• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை சிறப்பு தேவைகளை

மாற்று திறனாளி குழந்தைகளை கையாளும் 10 வழிகள்

Radha Shree
3 முதல் 7 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 04, 2018

 10

குழந்தைகள் மாற்று திறனாளியாக இருப்பதற்கான அறிகுறிகளை முதன் முதலில் பெற்றோர்கள் கண்டறியும் போது அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நீங்கள் உங்கள் மனநிலையையும், சூழலையும் அதற்காக தயார் செய்ய வேண்டிய நேரம் இது தான். உங்கள் குழந்தைக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நீங்கள் திட்டமிட வேண்டும். அற்புதமான பெற்றோராக, சிறந்த ஆதரவாலராக, ஊக்கமூட்டும் ஆசிரியராக நீங்கள் உங்கள் குழந்தைக்கு உதவுவதற்கான வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.   

சிறப்பாக கையாள்வதற்கான 10 வழிகள்

சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளவும்  – முதலில் குழந்தைகளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதை ஏற்றுக் கொள்ளவும். இவர்களை கையாள்வது பற்றி நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் எதிர்மறையான கதைகளை கேட்டு குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ளாதீர்கள்.

  • எந்த இடத்திலும் அவர்களை வளர்ப்பதை, கையாள்வதை தியாகப்பார்வையில் பார்ப்பதை தவிர்க்கவும். இது தொடர்பான கவலைகளும், குழந்தையின் எதிர்காலத்தை பற்றிய குழப்பமும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு தயாராக்குவது மற்றும் அவர்களை சுயமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதே இதை விட மிகப்பெரிய பொறுப்பு.

மற்றவர்களோடு பழக வாய்ப்பு கொடுக்கவும் – மகிழ்ச்சியான, நம்பிக்கையான அணுகுமுறையில் மாற்று திறனாளிகளை வளர்த்த பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்கலாம். உங்களால் கையாள முடியாத விஷயங்களுக்கான வழிமுறைகள் இதன் மூலம் கிடைக்கலாம். அவர்களின் பிள்ளைகளோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும். அவர்கள் தங்களின் குழந்தை பருவத்தில் நடந்த சுவாரஸ்யமான மற்றும் இனிமையான அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். இது எனக்கு மட்டும் நடப்பதில்லை, என்னை போல் மற்றவர்களும் இருக்கிறார்கள் அதுவும் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள் என்பதை பிள்ளைகள் உணர்வார்கள்.

பிள்ளையின் குறைப்பாட்டை பற்றி ஆராயுங்கள் –  உங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் குறைப்பாட்டை பற்றிய தவகல்களை தெரிந்து கொள்ளவும். இதன் மூலம் அவர்களை நன்கு புரிந்து கொள்ள முடியும். மற்றும் குழந்தை எதிர்கொள்ள போகும் பல்வேறு சவால்களுக்கு நீங்களும் உங்கள் பிள்ளையும் தயாராக முடியும். தகவலை பெறுவதன் மூலம் அவர்கள் வாழ்வில் நடப்பவற்றை எளிதாக புரிந்து கொள்ள உதவும்.

சரியான மருத்துவரை/ நிபுணரை கண்டறியவும் – உங்கள் பிள்ளைகளுக்கான சரியான மருத்துவரை அதாவது பிள்ளைகளிடம் நேர்மறையான அணுகுமுறை கொண்டவர்களின் ஆலோசனைகளை கேளுங்கள். இதன் மூலம் குழந்தைகளின் சவால்களை எதிர்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். ஏன்னென்றால் ஒரு நல்ல நிபுணர் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நம்பகத்தன்மையை உருவாக்குவபராக இருப்பார்.

உங்கள் குழந்தையின் வளர்ச்சி வேகத்தை ஏற்றுக் கொள்ளவும் – உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளவும். குழந்தைகளிடம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளவும். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது. மற்ற குழந்தைகளோடு இவர்களது வளர்ச்சியை ஒப்பிட்டு கவலைப்படுவதில் எந்த நன்மையும் இல்லை. அவர்களின் சின்ன சின்ன முன்னேற்றத்தையும், வெற்றியையும் பாராட்டுங்கள். பெருமை கொள்ளுங்கள். பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

திறமையை வளர்க்க உதவ வேண்டும் – உங்கள் குழந்தை மீது அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். நீங்கள் பேசும் போது அதை அவர்களை உணர வைப்பது கடினமாக இருந்தாலும் நிறுத்திவிடாதீர்கள். அவர்களின் செயல்களை வைத்து அனுமானித்து தொடர்ந்து அவர்களோடு பேசுங்கள், விளையாடுங்கள், கதை சொல்லுங்கள், பாட்டு பாடுங்கள், நிச்சயமாக ஒருநாள் அவர்களின் திறமையை நீங்கள் கண்டுணர முடியும்.

  • தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் உடல்மொழியை வைத்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அன்றாடம் குழந்தைகளிடம் கேட்கக்கூடிய கேள்விகளை இயல்பாக அவர்களிடம் கேளுங்கள், ‘உன் நண்பர்களோடு விளையாட விரும்புகிறாயா?’ அவர்களிடமிருந்து சிறு அசைவோ, புன்னகையோ வந்தால் அதுவே உங்களுக்கு பதில்.

எல்லைகளை வகுத்துக் கொடுங்கள் -  உங்கள் பிள்ளைகள் நாளை பள்ளியிலோ, சமூகத்திலோ இணைவதற்கு சில எல்லைகளை தெரிந்து கொள்வது அவசியம். அவர்கள் மீது அதீத கருணை காண்பிப்பது மூலம் தனித்து வாழ்வதோடு, தாழ்வாகவும் எண்ணத் தொடங்கி விடுவார்கள்.

  • உங்கள் பிள்ளைகளால் பின்பற்றக்கூடிய சில விஷயங்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களின் சமூகத்திறன்கள் வளரும். தள்ளிவிடக் கூடாது, முரட்டுத்தனமாக கையாளக்கூடாது போன்ற விஷயங்கள் மூலம் ’நோ’ என்பதன் அர்த்தம் புரியும். மற்றும் உங்கள் குழந்தையிடம் பழகுவதற்கும் சில எல்லைகளை பெரியவர்களுக்கும் வகுத்துக்கொடுக்கவும். இதன் மூலம் உங்கள் குழந்தையை  மற்றவர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். பாலியல் ரீதியான சீண்டல்களிலிருந்தும் பாதுகாக்க முடியும்.

வளர்ச்சிகேற்ற பாடங்கள் கற்றுக்கொடுங்கள் – ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு விதமான கற்றல் நிகழும். உங்கள் குழந்தையின் வளர்ச்சி நிலைகளை பொறுத்து அதற்கேற்றவாறு பாடங்களை கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலம் உங்கள் குழந்தைகளின் தனித்திறனை அடையாளம் காணமுடியும். இந்த வயதில் சககுழந்தைகளின் தனித்திறன்களோடு ஒப்பிடாமல் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை புரிந்து கொண்டு அடுத்த நிலைக்கு தயார்படுத்துவதே சிறந்தது,

தனிப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க உத்திகள் தேவை – குழந்தைகளின் தனிப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் உத்திகளை கற்றுக் கொடுக்கவும். உதாரணத்திற்கு, அவர்கள் உணர்வுரீதியாக காயப்படும் போது அதை வெளிப்படுத்த நிச்சயம் ஒரு வடிகால் தேவை. இதனை எதிர்கொள்ளும் சக பெற்றோர்கள், மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவுவார்கள். குழந்தைக்காக உங்கள் மூளையை கசக்கிப் பிழிந்தாவது சில உத்திகளை கண்டுபிடியுங்கள்.

உங்கள் உள்ளுணர்வை நம்பவும் – சில நேரங்களில் நம்முடைய உள்ளுணர்வு சரியான முடிவை எடுக்கும் என்று சொல்வார்கள்.. உங்கள் குழந்தை விஷயத்தில் நீங்கள் தான் சிறந்த நிபுணர். அவர்கள் எதை விரும்புவார்கள், அவர்களை எது காயப்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். நிபுணர்கள் கூறுவதில் உங்களுக்கு திருப்தியில்லை என்றால், உங்கள் கருத்துக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றால், விஷயங்களை மறைப்பவராக இருந்தால், உங்களை அவமதிப்பவராக இருந்தால் அவர் உங்கள் குழந்தைக்கேற்ற சிறந்த நிபுணர் இல்லை.

மேற்கண்ட அனைத்து விஷயங்களுக்கும் பின் அன்பே பிரதானம் – உங்கள் குழந்தைகளுக்கு பல சவால்களும், பலவீனங்களும் இருக்கலாம். அதன் கூடவே அவர்களிடம் அன்பும், திறமையும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நீங்கள் செய்யும் இந்த அனைத்து விஷயங்களும் உங்கள் குழந்தை இந்த உலகை நேசிக்க வழிவகுக்கும்.

மாற்று திறனாளி குழந்தைகளை வளர்ப்பது என்பது எளிதான விஷயமில்லை. அதற்காக நீங்கள் எதிர்கொள்ளும் சவாலும் போராட்டமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதனால் தான் தங்கள் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு இருந்தாலும் பெற்றோர் வைத்திருக்கும் அன்பிற்கு குறையே இருக்காது. அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். இவர்களை போல் உள்ள மனிதர்களால் தான் இந்த பூமி இன்னும் அழகாக தோன்றுகிறது.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Trying to conceive? Track your most fertile days here!

Ovulation Days Calculator
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}