• உள்நுழை
 • |
 • பதிவு
கேஜெட்கள் மற்றும் இணையம்

குழந்தைங்க வீடியோ கேமில் அதிக நேரம் விளையாடுறாங்களா?

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 06, 2021

குழந்தைகள்  சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு எப்படி பழகி கொள்கிறார்களோ அதைப் போல் இயல்பாக மொபைல் போன் மற்றும் வீடியோ கேம் பயன்பாட்டிற்கும் பழகி கொள்கிறார்கள். 1 அல்லது 2 வயதில் குழந்தை மொபைல் போன் பார்ப்பது என்பது நமக்கு பிரச்சனையாகத் தெரிவதில்லை அதே குழந்தை வளர வளர 4 அல்லது 5 வயதில் வீடியோ கேம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று சொல்லும் போது தான் நாம் விழிப்புணர்வுக்கே வருகின்றோம்.

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளிடமிருந்து முற்றிலுமாக மொபைலை ஒலித்து வைக்க முடியாது என்ற நிதர்சனம் எனக்கும் புரிகிறது. ஆனால் பெற்றோர்கள் நம்மை அறியாமலேயே குழந்தைகள் மெல்ல மெல்ல அடிமையாகிறார்கள். அவர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்று உண்மையிலேயே நமக்கு தெரிவதில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் மனநல சிகிச்சை எடுக்கும் அளவிற்கு பிரச்சனை போகும் போது தான் அதன் தீவிரத்தை உணர்கின்றோம்.ஆரம்ப கால அறிகுறிகள் கொண்டு குழந்தைகளை வீடியோ கேம் அடிக்‌ஷனிலிருந்து மீட்கலாம்.

எங்களுடைய குடும்ப நல ஆலோசகர் பகிர்ந்து கொண்ட ஒரு கேஸ் ஸ்டடி. அந்தப் பயனுக்கு 7 வயது இருக்கும். கிட்டத்தட்ட விவரம் தெரிந்த நாளிலிருந்து அவனின் மிகப்பெரிய பொழுதுப்போக்கே மொபைல் போன் தான். அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதால் வெளிச்சூழலில் விளையாடும் வாய்ப்பும் அரிதாகவே கிடைக்கும். தொடர்ந்து வீடீயோ கேம் விளையாட ஆரம்பித்து ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டான். மேலும்  அந்த அதிவிரைவான உலகத்தில் பழகிய அவனால் யதார்த்தமான உலகில் மகிழ்ச்சியாக இருக்க தெரியவில்லை. வீட்டு விசேஷங்களிலும் மொபைல் போனுடன் தான் இருப்பான். நடுவில் போனை வாங்கினால் கத்தி ஆர்பாட்டம் செய்துவிடுவான். இறுதியில் மனநல ஆலோசகரிடம் சென்று தான் இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்கள்.


என் குழந்தைக்கெல்லாம் இந்த மாதிரி பிரச்சனை வராது என்று நினைக்காதீர்கள் பெற்றோர்களே, இந்த சிறுவனுக்கும் இதே போல் மெல்ல மெல்ல ஆரம்பித்த மொபைல் போன் பழக்கம் தான் இன்று அடிமையாகும் வரை கொண்டு சென்றுவிட்டது. காரணம்,  அவர்கள் படிப்படியாக சென்று இறுதியில் எப்படி அடிமையாகிறார்கள் என்பது நமக்கு பல நேரங்களில் தெரிவதில்லை.

உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வைக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். உங்கள் குழந்தையின் மனநிலையை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
1. சாப்பிடுவதை விட வீடியோகேம் விளையாடுவது தான் குழந்தை முக்கியமாக எண்ணுகிறதா?
2. தூங்கி எழுந்ததும் வீடியோகேம் பற்றிய எண்ணம் வருகிறதா?
3. பள்ளிக்கு போகாமல் வீடியோகேம் விளையாடுவது பிடித்துள்ளதா?
4. வீட்டு விஷேங்களிலும் மற்றவர்களோடு தொடர்பில்லாமல் மொபைல் போனுடன் இருக்கிறார்களா?
இவற்றுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றால், 'கேமிங் டிஸ்ஆர்டர் ' நோய்க்கான அறிகுறிகள் இவை. மேலும் வீடியோகேமுக்கு அடிமையாக இருப்பதை மன நோய்கள் பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் சேர்த்துள்ளது.

எப்படி அடிமையாகிறார்கள் ?

இன்றைய பெரும்பாலான பிள்ளைகளின் பிரச்சனை இது தான். நவீன வாழ்க்கைமுறையில் பிள்ளைகளுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வழிகள் உருவாக்கித் தரப்படுவதில்லை. மகிழ்ச்சியாக  சிரித்து பேச சக பிள்ளைகள் இல்லை. பெரும்பாலும் நாம் வீடுகளில் டிவி, மொபைல் போன், வீடியோ கேம் இவற்றையே, அவர்களின் பொழுதுப்போக்காக அறிமுகப்படுத்துகிறோம். ஒரு கட்டத்திற்கு மேல் பேசுவதற்கு ஆளில்லாமல், சமூகத்தோடும், உறவினர்களோடும் தொடர்பில்லாமல், வெளிச்சூழலில் விளையாட முடியாமல், இந்த நிழல் விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுகின்றனர். முக்கியமாக அவர்களின் நடத்தையில் மாற்றங்கள் தெரிகிறதா என்பதை கவனிக்க தவறுவதால் பிள்ளைகள் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள் மூலம் அறியலாம்

விளையாடும் போது சாதாரணமாக தெரிந்தாலும், நாளைடைவில் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிய தொடங்கும். அதிகமாக கோபப்படுவது, எரிச்சல் அடைவது, ஏமாற்றம் அடைவது, தனிமையை விரும்புவது, உணவு வேளையில் ஏதாவது காரணம் சொல்லி சாப்பாட்டை புறக்கணிப்பது, படிப்பில் கவனம் குறைவது, மற்றவர்களோடு பேசத் தயங்குவது, வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டு கிடப்பது போன்று பிள்ளைகளின் சுபாவம் மாற ஆரம்பித்தாலே, பிள்ளைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று அர்த்தம்.

உளவியல் ரீதியான அறிகுறிகள்
• படிப்பில் ஆர்வம் குறைவது. வீடியோ கேம் விளையாட அனுமதி கொடுக்காத போது கோபமாகவும், ஏமாற்றமாகவும் உணர்வது.
• கேம் விளையாடாத நேரங்களில் மனச்சோர்வாக, தனிமையை உணர்வது.
• எப்போதும் கேமிங் பற்றியே பேசுவது. கேமில் அடுத்த வெர்ஷன் என்ன வந்திருக்கும் என ஆராய்வது. கேமில் அடுத்த நிலைக்கு போக முடியாததை எண்ணி வருத்தமடைவது.
• வெளி விளையாட்டுகளில் பங்கெடுக்காமல் இருப்பது.
• கணிணியில் விளையாடும் போது தடை ஏற்பட்டால், உதாரணத்திற்கு இன்டர்நெட் வேகம் குறைந்தாலோ, சர்வர் டவுன் ஆனோலோ அதீத எரிச்சலை காட்டுவது, எதாவது பொருளைத் தூக்கி எறிவது அல்லது மற்றவர்கள் மீது கோபத்தை காட்டுவது.
• அடிக்கடி சுயக்கட்டுப்பாட்டை இழப்பது.

உடல் ரீதியான அறிகுறிகள்
• இரவு அதிக நேரம் கண் விழிப்பது. தூக்க நேர சுழற்சியில் அடிக்கடி மாற்றம் வருவது.
• தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனக்குறைவு ஏற்படுவது.
• சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது. அல்லது நேரத்தை பின்பற்றாமல் அதீத உணவை சாப்பிடுவது (ஜங் ஃபுட், கலர்பானங்கள்)
• கண் சிவத்தல், கண்களில் வறட்சி ஏற்படுவது.
• தலைவலி, கழுத்து வலி, விரல்களில் வலி ஏற்படுவது.
• எடை குறைவது அல்லது எடை கூடுவது.
• நரம்பு சம்பந்தபட்ட பிரச்னைகள் வருவது.

நடத்தையில் அறிகுறிகள்
• கல்வி தொடர்பான செயல்பாடுகளில் பின்னடைவது.
• வீட்டுப்பாடம், படிப்பிற்காக குறைவான நேரத்தை செலவிடுவது.
• புதிய வீடியோ கேம் வாங்குவதற்காக அதிக பணம் செலவு செய்வது.
• விளையாடும் பொழுதும், ஆன்லைனில் மற்ற நண்பர்களுடன் கேமிங் பற்றியே கலந்துரையாடுவது.
• விளையாடும் போது குறுக்கிட்டால், முரட்டுத்தனமாக நடந்து கொள்வது, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது.
• விளையாடிக் கொண்டே சாப்பிடுவது அல்லடு சாப்பாட்டு நேரத்தை தவிர்ப்பது.

என்ன தீர்வு?

 • உடல் இயக்கம் சார்ந்த செயல்களில் ஈடுபட வைக்கலாம். உதாரணத்திற்கு புறச்சூழல் விளையாட்டுகள், உடற்பயிற்சி, யோகா, தியானம்.
 • இசை கற்பது, நடனம் ஆடுவது, ஓவியம் வரைவது, விளையாட்டு பயிற்சிகள் என பிள்ளைகளுக்கு ஆர்வம் உள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பலாம்.
  பெற்றோர்கள் பிள்ளைகளுடன் தரமான நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களோடு சேர்ந்து விளையாடுவது, சேர்ந்து சாப்பிடுவது, ஒருவருக்கொருவரின் தேவைகளுக்கு உதவி செய்வது, ஷாப்பிங் செல்வது, வேலைகளை பகிர்ந்து கொள்வது என நேரத்தை செலவு செய்யலாம்.
 • பிள்ளைகளை திசைத்திருப்பும் மற்ற விளையாட்டுகள், உதாரணத்திற்கு தற்காப்பு கலைகள், புதிர் விளையாட்டுகள், ட்ரெக்கிங் செல்வது, புகைப்படம் எடுப்பது, அதாவது வீடியோ கேமிற்கு இணையான மகிழ்ச்சியை தருகின்ற ஆர்வமுள்ள விஷயங்களை பிள்ளைகளுடன் கலந்து பேசி, தேர்வு செய்ய சொல்லலாம்.
 •  நல்ல நட்பு வட்டத்தை பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே உருவாக்க உதவி செய்ய வேண்டும். ஆரோக்கியமான நட்பு, பிள்ளைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தனிமையை அகற்றுவதற்கான சிறந்த வழி இதுவே. முக்கியமாக ஒரே பிள்ளையுள்ள குடும்பங்களில், நல்ல நண்பர்கள் இருப்பது ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும்.
 • வீட்டு விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வதை அவர்களின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவும். உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அழைத்துச் செல்லுங்கள்.
 • நூலகம், பயிலரங்கு போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.
 • வெளியூர்களுக்கு பயணம் செய்யும் போது மொபைல் போனுக்கு பதில் வேறு விளையாட்டோ அல்லது பொழுதுப்போக்கிற்கோ பிள்ளைகளை பழக்கவும்.

பெற்றோர்கள் நமக்கிருக்கும் பொறுப்புகளுக்கு நடுவே பிள்ளைகளின் அன்றாட வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டியது மிக அவசியம். இப்போதுள்ள பிள்ளைகளின் நிலை மிகவும் பரிதாபம். முக்கியமாக, நகரத்தில் வாழும் பிள்ளைகளின் ஒவ்வொரு நாளும் யுகமாக கழிகின்றது. இதற்கு பெற்றோர்கள் மட்டுமே உதவ முடியும். ஒரு குழந்தை அடிமையாகும் வரை விட்டு விடுகிறோம் என்றால் பிரச்சனை குழந்தைகளிடமில்லை நம்மிடம் தான் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ’ வரும் முன் காப்பதே சிறந்தது’.

 

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}