• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

ஒழுக்கம் போதித்தலும் முன்னுதாராணமாக திகழ்தலும்

Radha Shree
3 முதல் 7 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 25, 2019

ஒரு குழந்தை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய உடன் தன் தாயிடம் வந்து ஒரு பேனாவைக் காண்பித்து அப்பேனா தன் மேஜைக்கு கீழே கிடந்ததாகவும் தான் எடுத்து கொண்டு வந்ததாகவும் கூறுகிறது. தாயானவள், தன் குழந்தையிடம் அப்பேனாவை நாளை பள்ளி சென்றதும் ஆசிரியரிடம் ஒப்படைக்கும் படி கூறுகிறாள். இதைக் கேட்டதும் குழந்தை சோர்வுற்று காணப்படுகிறான். பின் தாய் அவனிடம் ‘பிறர் பொருளை வைத்து கொள்ளுதல் என்பது தவறானது என்றும், தொலைத்தவர் வருத்தப்பட்டு கொண்டிருப்பர்’ என்பது பற்றியும் விளக்கி, தன் பொருள் தொலைந்தால் நமக்கு ஏற்படும் வருத்தம் பற்றியும் கூறி அதனை உணர செய்கிறாள். அதன் பின் தெளிவுற்ற குழந்தையானது உற்சாகத்துடன் மறுநாள் பேனாவை ஒப்படைப்பதாக கூறலானான்.

ஒழுக்கம் மற்றும் அறநெறி ஆனது ஆசிரியர் மற்றும் பெற்றோரால் குழந்தைக்கு போதிக்கப்பட வேண்டும். எது சரி மற்றும் எது தவறு என்பது போதிக்கப்படும் போதே அவர்களால் அறிய முடியும். அறநெறி, ஒழுக்கம் பற்றின புரிதல் மற்றும் சரி,தவறு பற்றின அறிவானது ஒரு குழந்தை வளரும் சுற்றுச்சூழல், உணர்வு,அறிவு,உடல் மற்றும் சமூக ரீதியான திறன்களைச் சார்ந்தது.

தார்மீக மற்றும் ஒழுக்கம் மற்றும் குழந்தைகளுக்கு நன்மைகள் என்ன

உள்நோக்கம், எண்ணங்கள், செயல்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றில் சரி எது, தவறு எது என்பவனவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை அறியும் திறமை ஆகும். குழந்தைகளுக்கு இத்தத்துவத்தை உணர்த்துவது தான் குழந்தை வளர்ப்பில் முதன்மையானது ஆகும்.

விஷயங்களை முன்னுரிமை செய்ய உதவுகிறது

குழந்தைகளுக்கு தேவை அன்பு, கட்டுப்பாடான அமைப்பு ஆகும். குழந்தைகளுக்கு நேரடியாக பார்த்து கற்றுக் கொள்ள ஒருவர் தேவைப்படுகிறார். சொல்லை விட செயலின் தாக்கம் அதிகம். அறிவியல் பாடத்தை கோட்பாடாக கற்பிப்பதைக் காட்டிலும் செயல்முறையாக கற்பிக்கும் போது புரிதலும் முழுமையும் எவ்வாறு கிடைக்குமோ அது போன்றதே ஒழுக்க நெறிகளைப் போதிப்பதைக் காட்டிலும் நாம் அவ்வாறே திகழ்ந்து காட்டுவதே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். சிறு வயதில் விதைக்கப்படும் எவையும் வாழ்நாள் முழுமையும் மாறாது தொடரும் என்பதை நினைவில் கொண்டு நல்லதையே விதைப்போம். நன்மக்களாக நம் குழந்தைகளை வளர்த்து எடுப்போம்.

சிறந்தவர்களாக விளங்குங்கள்

உங்கள் குழந்தைகள், நீங்கள் என்ன பேசுகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என அனைத்தையும் உன்னிப்பாக கவனிப்பார்கள். நீங்கள் பேசும் செயல்கள், வார்த்தைகளை அப்படியே பிரதிபலிப்பார்கள். ஆக எவ்வளவு எளிதாக அவர்களிடையே தாக்கம் ஏற்படுகிறது என்பதை நீங்கள் உணர்ந்து உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகள், பிரச்சனைகள் பல இருப்பினும் குழந்தைக்கு ஏற்ற சரியான சூழலையும், குழந்தைகள் முன்னிலையில் நன்நடத்தையையும் பின்பற்றுங்கள்.

உங்கள் மீது முதலில் அக்கறை செலுத்துங்கள்

நீங்கள் உங்களை நெறிப்படுத்திக் கொள்ளுதல் தான் முதல் கட்ட நடவடிக்கையாகும். சரியான தூக்கம், சரியான வேளையில் உணவு உட்கொள்ளல், உடற்பயிற்சி ஆகியன உங்கள் செயல்திறனை உடல் மற்றும் மன ரீதியாக மேம்படுத்தும். நீங்கள் உங்களை சரியாக வழிநடத்தும் திறமை கொண்டவராக இருக்கும் பட்சத்தில் தான் பிறரை உங்கள் குழந்தைகளை வழி நடத்தும் திறன் பெற்றவராக இருப்பீர்.

விசுவாசமாக இருத்தல்

ஒரு கிளிக்கில் பல நாள் பழகிய நண்பரை தம் பேஸ்புக் வட்டாரத்தில் இருந்து எளிதாக விலக்கி வைக்கும் இக்காலக்கட்டத்தில் உங்கள் குழந்தைக்கு விசுவாசம் பற்றி சொல்லித்தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். உதவி தேவைப்படும் சமயத்தில் நண்பர்க்கு உதவுதல் போன்றவற்றை கற்று கொடுக்க வேண்டும். உங்கள் நல் அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர்ந்து, அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துங்கள்.

கவனம் செலுத்துதல்

குழந்தைகள் வயது அதிகரிக்கும் போது அதிகபட்ச சுதந்திரத்தை எதிர்ப்பார்க்கலாம். உங்கள் மகன்/மகள் தங்களது அறைக்குள் நீங்கள் வருவதை மறுக்கலாம். ஆனால் உங்கள் மகனோ/ மகளோ இவ்வாறு கூறும்போது அவர்களுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்கள் மீதான அக்கறையினால் தான் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள , அவர்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றும் , அது பெற்றோராக உங்களது கடமையென்றும் புரிய வையுங்கள். பெற்றோரைத் தவிர்ப்பது தவறு என்பதையும் அதனை வலியுறுத்தவும் , அதன் விளைவுகளையும் உண்மை நிகழ்வுகள் ஏதும் இருப்பின் எடுத்துக்காட்டுகள் மூலமும் விளக்குங்கள்.

ஆரோக்கியமான அவநம்பிக்கையை வளர்த்தல்

குழந்தைகள் எளிதாக எவரையும் நம்பிவிடுவர் மற்றும் வெளிப்புறத்தில் தங்களுக்கான முன்னுதாரமான மனிதர்களைத் தேடுவார்கள். வாழ்வில் சாதித்தோர், நல்லோரை முன்னுதாரணமாக கொண்டு செயல்படுகிறார்களா? என்பதைப் பெற்றோர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். தவறான மனிதர்கள், நல்லோர் போன்று நடித்து காரியம் சாதிப்பதை அடையாளம் காண கற்று கொடுக்க வேண்டும். உதாரணமாக தரம் குறைந்த பொருளை, கவர்ச்சிகரமான பேச்சால் நல்ல பொருள் என கூறி விற்பனை செய்பவர்கள் போன்றோரை அடையாளம் காண கற்று கொடுத்தல் இக்காலக்கட்டத்தில் மிக அவசியமாகும். அலசி ஆராயாமல் புதியனவற்றை நம்பாதிருக்க பழக்குதல் அவசியமாகும்..

நீங்கள் தவறிழைக்கும் போது அதனை ஒப்பு கொள்ளுங்கள்

நீங்கள் உங்கள் குழந்தையின் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத்துணையிடம் பசியினால், பிற மனஸ்தாபங்களால், அலுவலக பிரச்சனைகளின் வெறுப்பால் தவறி காரணமின்றி கோபப்பட்டீர்கள் என்றால் அதே குழந்தையின் முன்னிலையிலே உங்கள் தவறை ஒப்புக்கொள்வதையும், தவறைச் சரிசெய்யும் விதங்களையும் காட்சிப்படுத்துங்கள். இவை குழந்தைகளிடையே தவறு நேரின் அதனை ஒப்புகொண்டு சரி செய்ய வேண்டும் எனும் நெறியை வளர்க்கும்.

உங்கள் குழந்தை தவறிழைக்கும்போது அதன் விளைவுகளை அழுத்தமாக சொல்ல தவறாதீர்கள்

பெரும்பான்மையான பெற்றோர்கள் , தங்கள் குழந்தை தவறிழைக்கும் போது, அதன் விளைவுகளை பாசத்தின் பேரில் கண்டிப்பதில்லை. இது மிக பெரிய தவறாகும். இப்போக்கு அவர்களை மேலும் அச்சமின்றி தவறிழைக்கத் தூண்டும். அச்சப்பட வேண்டிய விஷயங்களில் அச்சப்பட வேண்டும். தவறிழைத்தலுக்கான அச்சத்தை ஏற்படுத்த தவற கூடாது.

இறுதியாக, பள்ளிப்பருவத்திற்கு முந்தின கால கட்டமான 3-7 வயது குழந்தை பருவமானது, சுற்றுப்புறத்தைக் கவனிக்கும், அதனை பிரதிபலிக்கும், ஒரு செயல் செய்தால் அதன் விளைவு எவ்வாறாக இருக்கும் என்பதனை கிரகிக்கும் தன்மை வளர ஆரம்பிக்கும் பருவம் ஆகும். நல்லதை விதைக்கவும், தீயதை வெறுக்கவும் எதிர்க்கவும் கற்று தருவதற்கான சரியான காலக்கட்டம் ஆகும்.இதனை நன்கு பயன்படுத்தி நம் குழந்தைகளை நல்வழிக்கு இட்டு செல்லுவோம்.

 

  • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Jan 24, 2019

👽👞🌇👽☻🌇👺☻

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}