூ - 1 கப்
- வெல்லம் பாகு - 1டேபிள்ஸ்பூன்
செய்முறை
- முதலில் பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி தேங்காய் பூ சேர்த்து நன்கு வறுக்கவும்.
- பின்னர் வெல்லப்பாகு சேர்த்து கிளறவும்.பின் பொடித்த பிஸ்கட் சேர்த்து பூரணம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
- இதை அரிசி மாவில் சிறிது வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
- இப்போது கையில் ஒரு சிறிய அளவு மாவு எடுத்து நன்றாக அதை தட்டி கொண்டு நடுவில் பிஸ்கட் பூரணம் வைத்து எந்த வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் செய்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- சுவையான பிஸ்கட் கொழுக்கட்டை தயார்.
ராகி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 1 கப்
- வெல்லம். - 1 கப்
- தேங்காய் பூ - 1 கப்
- ஏலக்காய் பொடி
- உப்பு. - 1 சிட்டிகை
செய்முறை
- பாத்திரத்தில் ராகி மாவு நெய் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். பின்னர் சிறிது நெய் சேர்த்து தேங்காய் பூ சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி பின்னர் கொஞ்சம் கட்டியாக காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வறுத்து எடுத்து மாவில் வெல்லப்பாகு ஏலக்காய் பொடி சேர்த்து தேங்காய் பூ சேர்த்து நன்கு பிடிக்கிற அளவில் பிசைந்து வைக்கவும்.
- சிறிது நேரம் கழித்து பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- ராகி கொழுக்கட்டை தயார்.
சத்துமாவு கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
- சத்து மாவு. - 1 கப்
- வெல்லப்பாகு - 1/2 கப்
- ஏலக்காய் பொடி சிறிது
செய்முறை
- சத்து மாவில் வெல்லப்பாகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
- கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- சுவையான சத்துமாவு கொழுக்கட்டை தயார்.
கோதுமை மாவு கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 1 கப்
- உப்பு - 1 சிட்டிகை
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பூரணம் தயாரிக்க
- தேங்காய் பூ - 1/2 கப்
- வெல்லத் தூள் - 1/4 கப்
- ஏலக்காய் பொடி
- நெய் - சிறிது அளவு
செய்முறை
- முதலில் கோதுமை மாவை சிறிது நீர் மற்றும் எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
- கடாயில் நெய் சேர்த்து தேங்காய் பூ வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து பூரணம் தயாரிக்க வேண்டும்.
- பின்னர் கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் பூரணம் வைத்து உருட்டி வைக்கவும்.
- இதை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்
- சுவையான கோதுமை மாவு கொழுக்கட்டை தயார்.
உப்புமா கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
- உடைத்த பச்சரிசி. - 1 கப்
- தண்ணீர். - 1 கப்
தாளிக்க
- எண்ணெய் - 5 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- உ.பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்
- காயம் - 1 சிட்டிகை
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை
- தேங்காய் பூ - 4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொண்டு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- அரை வேக்காடு வெந்ததும் இறக்கி ஆறவைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- உப்புமா கொழுக்கட்டை தயார்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.