• உள்நுழை
 • |
 • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் வழங்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

Radha Shree
3 முதல் 7 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 22, 2018

உணவே மருந்து மருந்தே உணவு இது வெறும் பழமொழி அல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் பொதுமொழி ஆகும். நம்மில் எத்தனை பேர் ஊட்டச்சத்துள்ள  உணவை உண்கிறோம்? இதற்கு நம்மில் பலர் இல்லை என்றே பதில் அளிப்போம். இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் உணவை தான் உண்கிறோமா? என்பதே கேள்வி குறியாக தான் உள்ளது ஏனெனில் இங்கே ரசாயன கலப்படம் நிறைந்த பண்டங்களே  பல இடங்களில் உணவாக பறிமாறப்படுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாட்டின் இன்றைய நிலை

இன்று நாம் அனைவரும் மருத்துவமனையில் கூட்டம் கூட்டமாக கால்கடுக்க தவம் கிடக்க காரணமே ஊட்டச்சத்து குறைவான உணவுகளை அதிகம் உண்பதால் தான்.ஊட்டச்சத்து இல்லா உணவுகளை உண்பதால் தான் கருவில் இருக்கும் குழந்தை முதல் கண் மூட காத்திருக்கும் முதியவர்கள் வரை ஒருவரையும் விடாமல் நோய் தொற்றி கொண்டு உள்ளது.

இந்தியாவில் மட்டும்  60 சதவீதம் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஆறு வயதுக்கு உட்பட்ட இருபது லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள் ( யூனிசெப்பின் அறிக்கை ) என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

ஊட்டச்சத்துள்ள உணவின் அவசியத்தை ஆறாம் வகுப்பில் அறிவியல் புத்தகத்தில் படித்ததோடு சரி நம் வாழ்வியல் புத்தகத்தில் அதன் அவசியத்தை புரிந்து கொள்ளாமல் புதைத்து விடுகின்றோம்.

சரிவிகித உணவு:

கார்போஹைட்ரைட்டுகள்,புரதங்கள் ,தாதுக்கள், கொழுப்புகள்,உயிர் சத்துக்கள் மற்றும் நீர் இந்த ஆறு மூலக்கூறுகள் நிறைந்த உணவுகளையே ஊட்டச்சத்து மிக்க உணவுகள் என்கிறோம்.சரிவிகித உணவை ஒரு மனிதன் சரியான அளவில் எடுத்து கொள்ளும் போது அவனுக்கு அனைத்து சத்துக்களும் மிக சரியாக கிடைக்கின்றன.

மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள்:

நம் முன்னோர்கள் பிரசவ வலிக்கு கூட மருத்துவமனையை எட்டி பார்த்தது இல்லை நாமோ பின்னங்கால் வலிக்கு கூட மருத்துவமனை நாடி ஓடுகின்றோம்.காரணம் என்னவென்றால் அவர்கள் பாலும் திணையும் உண்டு வாழ்ந்தனர் ஆனால் நாமோ நாகரீகம் என்ற பெயரில் பர்கரும் தித்திப்பு மிகுந்த தீனிகளும் உண்டு வளர்கின்றோம்.

இந்த அவசர உலகில் மாறி வரும் உணவு பழக்க வழக்க முறைகளால் உடலுக்கு உரம் சேர்க்கும் பழமை வாய்ந்த பாரம்பரிய மிக்க உணவுகளை தவிர்த்து பதப்படுத்தப்பட்ட பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட பண்டங்களை உண்கிறோம்.

ஊட்டச்சத்து மிக்க உணவுகள்:

நாம் மிக சாதாரணமாக பயன்படுத்தும் பால் தயிர் தொடங்கி நம் மேனியில் படும் சூரிய ஒளி முதல் அனைத்திலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் தான் இந்த இயற்கையின் வர பிரதாதங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில்லை.

எடுத்துக்காட்டாக:

மிக சாதாரணமாக எல்லா பருவங்களிலும் கிடைக்கும் கீரைகளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது. இன்றைய சூழலில் குழந்தைகள் சந்திக்கும் மிக முக்கிய நோய்களில் இரத்த சோகையும் ஒன்று. இரும்பு சத்து இரத்த சோகையை இருந்த இடம் தெரியாமல் அகற்றி விடும். சூரிய ஒளி மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் "டி " கிடைக்கிறது இது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

பச்சை காய்கறிகள்,மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் "ஏ" சத்து நிறைந்து உள்ளது இது கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

அவ்வைக்கு அதியமான் அன்பளிப்பாக அளித்த நெல்லிக்கனியில் வைட்டமின் "சி" சத்து அதிகம் உள்ளது. ஒரு முழு நெல்லிக்கனி சாப்பிடுவது ஒரு ஆப்பிள் சாப்பிடுவதற்கு சமம். தினம் ஒரு நெல்லிக்கனி உண்பவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லா பாக்கியசாலிகள்.

இன்றைய இளைஞர்களின் இதயத்தை இளைஞிகள் தாக்குவதற்கு முன்பே இதய நோய் தாக்கி விடுகின்றது. கருவில் இருக்கும் சிசுவுக்கு கூட இதய நோய்கள் இருப்பது இயல்பாகி விட்டது. எண்ணெய் பசைமிக்க மீன்களில் உள்ள ஒமேகா கொழுப்புகள் இத்தகைய நோய்களில் இருந்து நம்மை காக்கின்றன.

ஐயோ!! எண்ணெய் பசைமிக்க மீன்கள் நாற்றம் என சொல்லி விட்டு எண்ணெயில் பொறித்த பண்டங்களை நறுமணம் என கூறி திரியும் மக்களுக்காக,

மீன் எண்ணெயால் தயாரிக்கப்பட்ட ஒமேகா கொழுப்புகள் நிறைந்த மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது. கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் இதுவும் ஒன்றாகும்.

உணவில் கலப்படம்:

அயல்நாட்டு மோகத்தினால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் பெரும்பாலும்  உண்ண தகுதி அற்றவை என தடை செய்யப்பட்ட உணவுகளாகவே உள்ளன, குறிப்பாக துரித உணவுகளான நூடுல்ஸ் வகை உணவுகள். வெளிநாட்டு மக்கள் நம் கலைகளை ரசிப்பதோடு மட்டும் அல்லாமல் வயிற்றுக்கு மட்டும் அல்லாமல் கண்களுக்கு விருந்தளிக்கும் களஞ்சியமிக்க உணவையும் ரசித்து உண்கிறார்கள்.இங்கு மிக சாதாரணமாக கிடைக்கும் வேப்பங்குச்சியை கூட வெளிநாடுகளில் விற்பனை செய்ய தொடங்கி விட்டார்கள் ஆனால் நாமோ பற்பசையில் கூட சுவையை தேடுகின்றோம்.

பால் முதல் பச்சரிசி வரை அனைத்திலும் கலப்படம் மிகுந்து காணப்படுகிறது பாலில் தண்ணீரும் டீ தூளில் மரத்தூளும் காய்கறிகளில் இரசாயனங்களும் கடலை எண்ணெயில் கலப்படங்களுமே அதிகம் உள்ளது.

தாய்மார்கள் கவனத்திற்கு:

 1. குழந்தை பிறந்த நாள் முதல் ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கான பிரதான உணவு தாய்பாலே ஆகும்.
 2. குழந்தை பிறந்து ஆறு மாதம் முதல் இரண்டரை வயது வரை தாய்பால் கொடுப்பது மிக அவசியம்.
 3. தாய்பால் மட்டுமே குழந்தைகளை எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களில் இருந்து காத்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
 4. தாய்பாலில் உள்ள சத்துக்கள் போன்று வேறு எதிலும் சத்துக்கள் இல்லை அதன் காரணமாகவே இறைவன் பெண்களுக்கு இந்த வரத்தை கொடுத்து உள்ளான்.எந்த உணவும் தாய்பாலுக்கு ஈடாகாது என்பதை தாய்மார்கள் மறக்க வேண்டாம்.தாய்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது. தாய்பால் கொடுப்பது பெண்களை மார்பு புற்றுநோய்களில் இருந்து காக்கும்.
 5. குழந்தைகளுக்கு குறு தானியங்கள்(கம்பு,கேழ்வரகு,சோளம்) உண்ணும் பழக்கத்தை அதிகரிக்க செய்யுங்கள். குழந்தைகளுக்கு பிடித்த முறையில் வித்தியாசமான சிற்றுண்டியாக சிறு தானியங்களை சமைத்து கொடுங்கள்.
 6. குழந்தைகள் நம்மிடம் இருந்தே அனைத்தையும் கற்கின்றனர் ஆகவே தெருவோரங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற துரித உணவுகளையும்,பாலீதின் பைகளில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகளையும் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளின் கவனத்திற்கு:

குழந்தை செல்வங்களான நீங்கள் தான் எதிர்காலத்தின் சொத்துகள் உங்களுக்கு அடுத்து வரும் சந்ததிகளுக்கு எதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை நோயை பரிசாக தர வேண்டாம்.

 1. தினமும் காய்கறிகள் பழங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
 2. துரித உணவுகளை கண்டாலே தூர ஓடி விட வேண்டும்.
 3. உடலுக்கு ஊறு விளைவிக்கும் உருப்பயடியற்ற எண்ணெயில் உருவான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 4. சிறு தானியங்களை சிறுக சிறுக சாப்பிடாமல் தேவையான அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.
 5. சிறார்களான நீங்கள் தான் இந்த உலகை சீர் திருத்த வேண்டும். உங்களுடைய நண்பர்களையும் பாரம்பரியமிக்க நம் உணவை உண்டு பலம் வாய்ந்தவர்களாக மாற்ற வேண்டும்.

"ஓடி விளையாடு பாப்பா

ஒவ்வாமை என ஊட்டச்சத்து உள்ள உணவை ஒதுக்காதே பாப்பா..

கூடி உணவை பகிர்ந்து உண்ணு பாப்பா

நீ

உண்ண கூடாது என ஒதுக்கிய உணவை உண்ணாதே பாப்பா "

உணவு   வளமான வாழ்க்கைக்கே:

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

என்பதை மறவாதீர்கள். நம்மை வளமோடு வாழ செய்வதே நாம் விரும்பி உண்ணும் உணவுகள் தான்.வாழ்க்கை வாழ்வதற்கே ஆகவே வளமோடு உண்டு நலமோடு வாழ்வோம்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}