• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

கார்த்திகை திருநாள் - பாரம்பரிய கொண்டாட்டத்தில் குழந்தைகளின் பங்களிப்பு

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 10, 2019

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகளுக்கு விழாக்கள் என்றாலே கொண்டாட்டங்கள் அதிகமாக இருக்கும். தமிழர் வாழ்வின் பாரம்பரியத்தை, அடையாளத்தை நம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர ஒரு நல்ல வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்திக் கொள்வோம். கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த இந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோயில்களிலும் விளக்குகளை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவதே தீபத் திருநாளாகும். பண்டைய காலத்திலிருந்து இந்த நாளை தமிழர்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். வீடுகளின் வெளிப்புறத்திலும், வீட்டு முற்றத்திலும் அழகான மா கோலம் போட்டு அதிக எண்ணிக்கையில் விளக்குகள் ஏற்றி வழிபடுவதே இந்நாளின் தனிச்சிறப்பு.

இன்றைய சூழலில் திருவிழாக்களின் கொண்டாட்ட வடிவமே மாறிப்போய் வரும் நிலையில் இந்நாளின் சிறப்பை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. முக்கியமாக இவ்விழாக்களின் முக்கியத்துவத்தை குழந்தைகள் பார்ப்பது மட்டுமில்லாமல் அவர்களை ஈடுபடுத்தும் பொழுதே இந்நாளின் சாராம்சத்தை உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்வார்கள்.

குழந்தைகளை ஈடுபடுத்தும் போது பாரம்பரியம் பற்றி என்ன கற்று கொள்கிறார்கள்

• நம் திருவிழாக்கள், நமது அடையாளத்தையும், பண்பாட்டையும் அவர்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.
• வீட்டில் பெற்றோர்களும், தாத்தா பாட்டி செய்யும் பூஜைகளும், பண்டிகையை கொண்டாடும் விதமும் குழந்தைகளுக்குப் புத்தகத்தை தாண்டிய யதார்த்த வாழ்க்கையை கற்பிக்க உதவுகின்றது.
• இந்த நாளில் கோயில், பிற வீடுகள் போன்ற வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லும் போது அங்குள்ள நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் மூலம் குழந்தைகள் சமூகமயமாவார்கள்.
• இந்த நேரத்தில் நம்முடைய பாரம்பரிய உடைகளை அணியும்படி ஊக்கவிப்பதன் மூலம் கலச்சாரத்தை அறிந்து கொள்வார்கள்.
• பொறுப்புகள், கடமைகள் பற்றி அறிந்து கொள்கிறார்கள். ஒரு வேலையை திறமையாக, படைப்பாற்றலோடு பழமை மாறாமல் செய்வதை கற்றுக் கொள்கிறார்கள்.

என்னென்ன விதங்களில் அவர்களை ஈடுபடுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகள் :

விழாக்கள் பற்றி பேசலாம்: கார்த்திகை ஏன் கொண்டாடுகிறோம், தீபங்கள் ஏன் ஏற்றுகிறோம், எதற்காக வழிபடுகிறோம் போன்ற விஷயங்களை அவர்களோடு பேசலாம். இதன் மூலம் இந்த நாளுக்காக முன்கூட்டியே அவர்களை தயார்படுத்துவதோடு மட்டுமில்லாமல், விளக்குகள் வாங்குவது, வீட்டை அலங்காரம் செய்வது, வண்ணக் கோலப்பொடிகள் வாங்குவது என அவர்களை பங்கெடுக்க வைக்கலாம்.

ஆர்ட் & கிராஃப்ட்:  குழந்தைகளுக்கு வெளிச்சமும், வண்ணங்களும் மிகவும் பிடித்தவை. வீட்டில் தோரணங்கள் கட்டுவது, விதவிதமான விளக்குகளை வீட்டின் வெளிப்புறத்திலும், வீட்டு முற்றத்திலும் வரிசையாக அடுக்கி வைப்பது, கோலத்தில் வண்ணங்கள் இடுவது, பூக்கள் கொண்டு வீட்டை மற்றும் கோலத்தை அலங்கரிப்பது என எல்லாவற்றிலும் அவர்களை பங்கெடுக்க வைக்கலாம். அழகியலை பார்த்து ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அதில் அவர்களுடைய பங்கு இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலும் வளரும்.

விழாக்கான பிரத்யேக உணவு: ஒவ்வொரு விழாக்களுக்கென்று தனி உணவு வகைகளை தயாரிப்பதுண்டு. அந்த வகையில் கார்த்திகை நாளின் ஸ்பெஷல் உணவான பொரி உருண்டை, கார்த்திகை அப்பம் மற்றும் திணைப் பாயாசம் போன்ற பலகாரங்கள் தயாரிக்கும் போது குழந்தைகளையும் ஈடுபடுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் புது வகை உணவு வகைகளை தயங்காமல் சாப்பிடுவார்கள் மற்றும் சத்துக்களை பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். மேலும் இந்த ஸ்பெஷல் உணவுகளை குழந்தைகளின் நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பதன் மூலம் சொல்லிக் கொடுக்காமலே பகிர்ந்துண்ணும் பழக்கத்தை கற்றுக் கொள்வார்கள்.

கோயில்களுக்கு அழைத்து செல்லுங்கள்: கார்த்திகை திருநாளில் கோயில்களில் நடைபெறும் பூஜைகளும், வழிபாடுகளும் வெகுச்சிறப்பாக இருக்கும். அதுவும் இந்நாளில் கோபுரம் முழுவதும் விளக்கேற்றி பூ அலங்காரம் செய்து பார்க்கவே மிக அழகாக இருக்கும். குழந்தைகளும் மகிழ்ச்சியாக இதை கண்டு களிப்பார்கள். பூஜை, பிரார்தனை, வழிபாடு போன்ற நம்பிக்கை சார்ந்த விஷயங்களின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர்களுக்கு புரிய வைக்க முடியும். பாரம்பரிய உடை அணிந்து, குடும்பத்தோடு சேர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபடுவது என்பது இனிமையான நினைவுகளாக அவர்களுக்குள் பதியும்.

சமூகமாயமாகும் வாய்ப்பு: விஷேச நாட்களில் மற்றவர்களோடு சமூகமயமாவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே கிடைக்கும். நண்பர்கள், கோயில்; அக்கம் பக்கத்து வீடுகளில் செய்யும் விழாக்கான ஏற்பாடுகளில் குழந்தைகள் பங்கெடுத்துக் கொள்ள விரும்புவார்கள். குடும்பத்திற்குள் மட்டுமில்லாமல் சமூகத்தோடும் கலந்து உறவாடுகிற வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர முடியும்.

பாதுகாப்பான கார்த்திகை: குழந்தைகளுக்கு நெருப்பை பற்றிய பயம் தான் அதிகமாக இருக்கும். இந்த கார்த்திகை திருநாளில் கொண்டாட்டத்தோடு நெருப்பிடம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். விளக்குகள் ஏற்றும் போது, குழந்தைகள் அங்கேயும், இங்கேயும் ஓடி விளையாடும் போது மிகுந்த கவனம் தேவை. விளக்குகள் ஏற்றும் பொழுதே அவர்களிடம் இதை பற்றிய ஆபத்தையும் சொல்லிக் கொடுக்கலாம்.

குழந்தைகளின் பங்களிப்பை பாராட்டுங்கள்: எப்போதுமே குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களுக்கும் பாராட்டு கிடைக்கும் போது அதை இன்னும் சிறப்பாக செய்ய முயற்சி செய்வார்கள். பிடிவாதம் மற்றும் கோபம் கொள்ளும் குழந்தைகளை கூட இந்த மாதிரி தருணங்களில் பொறுப்புகள் கொடுத்து அவர்களை பாராட்டும் போது சாந்தமும், மகிச்சியும் அடைவார்கள். இந்த நாளில் அவர்களின் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் பாராட்டத் தவறாதீர்கள்.

ஏற்கனவே திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் தனித்தீவில் கொண்டாடுவது போல் சுருங்கிக் கொண்டே வருகின்றது. ஆகவே இத்தருணத்தில் விழாக்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையும் விடாமல் தொடர்ந்து செய்யும் உந்துதலை கொடுக்கும். மேலும் இவ்விழாக்களை குழந்தைகள் முன்னெடுத்து செல்வதன் மூலம் நவீன காலத்திலும் நமது பழமையும், பாரம்பரியமும் அழியாமல் நிலைத்துநிற்கும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}