• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

மதிய உணவை சாப்பிட வைப்பதற்கான ஆலோசனைகள்

Radha Shree
3 முதல் 7 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 07, 2018

குழந்தைகள் ஆசையாக விரும்பி உண்ணும் வகையில் மதிய உணவு கட்டி தருவது  (லஞ்ச் பாக்ஸ்-மதிய உணவு பெட்டி) எல்லா தாய்மார்களுக்கும் சவாலான விஷயம் தான்.நம் வீட்டிலேயே உணவு உண்ணாமல் குறும்பு செய்யும் நமது குழந்தைகள் பள்ளியில் எப்படி ஒழுங்காக சாப்பிடுவார்கள்? உணவை  உண்ணுவதை தவிர்க்கவே பெரும்பாலும் முயற்சிப்பார்கள். 

குட்டிகளின் இணை பிரியா தோழர்களும் நம் குட்டிகளுக்கு தானே ஆதரவு தருவார்கள்.மேலும் இது போன்ற செயல்களில் அவர்களும் கூட்டு களவாணிகளாகவே இருப்பார்கள். பள்ளிகளில் உணவு இடைவேளை தருணங்களில் நிலைமை இப்படி இருக்க, ஆசிரியர்களாலும் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுகிறார்களா? இல்லையா? என கண்காணித்து கொண்டே இருக்க முடியாது. வீட்டில் நம் கண்ணிலேயே மண்ணை தூவி விட்டு உணவு உண்ணாமல் ஓடி விடும் வாண்டுகள் பள்ளியில் உணவை வீணாக்காமல் உண்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது.

சில குழந்தைகள் உணவு பிடிக்கவில்லை என்றால் டப்பாவை திறந்து பார்த்து விட்டு உணவை தான் உண்ணாமல் அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து விடுவார்கள் அல்லது அம்மாவிற்கு பயந்து வீட்டிற்கு உணவை அப்படியே கொண்டு வருவதை தவிர்த்து குப்பை தொட்டியில் வீசி விடுவார்கள் . ஆனால் இன்னும் சில குழந்தைகளோ ஒரு படி மேலே சென்று  தங்களின் மதிய உணவு இருக்கும் டப்பாவை தொட்டு கூட பார்க்க மாட்டார்கள். எது எப்படியோ, ஒரு அம்மாவிற்கு தெரியாதா என்ன? தன் குழந்தை எப்போது என்ன செய்யும் என்று.

குழந்தைகள் மதிய உணவை உண்ண வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி இன்று சந்தைகளில் விற்கப்படும் எளிதில் சமைத்து கொடுக்க கூடிய துரித உணவுகள் தான் ஆனால் குழந்தையின் உடல் நலத்தில் அக்கறை கொண்டிருக்கும் எந்த ஒரு அம்மாவும் இதை விரும்ப மாட்டார்கள்.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக கொஞ்சம் நேரம் செலவழித்து நம் வீட்டில் சமைக்கும் உணவுகளையே கொஞ்சம் அவர்களுக்கு பிடித்த வகையில் கொடுத்தால் உங்கள் குழந்தைகள் விரும்பி உண்ண தொடங்கி விடுவார்கள்.

குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் உணவு டப்பாக்கள் இருந்தால் மட்டுமே அவர்களை சாப்பிட வைப்பது சற்று எளிதான வேலை இல்லை என்றால் அம்மாக்களுக்கு குட்டிகளை உண்ண வைப்பது குதிரை கொம்பு தான்.

குழந்தைகள் உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் நன்றாக உண்ண வேண்டும் குழந்தைகள் சரியாக சாப்பிட வேண்டும் என்றால் அவர்களுக்கு பிடித்த முறையில் உணவின் சுவையும்,உணவு டப்பாக்களும் இருக்க வேண்டும். நம் குழந்தைகளுக்காக நேரம் செலவழித்து பிடித்ததை செய்து கொடுப்பது ஒவ்வொரு அம்மாக்களின் கடமையும் கூட.

குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பு முறைகள் பல இருந்தாலும், அதை எப்படி, எந்த முறையில் கொடுத்தால் அவர்களை உண்ண வைக்கலாம் என்பதில் தான் அத்தனை சூட்சமங்களும் அடங்கி உள்ளது.

குழந்தைகளுக்கு உணவை பிடித்த முறையில் கொடுத்து அசத்துவதற்கான சில யோசனைகளை பார்க்கலாம் :

1. உங்கள் குழந்தை பள்ளியில் மதிய உணவை வீணாக்காமல் உண்ண வேண்டும் என்றால் உணவின் சுவையில் சற்று மாற்றம் செய்யுங்கள்.சில குழந்தைகளுக்கு இனிப்பான உணவுகள் மிக பிடிக்கும் சில குழந்தைகளோ காரமான உணவை விரும்பி உண்பார்கள் இன்னும் சில குழந்தைகளுக்கு புளிப்பு தூக்கலான உணவை தேடி தேடி உண்பார்கள்.

2. உங்கள் குழந்தைகள் விரும்பும் சுவையில் உணவை தயாரியுங்கள் எடுத்துக்காட்டாக, இட்லியை மதிய உணவாக பறிமாறினால் இனிப்பை விரும்பும் குழந்தைகளுக்கு வெல்லம் கலந்த இனிப்பு இட்லிகளையும் ,காரமான உணவை கண்டவுடன் கப கப பசி என சொல்லும் குழந்தைகளுக்கு இட்லி பொடி போட்டு தயாரான இட்லிகளையும், புளிப்பை தேடி செல்லும் குழந்தைகளுக்கு புதினாவுடன் சமையல் புளியோ இல்லை எனில் மாங்காய் கலந்த புதினா,மல்லி சட்னிகளை இட்லிகளுக்கு தொட்டு சாப்பிட பறிமாறவும்.

3. அடுத்ததாக,  உங்கள் குழந்தைகள் உண்ணும் உணவின் வடிவங்களில் மாற்றம் செய்யுங்கள்.உதாரணமாக, எப்போதும் வட்ட வடிவிலான தோசைகளே தயார் செய்வதற்கு பதிலாக முக்கோண வடிவில் இதய வடிவில் எந்த வடிவம் உங்கள் குழந்தைக்கு பிடிக்கிறதோ அதற்கு ஏற்றவாறு உணவை பரிமாறவும்.

4. வண்ணங்கள் நம் கவனத்தை ஈர்க்க வல்லவை. அதனால் தான் பெரிய உணவு விடுதிகளில் கண் கவரும் வண்ணங்களில் உணவுகளும் ,வேலைப்பாடுகளும் உள்ளன. குறிப்பாக, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் பார்ப்போரை சிறிது நேரம் உற்று நோக்க செய்யும்.ஆகவே, குழந்தைகள் விரும்பும் வண்ணங்களில் உணவை பரிமாறவும்.

5. குழந்தைகளுக்கு உணவை அப்படியே கொடுக்காமல் கொஞ்சம் அழகுபடுத்தி கொடுத்தால் ஆனந்தமாக உண்பார்கள்.குழந்தைகள் உண்ணும் உணவுகளில் கேரட்,வெங்காயம்,மல்லி,தக்காளி துருவல்களை சேர்த்து அழகு படுத்தலாம்.

6. குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் எது? என்பதை தெரிந்து அந்த வண்ணத்தில் மதிய உணவு டப்பாக்களை வாங்கவும்.ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும் எனவே உங்கள் குழந்தைக்கு பிடித்த வண்ணத்தில் டப்பாக்கள் வாங்கவும்.

7.சாதம்,குழம்பு,கூட்டு அனைத்தையும் ஒரே டப்பாவில் வைக்காமல் தனி தனி டப்பாக்களில் வைக்கலாம். இதனால்,  குழந்தைகள் உணவை எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும்.மேலும் இது உணவு விரைவில் கெட்டுப் போவதை தடுக்க உதவும்.

8. ஒரே வகையான உணவை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்காமல் சற்று வித்தியாசமாக கொடுக்கலாம்.எப்போதும் சாதம் மட்டுமே கொடுக்காமல் சில சமயங்களில் பலகாரங்கள் கொடுக்கலாம்.

9. குழந்தைகளை கவரும் வகையில் உணவுக்கு பெயர் சூட்டுங்கள்.காய்கறி கலவை சாதத்திற்கு பதிலாக காய்கறி பிரைடு ரைஸ்,காளான் பிரைடு ரைஸ் மற்றும் இட்லிக்கு பதிலாக இட்லி பொடி மாஸ் இது போன்ற பல வித்தியாசமான பெயர் சொல்லி அழைக்கலாம்.

10. குழந்தைகளுக்கு பள்ளி இடைவேளைகளில் உண்ண அவர்களுக்கு பிடித்த பழங்களோடு அவர்கள் ஒதுக்கும் பழங்களையும் வெட்டி கலந்து வைப்பதனால் நாளடைவில் அவர்களுக்கு பிடிக்காத பழங்களின் சுவையும் பிடிக்க தொடங்கி விடும்.

11. பழங்கள் உண்ணாத குழந்தைகளுக்கு பழச்சாறு அருந்த கொடுக்கலாம்.

12. சில குழந்தைகளுக்கு உணவு சூடாக இருந்தால் தான் சாப்பிடுவர் இன்னும் சில குழந்தைகளோ உணவு ஆறி இருந்தால் தான் உண்பார்கள். உங்கள் குழந்தைக்கு ஏற்ற வகையில் உணவு தயாரித்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம்.

13. குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் கதபாத்திரங்கள் வடிவிலான டப்பாக்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதால் அவர்கள் உணவு உண்பதை தவிர்க்காமல் சரியான நேரத்தில் சாப்பிடுவார்கள்.

14. குழந்தைகள் பள்ளிக்கு எடுத்து செல்லும் உணவு டப்பாக்கள் வைக்கும் பைகளையும் வண்ணமயமான விதத்தில் வாங்கி கொடுக்கலாம்.இதனால் குழந்தைகள் மறக்காமல் தங்கள் பையை பள்ளிக்கு எடுத்து செல்வார்கள்.

15. குழந்தைகளுக்கு உணவு இடைவேளைக்கு பிறகு தேவையானதை குறிப்பு கடிதங்களாக எழுதி உணவு இருக்கும் பைகளில் வைக்கலாம். எடுத்துக்காட்டாக, உணவு இடைவேளைக்கு பிறகு உனக்கு கணினி பயிற்சிக்கான  வகுப்பு,ஓவிய பயிற்சிக்கான வகுப்பு அதற்கு தேவையான பொருள்களை எடுத்து வைத்து கொண்டு தயாராகவும் எனவும் குழந்தைகளுக்கு தேர்வு என்றால் விரைவில் உணவு உண்டு விட்டு தேர்விற்கு படிக்கவும் எனவும் எழுதி வைக்கலாம்.இது குழந்தைகளுக்கு உணவின் மீதான  ஆர்வத்தை அதிகரிக்கும்.

இதை எல்லாம் தாண்டி குழந்தைகள் ஒழுங்காக உணவை வீணாக்காமல் உண்டால் அவர்களின் உணவு டப்பாவை திறந்து பார்த்து விட்டு அவர்களை கட்டி அணைத்து பாராட்டலாம் அல்லது சிறு சிறு பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தலாம். இவை அனைத்தும் உங்கள் குழந்தைகளின் உணவு உண்ணும் நடவடிக்கைகளில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர பயன்படும்.

  • 2
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Mar 18, 2019

நன்றி

  • அறிக்கை

| Mar 17, 2019

en makal 1. 5 age aguthu. yanna food koduthalum thottu kuda paka matinguthu.

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Tools

Trying to conceive? Track your most fertile days here!

Ovulation Calculator

Are you pregnant? Track your pregnancy weeks here!

Duedate Calculator
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}