• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

பழையன கழிதலும், புதியன புகுதலும் - என்ன கற்றுக் கொள்ள வேண்டும்?

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 14, 2019

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

போகி பண்டிகை என்றாலே சிறு பிள்ளையாக இருக்கும் போது கொண்டாடியதை மறக்கவே முடியாது. பெரியவர்கள் போல குழந்தைகளும் தங்களுக்கு பயன்படுத்தாத பொருட்களை கொண்டு வந்து எரிப்பதற்காக நிற்பாங்க. பாட்டு பாடிகிட்டே, கூச்சல் போட்டுகிட்டே பொங்கல் பண்டிகையை வரவேற்க தயாராகி கொண்டிருப்போம்.

போகி கொண்டாட்டம்

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று ’போகி’ கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு ’போக்கி’ என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆடி மாதத்தில் பயிரிடப்பட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி நாளன்று வீட்டிற்கு புதிதாக கொண்டு வருவார்கள். அதாவது பழையன கழிதலும், புதியன புகுதலும் இந்த நாளில் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்தாக முன்னோர்கள் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகின்றது. வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டில் உள்ள பயன்படுத்தப்படாத பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கும் போது திருஷ்டியும் அதனுடன் எரிந்துவிடுவதாக ஐதீகம் கூறுகின்றது.

இந்த முக்கிய நாளில் வீட்டில் உள்ள பயன்படுத்தப்படாத பொருட்களை மட்டும் எரிக்கக்கூடாது. நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை, குணங்களையும் சேர்த்து எரித்து விட வேண்டும். பிறக்கப்போகும் தைத் திருநாளில் புதிய எண்ணங்களுடன் சிறப்பான மனிதனாக உருவெடுக்க வேண்டும் என்பதே இன்று வரையும் இந்த நாளின் எதிர்பார்ப்பாகும். இந்த மகத்தான கருத்தை தான் நானும் கற்றுக் கொள்வதோடு என் குழந்தைக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

பொங்கல் திருநாளுக்கான ஏற்பாடு

பொங்கல் பண்டிகையின் ஆரம்ப கட்ட விழாவே போகி பண்டிகையில் தான் தொடங்குகிறது. அதாவது பொங்கல் திருநாளை வரவேற்க வீட்டு வாசலில் பூ காப்புக் கட்டி பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தை தொடங்குவார்கள்.  இதன் நோக்கம் சுத்தம் செய்த வீட்டில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கிடைப்பதற்காகவும், வீட்டிற்குள் கெட்டது நெருங்காமால் இருப்பதற்காக இதனுடன் மாவிலை, ஆவாரம்பூ, வேம்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கட்டப்படும். மேலும் எதிர்மறையான எண்ணங்களையும், குணங்களையும் நீக்கி இந்த நாளில் அனைவரும் புதுமையாக, ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதே இந்நாளின் சிறப்பு. திருஷ்டி என்பது வெளியிலிருந்து மட்டும் வருவதில்லை, நம் எண்ணங்கள் கூட நாம் வசிக்கும் இடத்தை பாதிக்கும். அதனால் தான் நம் தீய எண்ணங்களையும் சேர்த்து எரிக்க சொல்கிறார்கள்.

போகி கற்றுக் கொடுக்கும் பாடம்

பொங்கலுக்காக வீட்டிற்கு வெள்ளையடித்து, அந்த வருடம் முழுவதும் சேர்ந்த பழைய தேவையில்லாத பொருட்களை மூட்டைக் கட்டி நெருப்பில் போட்டு, வீட்டையே புது வீடாக மாற்றிவிடுவார்கள். பெரியவர்களை பார்த்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். இதை வெறும் பழைய பொருட்களை எரிக்கும் நாளாக மட்டும் குழந்தைகள் கற்றுக் கொண்டுவிட கூடாது. இந்த நாளின் உண்மையான கருத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளுக்கு இந்த நாளை எதற்காக கொண்டாடுகிறோம், இவ்வாறு கொண்டாடுவதற்கான காரணம் என்ன என்பதை அவர்களுக்கு ஒரு கதை போல் சொல்லலாம். எப்படி நம் வீட்டில் தேவையில்லாத பொருட்களை எரிக்கிறோமோ, அதே போல் நம்மிடம் உள்ள தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களையும் சேர்த்தே நீக்கிவிட வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் பிறக்கும் பொங்கல் தைத் திருநாளை புதியவர்களாகவும், ஆனந்தமாகவும் வரவேற்க வேண்டும் என்பதை இந்நாளில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

மாசில்லா போகி

இப்போதெல்லாம் போகி பண்டிகை கொண்டாடுகிறோம் என்று ப்ளாஸ்டிக், டயர் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மேலும் மாசுப்படுத்துகிறோம். போகி பண்டிகையின் நோக்கத்தை மாற்றாமல் இருப்பதை அந்த நாளுக்கான சிறப்பை காப்பாற்றுவதாகும். பொங்கல் என்பதே இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி கூறுவதற்காக தான். அதனால் இந்த நாளில் இயற்கையை பாதுகாக்க வேண்டியதும் நம்முடைய கடமை. சூற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பண்டிகையாக இந்த போகியை கொண்டாடுவோம்.

போகி பண்டிகையின் மூலம் நேர்மறையான எண்ணங்களோடு, மகிழ்ச்சியான மனதோடு புதுமையாய் இந்த அற்புதமான தைத்திருநாளை வரவேற்போம்.

இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்! 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}