பெற்றோராக நான் எடுத்த புத்தாண்டு உறுதிமொழிகள்

பொதுவாக புத்தாண்டுக்கு ஒவ்வொருவரும் விதவிதமான உறுதிமொழிகள் எடுப்பார்கள். குடும்பம், கரியர், ஆர்வம், ஆரோக்கியம், எதிர்காலம் இப்படி தங்களுக்கு தேவையானதை அதுவும் இவ்வளவு நாட்கள் தொடர்ந்து செய்ய முடியாததை உறுதிமொழியாக எடுப்பார்கள். உதாரணத்திற்கு என்னுடைய அண்ணன் அடுத்த வருடமாவது நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார். என் கணவரோ அதிகாலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்ற உறுதிமொழியோடு நிறுத்தி கொண்டார். என் தோழி நிச்சயமாக அடுத்த வருடம் கார் வாங்கியே தீர வேண்டும் என்ரு தீர்மானம் எடுத்திருக்கிறாள். இன்னும் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.
பெற்றோராக சில உறுதிமொழிகள்
அப்போது தான் எனக்கும் ஒரு யோசனை வந்தது, இந்த வருடம் நான் ஒரு பெற்றோராக சில உறுதிமொழிகள் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு பெற்றோராக, அம்மாவாக என்னுடைய குழந்தை வளர்ப்பில் நான் என்னவெல்லாம் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று சிந்தித்தேனோ அதையே இந்த வருட உறுதிமொழியாக்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
உணவு
கடந்த ஒரு வருடம் உடல்நிலை காரணமாக என் மகள் ஆதிரைக்கு சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க முடியவில்லை. ஒரு அம்மாவாக நான் அதிகம் வருத்தப்பட்ட விஷயம் இது. அதனால் இந்த வருடம் அவளுக்கு ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கற்றுக் கொடுக்கலாம் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன். ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி சாக்லேட் வாங்கிவிடுகிறாள். அதனால் வீட்டிலேயே சாக்லேட் செய்து கொடுத்தாலென்ன என்று தோன்றியது. சாலட் வகைகள் மற்றும் சூப்ஸ் வகைகளை என அவளுடைய தினசரி மெனுவில் சேர்க்கப் போகிறேன். திட்டமெல்லாம் நன்றாக தான் இருக்கிறது செயலும் இதே போல் அமைந்துவிட்டால் பிறகென்ன ஹேப்பி தான்.
என்னுடைய கோபத்தை குறைக்க வேண்டும்
எவ்வளவு தான் குழந்தை வளர்ப்பு தொடர்பாக கட்டுரைகள் எழுதினாலும் சில நேரங்களில் என் அறிவுக்கு எட்டிய தகவல்கள் உணர்வுக்கு எட்டுவதில்லை. இதில் குழந்தைகள் மீது தவறேயில்லை என்பதே உண்மை. அவர்களின் உலகம் குதூகலமானது. விளையாட்டு விரும்பிகள். என் மகளுக்கு நாள் முழுவதும் விளையாட சொன்னால் அதைவிட மகிழ்ச்சி வேறெதுவுமில்லை. என்னுடைய உணர்ச்சிகளை கையாள தெரியாமல் குழந்தையிடம் காட்டுவது சரியான அணுகுமுறையில்லை என்று தெரிந்தாலும், சில சந்தர்ப்பங்களில் கோபம் கட்டுப்பாட்டை மீறுகிறது. அதனால் முடிவு செய்துவிட்டேன், என்னுடைய கோபத்தை குறைக்க கண்டிப்பாக நான் உடற்பயிற்சி, தியானம் என்று ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்யப் போகிறேன்.
எனக்காக தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை செய்யப்போகிறேன். இதுவும் என்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த உதவும். யோசித்துப் பாருங்கள் அம்மாக்களாக நாம் நம் குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும் ஒதுக்குகிற நேரத்தில் கால்வாசி பங்கு கூட நம்முடைய சந்தோஷத்திற்காக ஒதுக்குவதில்லை. உங்களுக்கு பிடித்த சின்ன விஷயமாக இருந்தாலும் பராவாயில்லை தினமும் அதற்காக நேரம் ஒதுக்கி செய்து பாருங்கள் கண்டிப்பாக நம்முடைய மனநிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புத்தகம் படிப்பதும், பாட்டு பாடுவதையும் இனி தினமும் செய்வதாக நான் உறுதிமொழி எடுத்துவிட்டேன். நீங்களும் யோசித்து சீக்கிரமே உறுதிமொழி எடுத்து மறக்காமல் அதை பின்பற்றுங்கள்.
கேட்ஜெட் ப்ரீ
பெரும்பாலும் ஆதிரை மிக குறைவாகவே டிவி/மொபைல் பார்க்கிறவள் என்றாலும் அதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஆதிரையின் பள்ளியில் முதல் விதிமுறையே டிவி/மொபைல் போன், அனைத்து விதமான கேட்ஜெட்ஸுடனும் எந்த வித தொடர்பும் இருக்க கூடாது என்பதே. நான் எவ்வளவோ முயற்சி செய்தாலும், அவளுக்கு சரியான பியர் க்ரூப் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி டிவியில் ஏதாவது ஒரு படத்தை போட வேண்டிய நிர்பந்தத்தில் நானும், என் கணவரும் மாட்டிக் கொண்டோம். அதனால் இந்த 2019 – ல் அவளுக்கு பியர் க்ரூப் அமைய வழியை உருவாக்குவதோடு, அவளை ஏதாவது ஒரு விளையாட்டு பயிற்சியில் சேர்க்கலாம் என்று யோசித்துள்ளோம். மற்றும் ஒரு பெற்றோராக அவளோடு விளையாட்டு, சமையல், ஆர்ட் & கிராஃப்ட் போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டும், அதே போல் என்னோட சில ஆர்வத்திலும் வேலைகளிலும் அவளையும் ஈடுப்படுத்தலாம் என்று உறுதிமொழி எடுத்துள்ளேன்.
கதை சொல்லுதல்
ஆதிரைக்கு நிறைய கதை சொல்லுவேன். ஆனால் சமீப காலமாக பலவித காரணங்களால் கதைகள் கூற முடியவில்லை. அதனால் 2019 – ல் நிறைய கதை சொல்வதும், கதை சொல்லும் வகுப்பிற்கு அழைத்து போக வேண்டும் என்று நினைத்துள்ளேன். நாம் எவ்வளவு கதை சொன்னாலும் ஆதிரைக்கு போதவே போதாது. அவள் எப்போதும் தூங்கும் போது கதை கேட்டுக் கொண்டே தூங்குவது வழக்கம். அதனால் இந்த வருடம் அவளின் கதை சொல்லும், கேட்கும் இரண்டு திறன்களையும் வளர்க்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.
என்னுடைய நண்பர்கள் பகிர்ந்து கொண்ட புத்தாண்டு உறுதிமொழிகள்
கடந்த வருடம் என்னுடைய உடல்நிலையை கவனிக்காத காரணத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். என் பிள்ளைகளோடு சரியாக நேரம் செலவிட முடியவில்லை. அதனால் இந்த வருடம் என்னுடைய ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எப்போதும் சுறுசுறுப்பாக மாறி என் பிள்ளைகளோடு நிறைய விளையாடுவேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன் - நிஷா
என் மகனை அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்று அதிகமாக அழுத்தம் கொடுத்துவிட்டேன். இந்த விஷயத்தில் நான் கடுமையாக நடந்து கொண்டேன். இதனால் அவனுக்கு பிடித்த விளையாட்டு வகுப்புகளிலிருந்து கூட நிறுத்திவிட்டேன். இந்த வருடம் நான் அழுத்தம் கொடுக்க மாட்டேன். அதே நேரத்தில் என் மகனின் மற்ற திறமைகளான விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று உறுதிமொழி எடுக்கிறேன். – வித்யா
வீட்டையும் அலுவலகத்தையும் சரியாக கையாள முடியாமல் கடந்த வருடம் முழுவதும் என் பிள்ளைகளோடு நேரம் செலவழிக்க முடியவில்லை. விஷேச நாட்களில் கூட அலுவலக வேலையாக சென்றுவிட்டேன். அதனால் இந்த வருடம் என் பிள்ளைகளுக்காக தனியாக தரமாக நேரம் செலவழிப்பேன் என்றும் முக்கியமான பண்டிகை,விஷேச நாட்களை மிஸ் பண்ண மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுக்கிறேன். - நரேஷ்
இதே போல் நீங்களும் உங்கள் பிள்ளைகளின் சிறப்பான வளர்ச்சிக்கும், மகிழ்சிக்கும் தேவையான உறுதிமொழியை எடுங்கள். இந்த வருடம் உங்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமையட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...