கோவிட் காலத்திலும் மாணவர்களுக்கு தடையில்லா கல்வி தந்த 5 ஆசிரியர்கள்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Sep 04, 2021

எங்களை வழிநடத்துவதற்கும், ஊக்கமளிப்பதற்கும், எங்களது அடையாளத்தை உருவாக்குவதற்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.
இன்று நல்ல நிலைமையில் இருக்கும் அனைவரின் வாழ்விலும் ஆசிரியர்களின் பங்கு கிக முக்கியமாகும். என்னால் மறக்க முடியாத ஆசிரியர் கோமதி. இன்று நான் எழுதும் ஒவ்வொரு தமிழ் பதிவுகளுக்கும் அடித்தளம் அவர்தான். எனக்கு தமிழைக் கற்றுக்கொடுத்து அதில் சிறப்பாக செயல்பட வைத்ததும் அவர் தான். இது போன்று ஓவ்வொருவரின் வாழ்விலும் நிச்சயமாக நம்பிக்கை விதைத்த ஆசிரியர்கள் இருப்பார்கள்.
கோவிட் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தடையில்லா கல்வி கொடுத்த ஆசிரியர்கள்
கோவிட் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் நிறைய ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தன்னலம் பாராமல் உதவினார்கள். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு செல்போன், இண்டர்நெட், கேட்ஜெட் போன்ற வசதிகள் கிடையாது. ஆனாலும் அவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், சொந்த பணத்தில் செல்போன் வாங்கிக் கொடுப்பது, நேரில் சென்றும் பாடம் நடத்துவது என இந்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கு ஈடே இல்லை.
Parentune சார்பாக இவர்களை கெளரவப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
திருச்சி மாவட்டம் பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே. ஆஷா தேவி
தன்னுடைய 33 வருட ஆசிரியர் பணியில் இவர் எண்ணற்ற விஷயங்களை செயல்படுத்தி இருக்கிறார். மாணவர்களுக்கு தமிழ்க் கலைகளை பயிற்றுவிப்பதில் முன்னுரிமை அளிப்பவர். பரதம், இசை, ஓவியம், கராத்தே விளையாட்டு போட்டிகள், பறை இசை பயிற்சி, கணினி பயிற்சி, ஆங்கில பயிற்சி என மாணவர்களின் திறமைக்கேற்ப பல பயிற்சிகளை பள்ளியில் வழங்குகி வருகிறார்கள் . அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லா விதத்திலும் திறமைசாலிகள் என்பதை மற்றவர்களுக்கு உரைத்துக் கூறியவர் ஆஷா தேவி.
திருச்சியில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பணிபுரியும் பள்ளியில் ஆரம்பத்தில் 71 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 816. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கில் ஆன்லைன் வழியாக கல்வி கற்க முடியாத மாணவர்களின் வீட்டிற்கு சென்று பாடம் நடத்தி வருகிறார். சில அரசுப் பள்ளி மணவர்களுக்கு ஸ்மார்ட் போன் அல்லது ரீ-சார்ஜ் வசதிகள் இருக்காது. அவர்களின் கல்வி தொடர்ந்து நடைபெற விரும்பியே இதை செய்தேன் என்கிறார் ஆஷா தேவி.
இவரது அர்ப்பணிப்புக்கும், ஆத்மார்த்தமான செயல்பாட்டுக்கும் கிடைத்த அங்கீகாரம் தான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு ஆகியிருக்கிறார். இவரது அர்ப்பணிப்பு என்றும் தொடர நாம் வாழ்த்துவோம்.
பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப் பள்ளியின் கணித ஆசிரியை பைரவி
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறார். குடும்பத்தின் பொருளாதார வசதி காரணமா ஆன்லைன் வகுப்புல கலந்து கொள்ள ஸ்மார்ட் போன் இல்லாம மாணவர்கள் கஷ்டப்பட்டாங்க. அவங்க எல்லாரும் 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள். இதனால் ஆசிரியர் பைரவி தன்னுடைய சொந்த பணமான 1 லட்ச ரூபாயில் 16 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போனுடன்சேர்த்து ரீ-சார்ஜ் வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்.
ஆசிரியர் பைரவி கூறும் போது நான் வசதியில்லாத இல்லாத குடும்பத்திலிருந்து கஷ்டப்பட்டு படிச்சு தான் ஆசிரியரானேன். என் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பலரும் குடிசையில் வாழ்பவர்கள். ஆன்லைன் வகுப்புல அவர்களால் படிக்க முடியாத சூழநிலை. என் மாணவர்களின் கல்விக்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்று எண்ணியே ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க முடிவு செய்தேன்.
முதல்ல மூணு பிள்ளைகளுக்கு மட்டும் செல்போன் வாங்கி கொடுக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் என்னுடைய மகள் எல்லா மாணவர்களுக்கும் வாங்கி கொடுக்கலாம். எனக்கு நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை வச்சு வாங்கி கொடுங்க என்று கூறினாள். அவங்களுக்கு உதவி செய்ய யாரு இருக்கா, எனக்கு நீங்களும் அப்பாவும் இருக்கீங்க என்று சொல்லி எனக்கு நம்பிக்கை ஊட்டினால்.
அந்த மாணவர்களின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். இனி எங்களோட படிப்புக்கு எந்த தடையும் இல்ல. நாங்க ஆன்லைன் கிளாஸில் படிக்க தயாராக இருக்கிறோம் என்று நம்பிக்கை குரலில் கூறுகிறார்கள்..
புதுக்கோட்டை அருகே கவரப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியை மீனா ராமநாதன்
தன்னோட பள்ளியில படிக்கும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் இடத்திற்கு பல கிலோ மீட்டர் பயணம் சென்று பாடம் நடத்தி வருகிறார் லலிதா. கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு வர முடியாமல் ஆன்லைன் மூலம் பாடம் நடத்திட்டு இருக்காங்க. ஆனால் ஆசிரியர்களின் தொடர் கண்கானிப்பில் இல்லாத மாணவர்கள் குறிப்பாக 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கையெழுத்து கூட போடுவது மறந்துவிட்டது. படிப்பையும் மறந்துட்டாங்க.
புத்தகம் வாங்க பிள்ளைகள் பள்ளிக்கு வந்த போது தான் இதை நான் கவனித்தேன். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எப்படியாவது இந்த பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க உதவனும் என்று எண்ணி தான் அவங்க வீடுகளுக்கே சென்று பாடம் நடத்த திட்டமிட்டேன்.
ஆரம்பத்துல தயக்கமா இருந்தது, இந்த மாதிரி கொரோனா சமயத்துல அவங்க வீட்டு பெரியவங்க பயப்படுவாங்கன்னு தோணுச்சு. ஆனால் aந்த இடத்துல மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் என அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடித்து மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறேன். இப்போ அந்த ஊர்லேயே 3 குழுவாக பிரிச்சு பாடம் எடுத்துக்கிட்டு வர்றேன். இப்போ, பெற்றோர்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு.
சில தனியார் பள்ளியில் படிக்கிற பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுக்க சொல்லி சில பெற்றோர் என்னை கேட்டாங்க. அதனால அவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். எங்க பள்ளியை சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு சென்று பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். அந்த குழந்தைகள் முகத்துல பார்க்கிற மகிழ்ச்சிக்காக எத்தனை கிலோ மீட்டர் வேண்டும் என்றாலும் பயணம் செய்யலாம் என்று தன் பணி மீது இருக்கும் பற்றை சந்தோஷமாக வெளிப்படுத்துகிறார்.
ஆசிரியர் பணியை ஒரு வேலையாக மட்டும் பார்க்காமல், அர்ப்பணிப்பாக பார்க்கும் மீனா ராமநாதனுக்கு ஒரு பெரிய சல்யூட்!
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா
ஆசிரியப் பணியில் 19 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர் கிராமப்புற மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். இவரது பள்ளியில் புதிய கற்பித்தல் முறை, பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சமூக மேபாட்டில் மாணவிகளை ஈடுபட செய்வது என பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை செய்து வருகிறார்.
மாணவிகளுக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கற்றுக் கொடுப்பது, ஆராய்ச்சி சார்ந்த கல்விமுறை என மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடுகிறவர்.
மாணவர்கள் பாடங்களை எளிமையாக கற்க உதவும் 160 யூடிப் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். இதே போல் இயற்கை சூழலில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கான மாதிரியை தயார் செய்து கொண்டிருகிறார். இதன் மூல இயற்கைப் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பனியில் ஈடுபட்டு வருகிறார்.
தேசிய நல்லாசிரியர் விருத்துக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. உங்களது பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் லலிதா.
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி புத்தூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மகரஜோதி கணேசன்
கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஸ்மார்ட் போன் வசதி, ஆன்லைன் கிளாஸ் பங்கேற்க முடியாமல் போனது, பொருளாதார பின்னடைவு என பாடம் கற்பதில் தொடர்ந்து அவர்களுக்கு நிறைய தடைகள் இருக்கின்றது.
இந்த நிலையில் தான், சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி புத்தூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மகரஜோதி கணேசன் மாணவர்களை தேடி சென்று பாடம் நடத்தி வருகிறார். இதற்காக அவர் அந்தப்பகுதியில் உள்ள மரத்தடி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள இடத்தில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.
இவரது பள்ளியில் மொத்தம் 65 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் தங்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயந்தனர்.
என்னுடைய முடிவு பற்றி மாணவர்களின் பெற்றோருடன் பேசினேண். அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கோவில், பொது இடம், மரத்தடி ஆகிய இடங்களில் வைத்து 2 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுத்து வருகிறேன். தற்போது தினமும் 30 மாணவர்கள் வருகிறார்கள். சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர்.
தன்னுடைய பணியை நேசித்து செய்யும் இதே போன்ற ஆசிரியர்கள் கல்விக்கு கிடைத்த பெரிய சொத்து என்றால் மிகையாகாது.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.