குழந்தைகளின் பயங்களை போக்க எவ்வாறு உதவலாம்?

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Apr 05, 2021

பெரும்பாலும் குழந்தைகளுக்குள் பயம் எப்படி உருவாகிறது என்று பார்த்தால் பூச்சாண்டி வரான், ஊசி போட சொல்றேன், இருட்டு என வீட்டில் உள்ள பெரியவர்கள் நாம் சில விஷயங்களைக் காட்டி பயத்தை உருவாக்குகின்றோம். அடுத்து வெளியில் மற்றவர்கள் பயமுறுத்துவது, கனவில் வரும் பயம் போல் உள்ளுணர்வாகவே சில பயங்கள் அவர்களுக்குள் உருவாகும். மேலும் திடீரென்று எழும்பும் அதீத சத்தம் கூட ஒருவித பயத்தை உண்டாக்கலாம். நெருங்கியவர்களை பிரிந்திருக்கும் போது பாதுகாப்பற்ற உணர்வு பயத்தை ஏற்படுத்தும். இதெல்லாம் குழந்தைகள் வாழ்வில் அன்றாடம் இயல்பாக உருவாகும் பயங்கள். குழந்தைகளின் பயத்தை தூண்டுவதும், பயத்தை நாம் சரியாக கையாளாமல் விடுவது இரண்டுமே பிரச்சனை தான்.
குழந்தைகளின் பயங்களை எப்படி கையாளலாம் ?
எதற்கெல்லாம் பயப்படுகிறார்கள் இருட்டு
குழந்தைகள் நினைப்பது – அவர்களைப் பொறுத்த வரையில் இருட்டில் எதுவும் பார்க்க முடியாததால் பாதுகாப்பில்லாததது போல் உணர்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு இருட்டு என்றால் பயமாக இருக்கிறது.
எப்படி உதவலாம் – ஆரம்பத்திலிருந்தே இருட்டை பயம் காட்டி அவர்களுடன் பேசவே கூடாது. பகல் எப்படி வெளிச்சத்தை தருகிறதோ அதே போல் இரவு என்பது இருட்டை தருகின்றது என்ற யதார்த்தம் புரிய வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டில் இருட்டில் எப்படி லைட்டை போடுவது என்பதை சொல்லிக் கொடுக்கலாம். நேரம் ஆக ஆக ஒலியின் அளவை குழந்தைகளை வைத்துக் குறைக்க வைக்கலாம். உதாரணத்திற்கு இரவு தூங்கும் அறையில் டியுப் லைட்டிலிருந்து சின்ன பல்புக்கு மாற்றி எரியவிடலாம். குழந்தைகள் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் என்பதை பெட்- டைம் கதைகள், விளையாட்டுகள் மூலம் அவர்களுக்கு புரிய வைக்கலாம். இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக பழக இரவு நேரங்களில் குழந்தைகளுடன் இரவில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பேசி கொண்டு மெதுவாக நடக்கலாம் (நைட் வாக்).
பேய், பூதம்
குழந்தைகள் நினைப்பது - பொதுவாக குழந்தைகளுக்கு பேய் பூதம் பற்றிய கற்பனை அதிகமாகவே இருக்கும். தன் படுக்கைக்குக் கீழ் ஏதும் பதுங்கியிருக்குமோ, தன்னை தாக்கி விடுமோ என்ற பயம் தோன்றும்.
எப்படி உதவலாம் – குழந்தைகள் கற்பனை திறன் அதிகம் கொண்டவர்கள். இருட்டான இடங்களில், நிழல்களில், கழிப்பறைக்குள், மேகத்திற்குள் பேய் பூதம் ஒலிந்திருக்கும் என்று கற்பனை செய்து பயந்து கொள்வார்கள். அவர்களின் கற்பனையைத் தூண்டக்கூடிய வகையில் கதைகள், படங்கள், நிகழ்ச்சிகளைக் காட்டுவதை தவிர்க்கலாம். மகிழ்ச்சியான, பாசிட்டிவ்வான எண்ணங்களை வளர்க்க கூடிய கதைகளைக் கூறலாம். மேலும் அவர்களைத் திசை திருப்ப சில உத்திகளைக் கையாளலாம்.
உதராணதிற்கு வீட்டின் அறை முழுக்க தண்ணீர் ஸ்ப்ரே அடித்தால் பூதம் மறைந்து விடும். பேய் பூதம் உள்ளே வராதே மாதிரியான வாசகங்களை போஸ்டர்ஸ் செய்து சுவற்றில் ஒட்டலாம். இது அவர்களுக்குள் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மன தைரியத்தை தரும். இதெல்லாம் கற்பனை என்று விவரம் தெரியும் போது அவர்களாகவே புரிந்து கொள்வார்கள். ஆனால் நாமும் பேய் பூதம் பற்றிய பயத்தை உண்டாக்கும் வாசகங்களை பயன்படுத்தக் கூடாது.
அந்நியர்கள்
குழந்தைகள் நினைப்பது – குழந்தைகள் தனக்கு பரிட்சயம் இல்லாதவர்களை அந்நியர்களாக பார்க்கிறார்கள். அவர்களின் பார்வையில் “நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது? என்னிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரியாது? அதனால் நான் அம்மாவிடம் நெருக்கமாக இருந்து கொள்கிறேன்” என்பது போன்ற எண்ணங்களே தோன்றும்.
எப்படி உதவலாம் – குழந்தைகள் பல காரணங்களுக்காக சிலருடன் சேராமல் இருப்பார்கள். முதன் முதலில் ஒருவரை பார்க்கும் போது இவர்கள் யார்? நம்மிடம் ஏன் பேசுகிறார்கள்? என்ற ஒருவித பாதுகாப்பில்லாத உணர்வு குழந்தைகளுக்குள் ஏற்படும். சில குழந்தைகள் சீக்கிரமாக சேர்ந்து கொள்வார்கள். சில குழந்தைகளுக்கு கொஞ்சம் அவகாசம் எடுக்கும். நமக்கு தெரியும் அவர்கள் நம் குழந்தையை அன்போடு பார்த்துக் கொள்வார்கள் என்று. ஆனால் நமக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் அந்தக் குழந்தையின் பார்வையில் அந்நியர்களாகவே தெரிவார்கள்.
நமக்கு நெருக்கமானவர்களின் நடத்தை குழந்தைக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதை புரிந்து கொள்ளாமல் அவர்களுடன் குழந்தையைக் கட்டாயப்படுத்தி சேர முயற்சி செய்வது குழந்தையின் மனதில் பயம், கோபம், எரிச்சல், பதட்டம் போன்ற பாதுகாப்பின்மையை உண்டாக்கும். குழந்தைக்குப் பிடித்த விளையாட்டை நம் உறவினர், நண்பர்களிடம் கூறி அவர்களோடு சேர்ந்து விளையாட வைத்துப் பிணைப்பை ஏற்படுத்தலாம். அல்லது குழந்தைக்குப் பிடித்தமான விஷயங்களை செய்ய சொல்லி நெருக்கத்தை அதிகப்படுத்தலாம் . எந்த வகையிலும் யாருடனும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி பழக வைக்க நினைப்பது என்றுமே தவறான அணுகுமுறையே.
பிரிவுகள்
குழந்தைகள் நினைப்பது – ஆங்கிலத்தில் separation anxiety என்று சொல்வார்கள். நெருக்கமானவர்களிடமிருந்து பிரிந்து இருப்பது என்பது அவர்களுக்கு பாதுகாப்பின்மையாக உணர்வார்கள்.
எப்படி உதவலாம் – அம்மா அப்பாவைப் பிரிந்து செல்லும் தருணங்களில் குழந்தைகள் அழுவது சாதரணம் தான். ஆனால் ”போய்ட்டு வரேன், அம்மா சீக்கிரமே வந்து விடுவேன், பக்கத்துல தான் போறேன் வந்துவிடுவேன், Good bye, ஆபீஸ் வேலையா போறேன் இரண்டு நாள்ல வந்துவிடுவேன்” போன்ற வார்த்தைகளை எப்போதும் குழந்தைகளிடம் கூறுவது நம்பிக்கையை உருவாக்கும். இருவரும் வேலைக்குப் போகும் சூழலில் குழந்தையை பராமரிப்பவர்கள் நம்பிக்கையானவரா, குழந்தைக்கு ஏற்றவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த அறைக்கோ, வெளி இடங்களுக்கோ செல்லும் போது திடீரென்று குழந்தைகளை விட்டுப்போகாமல் அவர்களிடம் நம்பிக்கையை வளார்க்கும் விதமாக பேசிவிட்டு போக வேண்டும்.
கனவில் பயம்
குழந்தைகள் நினைப்பது – இரவில் தூங்கும் போது ஏதேதோ பயமுறுத்துகிறது. யாரவது என் அருகில் இருக்க வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் பார்த்த படங்கள், மனிதர்கள், விலங்குகள் குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது பயமுறுத்துவது போல் கனவுகள் தோன்றலாம்.
எப்படி உதவலாம் – குழந்தையின் 18 மாதத்தில் கனவுகள் பயமுறுத்த தொடங்குகிறது. பதினெட்டு மாதத்தில் தொடங்கும் இப்பயங்கர கனவுகள் மூன்று முதல் நான்கு வயது வரையிலான காலகட்டத்தில் மிக அதிகமாகத் தோன்றும். மிகப் பெரிய பூதமோ அல்லது ஆபத்தை உண்டாக்கும் விலங்குகளோ குழந்தைகளின் கனவில் தோன்றி அவர்களை பயமுறுத்தும். இச்சமயத்தில் பயந்த குழந்தை திடீரென படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும். முகம் கதிகலங்கிப் போயிருக்கும். வீரிட்டுக் கத்தும். மூச்சு விடுதல் ஆழமாக இருக்கும். உடல் வியர்த்துப் போய்விடும். பெற்றோர் எவ்வளவு தேற்றினாலும் குழந்தை ஆறுதலடையாது.
பெற்றோரிடம் நிலவும் சண்டை, மகிழ்ச்சியற்ற குடும்ப நிலை, குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு, கடும் பொருளாதார பிரச்சனைகள் போன்றவையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்கும் கனவுகள் அதிகமாக தோன்றும்.குழந்தைகளுக்கு கனவு வராமல் தடுக்க வழியில்லை. ஆனால் கனவு வருவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை பெற்றோர்கள் நம்மால் குறைக்க முடியும். இந்த நேரத்தில் அவர்களுக்கு தேவை ஆறுதலான வார்த்தைகளும், அரவணைப்பும் தான் நாம் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம் என்ற உணர்வை தரும்.
தனிமை
குழந்தைகள் நினைப்பது – பெற்றோர்கள் அருகில் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்கிறார்கள். அவர்களை தனியாக விட்டு செல்லும் போது தனிமை பயமுறுத்துகிறது.
எப்படி உதவலாம் – கண்ணாமூச்சி அல்லது peek – a- boo போன்ற விளையாட்டுகள் குழந்தைகளுக்கு தனிமையை பழக்க உதவும். முதன் முதலில் குழந்தைக்கு தனிமையை பழக்கும் போது வீட்டின் ஒரு அறையில் மற்றோரு பகுதியில் நம்முடைய குரல் கேட்கும் தூரத்திலிருந்து அவர்களது நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். மற்றும் முதன் முதலில் குழந்தையை தனியாக விடும் அவகாசம் குறைவானதாக இருக்க வேண்டும் (30 விநாடிகள்). அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரிக்கலாம். எக்காரணம் கொண்டும் பாதுகாப்பில்லாத இடத்தில் சிறிது நேரம் கூட தனிமையில் விடாமல் இருப்பது நல்லது. நமக்கு எவ்வளவு முக்கியமான வேலையோ, பிரச்சனையோ இருந்தாலும் குழந்தைகளின் போக்கில் மட்டுமே அவர்களை தனியாக இருக்க பழக்குவது நல்லது.
மருத்துவர் மற்றும் ஆசிரியர்
குழந்தைகள் நினைப்பது – குழந்தைகளை சமாளிக்க நாம் மருத்துவரை, ஆசிரியரை, சக மனிதர்களை பூச்சாண்டியாக ஆக்கிவிடுகிறோம். அதனால் அவர்களின் பார்வையில் மருத்துவமனை, பள்ளி ஆகிய இடங்கள் பயமுறுத்தும் இடங்களாக உள்ளது. குழந்தைகள் ஏற்கனவே மருந்து ஊசி என்றால் பீதியடைவார்கள், இதில் நாம் அவர்களிடம் ” நீ சாப்பிடவில்லை என்றால் டாக்டர் ஊசி போட்டுவிடுவார்” என்று மருத்துவரை பயங்கரவாதியாக பிம்பப்படுத்தி வைப்பதால் அவர்களுக்கு பயமுறுத்தும் கதாபாத்திரங்களாக மாறிவிடிகிறார்கள்.
எப்படி உதவலாம் – மருத்துவமனையில் ஊசி போடுவார்கள், பள்ளியில் மிஸ் அடிப்பார்கள் என்பது போல் நாம் உருவாக்கி வைத்ததால் குழந்தைகள் இந்த இடங்களை வலியோடு தொடர்புபடுத்தி பார்த்து பயந்து கொள்கிறார்கள். பள்ளி, மருத்துவமனை போன்ற இடங்களை பற்றி எப்போதும் பாஸிடிவ்வாக பேசவும். மருத்துவமனையாக இருந்தால் குழந்தைகளை நாம் முன்கூட்டியே தயார்படுத்த வேண்டும். அவர்களுடைய நலனுக்காக தான் இந்த இடத்திற்கு வருகிறோம் என்பதை புரிய வைக்க வேண்டும். மேலும் நம்முடன் அவர்கள் ஒத்துழைக்கும் போது அவர்களின் நடத்தையை ஊக்கப்படுத்தி பாராட்டலாம்.
பள்ளி பற்றி மகிழ்ச்சியான விஷயங்களை கூற வேண்டும். பள்ளி அவர்களுக்கு மகிழ்ச்சியை, அறிவை, ஆரோக்கியத்தை தரும் என்கிற மாதிரியான எண்ணங்களை குழந்தைகளிடத்தில் வளார்க்க வேண்டும். மருத்துவமனையில் காத்திருக்கும் போதோ, பள்ளிக்கு செல்லும் போதோ அவர்களுடன் பாடுவது, விளையாடுவது போன்ற செயல்கள் இவர்களை பற்றிய பயத்தை குறைக்க உதவும்.
குழந்தைகளை பயமுறுத்தி நம்மால் காரியத்தை சாதிப்பது எளிதாக தோன்றலாம். ஆனால் அவர்களின் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் நன்மை விளைவிக்காது. அவர்களின் எல்லை விரிய விரிய அறிவு விருத்தியடையும். இந்த மாதிரி விஷயங்களால் அவர்கலின் உலகத்தை நாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க வேண்டாம். பரந்து விரிந்த இந்த உலகத்தின் வசந்தத்தை அவர்கள் அனுபவிக்க வாய்ப்புகளை உருவாக்குவோம்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}