உங்கள் குழந்தைக்கான சரியான குழந்தை நல மருத்துவரை எப்படி தேர்ந்தெடுப்பது?

Sagar ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Dec 04, 2019

குழந்தை கருவுற்ற நாள் முதல் அவர்களாக பெரியவர்களாக வளரும் வரை ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கின்றோம். குழந்தைகள் எப்போதும் ஆரோக்கியமாகவும், சந்தோஷமானவும் இருக்க வேண்டும் என்ற ஆசை என்னை போல் ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் குழந்தைகள் நோய்வாய் படுவது இயல்பு.
நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்து வரும் நேரத்தில் குழந்தைகள் நோய் தொற்று மற்றும் சில உடல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். இத்தருணத்தில் எல்லா பெற்றோருமே அவர்களுக்கு ஒரு சிறந்த மருத்துவர் அமைய வேண்டும் என்றே விரும்புவோம். சில நேரங்களில் பதட்டத்தில் ஏதாவது ஒரு மருத்துவரிடம் அழைத்து செல்வதும் நிகழும். அந்நேரங்களில் என்னை போல் பல பெற்றோர்களுக்கும் மிக சவாலான மற்றும் கவலையான தருணம். இந்த சமயத்தில் குழந்தை மருத்துவர்கள் நமக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.
நம் குழந்தைகளின் பிரச்சினையை உணர்ந்து அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை அளிக்கிறார்கள். சரி என் குழந்தைக்கான சரியான குழந்தை நல மருத்துவரை எப்படி தேர்வு செய்தேன். வாங்க அதை பற்றி பாப்போம்.
குழந்தை நல மருத்துவரை தேர்தெடுப்பதற்கான வழிகள்:
இன்றைக்கு டெக்னாலஜி வளர்ச்சியால் பல வழிகளில் நமக்கு தேடும் வாய்ப்பு உள்ளது.மேலும் மருத்துவர்களை பற்றிய தகவல்களை நாம் முன்னதாக அறியும் வாய்ப்பும் உள்ளது. இது ஒரு நல்ல விஷயம். இன்னும் நுணுக்கமாக தேடி தேர்ந்தெடுக்க உதவி புரிகின்றது.
-
குடும்ப மருத்துவர்
நமது குடும்ப மருத்துவரே மிகவும் நம்பகமானவர் என்று சொல்லலாம் ஏனெனில் நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பல வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்திருப்பார். அவர்களிடம் நமது குழந்தையின் உடல் நிலையையும் நமது உணர்வையும் பகிர்ந்து கொள்ள சுலபமாக இருக்கும். சில சமயம் நமது உறவினர்கள் நண்பர்கள் சிபாரிசு செய்யும் சிறந்த குழந்தை நல மருத்துவர்களை அணுகலாம்.
-
வாய்வழி செய்தி
வாய்வழி செய்தியாக ஒரு சிறந்த மருத்துவரைப் பற்றி தெரிய வரும்பொழுது தாராளமாக அணுகலாம். ஏனெனில் ஒரு மருத்துவரைப் பற்றிய புரிதல் அவரது அனுபவத்தோடு மக்களின் நம்பகத்தன்மையில் தான் பெரிய அளவில் இருக்கின்றது அதன் மூலம் அனைவருக்கும் தெரியவருகிறது.
-
நியூஸ் பேப்பர் மற்றும் பத்திரிக்கை
இப்போது நிறைய நியூஸ் பேப்பர் மற்றும் பத்திரிக்கைகள் போன்றவற்றில் நிறைய மருத்துவர்கள் கட்டுரைகள் எழுதுகிறார்கள். இதன் மூலம் கூட நாம் அறிய முடியும்
இணையத்தில் தேடல்
இணையத்தின் மூலம் மருத்துவரை எளிதாக தேடமுடியும். அவரது தகுதி மற்றும் அனுபவத்தை ஆராய இணையம் சிறந்த கருவியாக திகழ்கிறது. மருத்துவரை நேரிடையாக உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் நோயாளிகள் கொடுக்கும் மதிப்புரைகள் பார்த்து மருத்துவரை தேர்வு செய்ய முடியும்.
தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- சரியான குழந்தை மருத்துவரை தேர்வு செய்யும் பொழுது நமது வீட்டின் அருகே மருத்துவரின் கிளினிக் இருப்பது சிறந்தது. ஏனெனில் அவசர நேரத்தில் அவரை உடனே அணுக அருகாமையில் இருப்பதே நல்லது. நமது மனதளவிலும் மருத்துவர் அருகில் இருக்கிறார்கள் என தைரியமாக இருக்க முடியும்.
- மருத்துவரின் அணுகுமுறையை கருத்தில் கொள்ளவும். குழந்தைகளிடமும் நேர்மறையான அணுகுமுறை இருந்தால் சூழ்நிலையை சமாளிக்க ஏற்றதாக இருக்கும். நம்முடைய சந்தேகங்களை எளிதாக தீர்க்க கூடியவராக இருப்பது சிறந்தது. மற்றும் அவரை எளிதாக அணுகும் வசதி இருக்க வேண்டும், இப்போதெல்லாம் பல மருத்துவர்கள் அவசர கால தேவைக்கு தங்களை மொபைலில் அணுக சொல்கிறார்கள். இது நமக்கு இன்னும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
- நாம் இணையம், பத்திரிக்கை, டிவி என எதில் பார்த்தாலும் அவர்களை நேரடியாக சென்று பார்க்கும் அனுபவத்தை வைத்தே முடிவுவெடுக்க வேண்டும். பெரிய மருத்துவமனை தான் சிறப்பாக இருக்கும் என்றில்லை. நமக்கு அருகில் இருக்கும் சின்ன சின்ன மருத்துவமனைகள், கிளினிக்கில் கூட சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். பணமும் குறைவாக இருக்கும். சிகிச்சையும் நன்றாக இருக்கும். இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு உங்கள் குழந்தைக்கான குழந்தை நல மருத்துவரை தேடி சிறப்பானவரை தேர்ந்தெடுக்க என்னுடைய வாழ்த்துக்கள்.