• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர்

டிவி டைமிலிருந்து குழந்தைகளை திசைத்திருப்பும் உத்திகள்

Radha Shree
3 முதல் 7 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 01, 2018

என்னுடைய பக்கத்து வீட்டில் அடிக்கடி நடக்கும் அம்மாக்கும், மகனுக்குமான உரையாடல்…​
அம்மா : கார்த்திக், ரொம்ப நேரமா டிவி முன்னாடி உட்காராதே.. டிவியை ஆஃப் பண்ணு..
கார்த்திக் : ஒரே ஒரு கார்டூன் மட்டும் பார்த்துக்கிறேன்மா…ப்ளீஸ்..
வெளியிலையும் விளையாட விடுறதில்ல.. நான் என்ன தான் பண்றது…
அம்மா : மெளனம் தான் பதில்

இதில் கார்த்திக் கேட்டதில் நியாயம் இருக்கிறது. இன்று எல்லா அம்மாக்களுக்குமே குழந்தைகளுக்கான ஒரு நாளைத் திட்டமிடுவது என்பது பெரிய சவாலாகத் தான் இருக்கிறது. ஏன் குழந்தைங்க டிவி பார்க்க ஆரம்பிச்சா அவ்வளவு சீக்கிரத்தில் அவர்களை எழுப்ப முடிவதில்லை. ஏன்னா ஒன்று அவர்களை சுதந்திரமாக மற்ற செயல்பாடுகளை செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை அல்லது டிவியை விட ஆர்வமுள்ள விளையாட்டுகளைப் பற்றி அவர்கள் தெரிந்திருக்க மாட்டார்கள் அல்லது உடல் கோளாறுகளும் காரணமாக இருக்கலாம். மற்ற குழந்தைகளோடு விளையாடும் போது குழந்தைகளை அழைத்துப் பாருங்கள்.. வரவே மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த செயலைச் செய்யும்போது நேரம் காலம் தெரியாது.

என் மகளுக்கு 31/2 வயது ஆகிறது. ball கிடைத்தால் போதும் சாப்பாடு தூக்கம் எதுவும் வேண்டாம். இதே போல் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனிப்பட்ட ஆர்வம், விருப்பம் கட்டாயமாக இருக்கும். அதைக் கண்டுபிடித்துவிட்டாலே இவர்கள் டிவி பார்க்கும் நேரத்தை நாம் எளிதாகக் குறைத்துவிடலாம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்விலிருந்து முற்றுலுமாக டிவியை நம்மால் அகற்ற முடியாது. ஆனால் ஒரு நாளில் பெரும்பாலான நேரம் டிவியின் முன் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் உடல், மனம், மூளை மூன்றுக்கும் ஆரோக்கியமில்லை. ஒரு நாளில் அவர்கள் எவ்வளவு நேரம் டிவி பார்க்க வேண்டும், என்னென்ன நிகழ்ச்சிகள், கார்டூன் பார்க்க வேண்டும் என்பதற்கான மந்திரகோல் பெற்றோர்கள் நம்மிடம் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் அவர்களைக் கட்டாயப்படுத்தியோ, கண்டித்தோ அணுகினால் குழந்தைகள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள். அதனால் அதற்கான சில உத்திகளைப் பயன்படுத்துவதே சிறந்தது. என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்…

டிவி பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் உத்திகள்.

வீட்டிலும், குடும்பத்திலும் மாற்றம் தேவை – டிவி பார்ப்பதற்கென்று நேரத்தை உருவாக்கும் விதி குழந்தைகளுக்கு மட்டுமில்லை அந்த விதி மொத்த குடும்பத்திற்கும் பொருந்தும். அப்போது தான் குழந்தைகளும் விதியைப் பின்பற்றுவார்கள்.
தூங்கும் அறையில் டிவி இருப்பதை தவிர்க்கலாம். எவ்வளவு அடம் பிடித்தாலும் இரவு தூங்கும் முன் டிவி பார்ப்பதை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் கதைகள் கேட்டுக் கொண்டு தூங்குவது, படம் வரைவது என மற்ற பழக்கத்தை உருவாக்கலாம். குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் டிவியை வைக்கலாம்.

மாற்று பொழுப்போக்கு ​- டிவியை தவிர மற்ற பொழுப்போக்கிற்கு பழக்கப்படுத்தலாம். அவர்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வைக்கலாம். இது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவாறு சூழலை அமைத்துக் கொடுக்கலாம்.
• படம் வரைவது, வண்ணம் தீட்டுவது, ஸ்டிக்கெர் ஒட்டுவது.
• கைவினைப் பொருட்கள் செய்வது. அவர்களின் அறையை அலங்கரிக்கும் சின்ன சின்ன கிராஃப்ட்ஸ் வொர்க் செய்யலாம்.
• pre-schoolers என்றால் அம்மாக்கள் நெட்வொர்கை உருவாக்கி நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லோரும் ஓரிடத்தில் இணைவது, சேர்ந்து அருகில் உள்ள பார்க் செல்வது போன்ற  விஷயங்களைத திட்டமிடலாம்.
• குழந்தைகள் என்று நாம் பொறுப்புகளை அவர்களிடத்தில் கொடுக்கத் தயங்குகின்றோம். அவர்களின் விளையாட்டுச் சாமான்களை அடுக்கி வைப்பது, துடைப்பது போன்ற சின்ன  சின்ன வேலைகளை செய்ய வாய்ப்பு கொடுங்கள்.
• செடி வளர்ப்பது, பராமரிப்பது போன்றவற்றில் ஈடுபட வைக்கலாம்.
• கதை புத்தகம் படிக்கலாம், puzzles மற்றும் அவர்களின் வயதிற்கு ஏற்ற விளையாட்டுகளை வாங்கி கொடுக்கலாம்.
• ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது வெளிச்சூழலில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள் – உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். குறிப்பிட்ட நேரம் மட்டுமே டிவி பார்க்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருங்கள். தினமும் அதே நேரத்தைக் கடைபிடியுங்கள். குழந்தைகள் புத்திசாலிகள் நம்மைக் கவனித்துக் கொண்டே இருபார்கள். கொஞ்சம் நேரத்தைத் தளர்த்திக் கொண்டால் போதும் பிறகு அதையே பிடித்துக் கொள்வார்கள்.

விளையாட்டில் மட்டுமே கவனம் – குழந்தைகள் பொருட்களை வைத்தோ அல்லது வேறு ஏதாவது விளையாடும் போதோ டிவி போடாமல் இருப்பது நல்லது. விளையாட்டில் மட்டுமே முழு கவனம் இருக்கமாறு சூழலை அமைத்துக் கொடுங்கள். விளையாட்டு மூலம் நடக்கும் கற்றலுக்கு டிவி தடையாக இருக்கக் கூடாது.

சாப்பாடு நேரம் டிவியே வேண்டாம் – இன்னும் கூட என்னுடைய பாட்டியும், அம்மாவும் எனக்குச் சோறு ஊட்டிய அனுபவங்களைச் சொல்வார்கள். கேட்கவே சுவாரஸ்மாக இருக்கும். முதலில் குழந்தைகளை அவர்களாகவே சாப்பிட வைத்துப் பழக்குவது சிறந்தது. சாப்பிடும் போது அவர்களுக்குள் நிகழ வேண்டிய விஷயங்கள் அப்போது தான் சரியாகச் செயல்படும்.
தயது செய்து டிவியை, மொபைல் போனை காட்டி சாப்பாடு ஊட்டுவதையும், டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவதையும் முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள். சாப்பிடும் நேரம் என்பது அவர்கள் மனதில் மோசமான அனுபவமாகப் பதியக் கூடாது. உடம்பின் மீதோ, தரையிலோ சாப்பாடு சிந்தினால் பராவாயில்லை, அதே போல் அரை மணி நேரம் சாப்பிட்டாலும் விட்டுவிடுங்கள். இது அவர்களுக்கான நேரம், முடிந்தவரையில் இனிமையான அனுபவமாக மாற்ற முயற்சி எடுப்போம்.

அனுபவம் புதுமை – பறவைகள், விலங்குகள், மரங்கள், கடல், அருவி, போன்றவற்றை புத்தகத்திலும் டிவியிலும் பார்த்தால் மட்டும் போதாது. அனுபவப்பூர்வமாகப் பார்த்து ரசிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். டிவியை தவிர வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்வார்கள். சாதாரணமாகக் கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்று வருவது கூட அவர்களுக்குப் புதிய அனுபவமாகவே பதியும்.

நாமே உதாரணம் – எல்லாவற்றையும் நம்மை பார்த்தே குழந்தைகள் கற்று கொள்கிறார்கள். புத்தகம் வாசிப்பது, எழுதுவது, வீட்டை ஒழுங்குப் படுத்துவது, அலங்காரப்படுத்துவது, செடி வளர்ப்பது போன்ற விஷயங்கள் செய்வதன் மூலம் டிவியை தவிர மற்ற பொழுதுப்போக்குகளும், செய்ய வேண்டிய காரியங்களும் இருக்கிறது என்பதை குழந்தைகள் சொல்லாமலே தெரிந்து கொள்வார்கள்.

சேர்ந்து விளையாடுவோம் – பெற்றோர்கள் நமக்குக் கிடைக்கும் நேரத்தில் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடலாம். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிணைப்பை ஏற்படுத்துவதில் விளையாட்டு முக்கிய பங்கு வக்கின்றது. மேலும் இதன் மூலம் நல்ல பண்புகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பகிர்தல், விட்டுக்கொடுத்தல், தோல்வியைக் கையாள்தல் போன்ற பல அம்சங்களை இயல்பாகக் கற்றுக் கொள்வார்கள்.

இயற்கையாகவே குழந்தைகள் எல்லா சூழலையும் தனக்கானதாக மாற்றிக் கொள்வதில் திறன் பெற்றவர்கள். புதியவைகளை ஆராய்வதற்கும், வித்தியாசமான அனுபவங்களுக்கும், விருப்பமானவற்றை செய்வதற்கும், சக பிள்ளைகளோடு விளையாடுவதற்கும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிஜம். அதற்கான வாய்ப்பையும், சூழலையும் உருவாக்கிக் கொடுக்கும் போதே தங்களுடைய தனித்துவத்தை தெரிந்து கொள்கிறார்கள்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}