• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைகளுக்கான சத்தான சுவையான ஹெல்தி ஸ்நாக்ஸ்

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Aug 26, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் குதூகலத்திற்கு பஞ்சம் இருக்காது. அதே நேரத்தில் குழந்தைகளிடம் குறும்புகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளை சமாளிப்பது தான் அம்மாக்களுக்கு மிக பெரிய சவாலே. அதிலும் உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் என்றால் அம்மாவிற்கு வேலை இரட்டிப்பு ஆகி விடும்.எப்படி என்று யோசிக்கிறீர்களா ? முதல் வேலை குழந்தைகளை உணவு உண்ண அமர வைப்பது இரண்டாவது வேலை குழந்தைகளுக்கு பிடித்த முறையில் உணவு சமைத்து பரிமாறுவது.

இரண்டுமே இரண்டாம் உலகப் போர் நடத்துவது போல கொஞ்சம் கடினமான வேலைகள் தான் இருப்பினும் எல்லா தாய்மார்களும் இதை விரும்பியே செய்வர் ஏனென்றால் குழந்தையை அதன் அம்மா போல யாராலும் நேசிக்கவும் முடியாது கவனித்துக் கொள்ளவும் முடியாது. அம்மாக்களுக்கு குழந்தைகள் நலனில் அக்கறை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் காரணம் அந்த குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றது அன்னை அல்லவா.

குழந்தைகளை உணவு சாப்பிட வைப்பதே தனி கலை தான் ஆனால் பிரச்சனை என்னவென்றால் எந்த கலையையும் விரைவில் கற்று கொள்ளலாம் போலும் ஆனால் இந்த காலத்தில்  குழந்தைகளை நம் வழிக்கு வர வைப்பதும் அவர்களை உணவு உண்ண வைப்பதும் தான் கடுமையான கலையாக உள்ளது. குட்டி கரணம் போட்டாலும் இந்த கலைகளை கற்க முடியவில்லை என்பதே பல அன்னையர்களின் புலம்பலாக உள்ளது.

முன்பெல்லாம் பாட்டி,தாத்தா வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு சத்தான உணவுகள் எது? என்று நன்றாக தெரியும். மேலும் அவர்களிடம் குழந்தைகள் நன்றாக ஒட்டி கொள்வர்.பாட்டி,தாத்தாவும் குழந்தைகளுக்கு கதைகள் பல சொல்லி சாப்பிட வைத்து விடுவார்கள். ஆனால் இப்போதோ, நிலைமை தலைகீழாக உள்ளது மாறி வரும் அவசர உலகில் ஒரு வீட்டில் அம்மா, அப்பா இருவருமே வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர்.

உங்கள் பிள்ளைக்கு ஊட்டச்சத்து நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் செய்முறை

குட்டி குழந்தைகள் தான் உணவு உண்ண அடம் பிடிக்கிறார்கள் என்றால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் அவர்களுக்கு ஈடாக உணவு உண்ண குறும்பு செய்கிறார்கள். காலையில் குழந்தைகளை எழுப்பி  பள்ளிக்கு தயார் செய்து அனுப்பவது கண்ணை கட்டும் காரியம் என்றால் காலையில் அவர்களை உணவு உண்ண வைப்பது, இதை படிக்கும் போதே அம்மாக்களுக்கு சற்று தலை சுற்றுகிறது அல்லவா.

காலையில் தான் பள்ளிக்கு நேரமாகி விட்டது என குழந்தைகள் உணவு உண்ணாமல் தப்பித்து விடுகிறார்கள் என்றால் மாலையில் பள்ளி முடிந்து வந்தவுடன்  நடன பயிற்சி, ஓவிய பயிற்சி, தற்காப்பு கலை பயிற்சி என வரிசையாக வகுப்புகளுக்கு ஓட்டம் எடுக்கிறார்கள். சரி, விடுமுறை நாட்களிலாவது உணவு உண்கிறார்களா? அதுவும் இல்லை. காலையில் சூரியன் வானத்தின் உச்சி வந்தாலும் எழாமல், மாலையில் நிலவே மறைந்தாலும் வீடு திரும்பாமல் வீதிகளில் விளையாடி கொண்டு இருப்பார்கள்.

அவர்களையும் எதுவும் சொல்ல முடியாது .பாவம் அந்த ஒரு நாள் தான் அவர்களுக்கும் ஓய்வு. இப்போது எல்லா அம்மாக்கள் மனதிலும் ஒரு கேள்வி பிறக்கும். எப்போது தான் என் குழந்தை சரியாக சாப்பிடும் என்று. குழந்தைகளை மயக்கும் அந்த மந்திரம் தான் என்ன? உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது மாயமும் அல்ல மந்திரமும் அல்ல.

குழந்தைகளை மாற்றி உணவு உண்ண செய்யும் முறையை விட உணவு வகைகளை  மாற்றம் செய்வதே அந்த மந்திரம்.

எளிதில் கிடைக்கும் அவல்,நடக்கடலை,கீரை,எள்,பொட்டுக்கடலை என அனைத்திலும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. இது போன்ற எளிய பொருட்களை வைத்து எப்படி சுவையான சிற்றுண்டி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

1. கீரை கட்லெட்:

ரெசிபி பொருட்கள் :

 1. உருளைக்கிழங்கு - 4
 2. பசலைக்கீரை - 1 கட்டு
 3. பச்சை மிளகாய் - 2
 4. இஞ்சி - 1 துண்டு
 5. பூண்டு - 2 பல் (சீவியது)
 6. சீஸ் - அரைகப் ( துருவியது )
 7. மைதா அல்லது பிரட் தூள்  - கால் கப்
 8. சோளமாவு (கார்ன்ஃப்ளார் ) - கால் கப்
 9. எலுமிச்சை பழச்சாறு - 1 தேக்கரண்டி அளவு
 10. உப்பு &எண்ணெய் - தேவையான அளவு

எப்படி தயாரிப்பது:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து கட்டிகள் இல்லாமல் மசித்து கொள்ளுங்கள்.கீரையுடன் இஞ்சி,பூண்டு, மிளகாய் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.இதனுடன் மைதா அல்லது பிரட் தூளை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர், சோளமாவு  (கார்ன்ஃப்ளார் ) மாவை நீரில் கரைத்து கொள்ளவும். ஏற்கனவே தயாரித்த உருளைக்கிழங்கு கலவையை தேவையான அளவில் எடுத்து வேண்டிய வடிவத்தில் கட்லட் போல செய்து கார்ன்ஃப்ளார் மாவில் முக்கி எடுத்து பிரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

அவ்வளவு தான் சூடான சுவையான மாலை வேளைக்கான சிற்றுண்டி தயார். கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். கண் பார்வை மேம்பட உதவும்.

2. உலர் பழ லட்டு:

ரெசிபி பொருட்கள் :

 1. பேரீச்சம் பழம் - 20 (கொட்டை நீக்கியது)
 2. பாதாம் &முந்திரி - 15
 3. அக்ரூட்- 2 தேக்கரண்டி அளவு
 4. தேங்காய் துருவல் - தேவையான அளவு

எப்படி தயாரிப்பது :

பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, போன்றவற்றை அக்ரூட் உடன் பொடியாக நறுக்கி சிறு உருண்டைகளாக உருட்டி தேங்காய் துருவலில் புரட்டி எடுத்து பரிமாறவும்.

உலர்பழங்களில் நிறைந்து இருக்கும் கொழுப்பு சத்தும்,இரும்பு சத்தும் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

இது பள்ளி இடைவெளிகளிலோ படிக்கும் போதோ குழந்தைகள் சுறுசுறுப்பாக உணர உணவாக கொடுக்கலாம்.

பிறகு என்ன உங்கள் குழந்தை படிப்பில் படு சுட்டியாக மாறி விடுவர்.

3. புதினா சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

 1. கோதுமை மாவு - இரண்டு  கப்
 2. வேகவைத்த பட்டாணி - அரை கப்
 3. புதினா&மல்லி தழை - இரண்டு கட்டு
 4. பச்சை மிளகாய் - இரண்டு
 5. நெய் - ஒரு தேக்கரண்டி அளவு
 6. உப்பு - தேவையான அளவு
 7. கரம் மசாலா & சீரக தூள் - அரை தேக்கரண்டி அளவு

எப்படி தயாரிப்பது :

புதினா , மல்லி தழை,  பச்சை மிளகாய் மூன்றையும் மிருதுவாக அரைத்து கொள்ளுங்கள்.இந்த கலவையுடன் கோதுமை மாவு, சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவை உருண்டைகளாக உருட்டி சிறிய சப்பாத்திகளாக செய்து தோசைக்கல்லில் நெய் அல்லது வெண்ணெய் இட்டு சுட்டு பரிமாறவும். இதற்கு பதிலாக கேரட் சேர்த்து சப்பாத்தி செய்தால் ஆரஞ்சு வண்ண சப்பாத்தி தயார்.

பச்சை,ஆரஞ்சு வண்ண சப்பாத்திகளை பார்த்தால் குழந்தைகள் காலை உணவை தவிர்க்க மாட்டார்கள்.இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

4. சத்து மாவு கஞ்சி :

தேவையான பொருட்கள்:

 1. புழுங்கலரிசி - 100 கிராம்
 2. புட்டரிசி - 100 கிராம்
 3. பொட்டுக்கடலை - 100 கிராம்
 4. உளுத்தம்பருப்பு - 100 கிராம்
 5. ஜவ்வரிசி - 50 கிராம்
 6. பாசிப்பயறு - 100 கிராம்
 7. கொள்ளு - 50 கிராம்
 8. ராகி - 200 கிராம்
 9. கம்பு - 100 கிராம்
 10. வெள்ளை சோளம் - 100 கிராம்
 11. மக்காச்சோளம் - 100 கிராம்
 12. வெள்ளை சோயா - 100 கிராம்
 13. பார்லி - 100 கிராம்
 14. பாதாம்&முந்திரி  - 50 கிராம்
 15. வேர்க்கடலை - 100 கிராம்
 16. சம்பா கோதுமை - 200 கிராம்
 17. பாசிப்பருப்பு - 100 கிராம்
 18. ஏலக்காய் - 25 கிராம்

எப்படி தயாரிப்பது:

அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, பாதாம், முந்திரி, பார்லி, வேர்க்கடலை, மக்காச்சோளம், ஏலக்காய் தவிர்த்து, மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். மக்காச்சோளத்தை மட்டும் தனியே ஊறவைக்கவும். இரவு முழுவதும் தானியங்கள் ஊறவேண்டும். மறுநாள் காலையில், தண்ணீரை வடித்துவிட்டு, தானியங்களை ஒரு துணியில் கட்டி வைத்துவிடவும். அன்று முழுதும் தானியங்கள் துணியிலேயே இருக்கட்டும். அவ்வப்போது தண்ணீர் தெளித்துவிடுங்கள். அடுத்த நாள் (அதாவது, இரண்டாம் நாள்) பிரித்தால் தானியங்களிலிருந்து நன்கு முளை வந்திருக்கும். அன்று முழுவதும் நிழல் காய்ச்சலாக தானியங்களைக் காயவையுங்கள். நன்கு காய்ந்ததும், அவற்றை வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு, சிறு தீயில் வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும். முதலில் ஊறவைக்காமல் தனியாக எடுத்துவைத்த அரிசி, பொட்டுக்கடலை போன்ற பொருள்களையும் வறுத்து வையுங்கள். பார்லியை வறுக்க வேண்டாம். வறுத்த பொருள்களோடு ஏலக்காய் கலந்து, மெஷினில் கொடுத்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும் (சலிக்கத் தேவையில்லை). சத்துமாவு கஞ்சிக்கு, இந்த மாவிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு கப் பாலில் கட்டியில்லாமல் நன்கு கரைத்து, சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவும். இரண்டு நிமிடங்கள் கொதித்துப் பொங்கியதும், ஆற்றி கொடுங்கள்.

இது மூன்று வயது முதல் முதியவர்கள் வரை அனைவரும் பருக ஏற்றது.

காலையில் சாப்பிட நேரமில்லை என்றாலோ,

விளையாடி விட்டு குழந்தைகள் களைப்பாக வந்தாலோ இந்த பானத்தை பருக கொடுக்கலாம்.இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

5. குறுந்தானிய குட்டி லட்டு:

தேவையான பொருட்கள்:

 1. சத்துமாவு (முன்பு பார்த்த அதே செய்முறை )
 2. சர்க்கரை பொடி - 1 கப்
 3. நெய் - தேவையானஅளவு

எப்படி தயாரிப்பது :

சர்க்கரை பொடியை கட்டிகள் இல்லாமல் சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.இதை சத்து மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.சத்து மாவுடன் சர்க்கரை பொடி சேர்த்து நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக விட்டு உருண்டை பிடித்து கொள்ளவும்.உருண்டை உதிராமல் இருக்கும் பக்குவம் வந்ததும் நெய் விடுவதை நிறுத்தி விட்டு உருண்டை பிடித்து குட்டி லட்டுகளாக உங்கள் குட்டிகளுக்கு பரிமாறவும்.

புரதச்சத்து நிறைந்த இந்த லட்டு குழந்தைகளின் உடல் நலத்திற்கு நல்லது.

உங்கள் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் போது அவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு தயாரியுங்கள். இது போன்ற சத்தான சுவையான உணவுகளை குழந்தைகள் ஒதுக்காமல் விரும்பி உண்பார்கள்.

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Mar 24, 2021

Puthina chappathi, ular pala lattu kandippa nan en kulanthaiku seithu kodupen . Suvaium irukum sathum koda thank you for this blog

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}