குழந்தைகள் நடை பழக வாக்கர் சிறந்ததா?

Santhana Lakshmi ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Feb 13, 2019

குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையும் சரியாக இருக்கவேண்டும் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறோம். அந்த வளர்ச்சி இயல்பாகவே இயற்கையோடு இருக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடுகிறோம். எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல், இன்றைய இயந்திர வாழ்க்கையில் இருக்கும் பெற்றோர்களும், குழந்தைகளுக்கு அதை சார்ந்தே முடிவுகள் எடுக்க விரும்புகிறார்கள்.
டெக்னாலஜியின் வளர்ச்சி இயற்கையின் இயல்பை சட்டை செய்துவிடலாம் என நினைக்கிறது. ஆனால், மனிதப்பிறப்பு ரத்தமும் சதையும் நிறைந்தது அதன் இயக்கத்தை இயல்பை அனிச்சை செயல்கள் அரங்கேற்றனுமே தவிர, செயற்கை எந்திரங்களல்ல என்பதை ஒவ்வொரு முறையும், நமக்கு பாடம் கற்பிக்கிறது இயற்கை.
வாக்கர் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு என்ன நிகழ்கிறது
மாறாக அவர்களின் இயற்கையான நடைபயிற்சிக்கு உதவும் விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
- ஒரு குழந்தை பிறந்து 3ம் மாதத்தில் முகம் பார்த்து, 5ம் மாதத்தில் குப்புற விழுந்து, 6 7ம் மாதத்தில் தவழ்ந்து, எட்டில் எட்டி வைத்து, பத்தில் பத்தடி வைத்து ஒருவயதில் ஓடவேண்டும் என்று நம்மூர் பாட்டிகள் தங்களின் சொலவடையில் குழந்தையின் நடையையும் வளர்ச்சியையும் சொல்லிவிடுவார்கள்.
- குழந்தையின் மூளையும் உடல் வளர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. அதனால்தான் குழந்தையின் வளர்ச்சியானது ஒவ்வொரு மாதமாக வளருகிறது.
- குழந்தை பிறந்து கண் திறந்து முகம் பார்த்து, தலை தூக்குவது, சிரிப்பது, உட்காருவது, தவழ்வது, நடப்பது என்று ஒவ்வொரு வளர்ச்சியும் குழந்தைக்கு இயல்பாகவே இயற்கையாகவே அந்தந்த தருணத்தில் நடைபெறுகிறது. அதைவிடுத்து, குழந்தை பிறந்தவுடனே ஓடவேண்டும் என்று நினைத்து இன்றைய பெற்றோர்கள் கண்டுபிடித்த அரியவகை சாதனம்தான் ”வாக்கர்”
- வாக்கர் பயன்படுத்தலாம் என்றும் பயன்படுத்தக்கூடாது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஆனால், உண்மையாகவே பயன்படுத்தக்கூடாது என்று இன்று மருத்துவர்களே அறிவுறுத்த ஆரம்பித்துவிட்டனர்.
- ஏனெனில், இன்றைய பெற்றோர் குழந்தையின் 6ம் மாதத்திலே வாக்கரை பயன்படுத்துகின்றனர். குழந்தையை வாக்கரில் வைத்து சாப்பாடு ஊட்டுவது, வாக்கரில் வைத்து விட்டு வேலைகள் செய்வது என்று இருக்கிறார்கள்.
- குழந்தை தவழ்ந்து உருண்டு செல்லவேண்டிய பருவத்தில் வாக்கர் பயன்படுத்துபோது, குழந்தையின் இயல்பான வளர்ச்சி இதனால் பாதிக்கப்படுகிறது. வாக்கர் பயன்படுத்துவதாலேயே ஒரு சில குழந்தைகளின் நடை பாதிக்கப்படுகிறது.
- வாக்கர் பயன்படுத்துவதால் குழந்தையின் தசைகள், மூட்டுகள் மற்றும் முதுகெலும்பு பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்தோடு, மூளையின் இயல்பான வளர்ச்சியும், சிந்திக்கும் திறனும் இதனால் தடைப்படுகிறது.
- குறிப்பாக, ஒரு குழந்தை தவழும்போது விழுந்துவிட்டால், மூளையானது முட்டிப்போட்டு எழவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. ஆனால், வாக்கரில் இருக்கும் குழந்தைக்கு நான்கு சக்கரமும் பாதுகாக்கும் என்ற பேரில் குழந்தையை சிந்திக்கவிடாமல் அடைத்து வைக்கிறது.
- அதுமட்டுமில்லை, குழந்தையின் ரத்த ஓட்டமும் இதனால் சீராக இருப்பதில்லை, ஒரு குறிப்பிட்ட வளையத்துக்குள் அவர்கள் இருப்பதோடு, குழந்தையின் எடைக்கு மீறிய வாக்கரின் வெயிட்டோடு குழந்தை அதனை தள்ளிக்கொண்டு நடக்கும்போது அதன் முதுகு தண்டுகள் பாதிக்கப்படுவதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
- வாக்கர் பயன்படுத்தும் குழந்தைகள் தானாக நடக்க பழகும்போது ஒருவித தடுமாற்றத்தையும் பயத்தையும் எதிர்க்கொள்கிறார்கள். இதனால், குழந்தையின் மோட்டார் ஸ்கில்ஸ் பாதிக்கப்படுகிறது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
- குழந்தை நடக்கும் பருவம் வரும்போது அவர்களின் கைகளை பிடித்து நடக்க முயற்சி செய்வோம். முன்பெல்லாம் மரத்தினால் செய்யப்பட்ட நடைவண்டி இருந்தது. இப்பொழுதும் கிடைக்கிறது. அதை தாராளமாக பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு தயாரிக்க சொல்லலாம்.
- ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் என ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் நடைப்பழக நிமிடங்களை கூட்டி ஊக்கப்படுத்தலாம்.
- தினமும் குழந்தையின் கால்களை பிடித்து மசாஜ் செய்யவேண்டும். அத்தோடு, நடக்க ஆரம்பிக்கும் பருவத்தில் கால்களின் தசைக்கும் எலும்புக்கும் வலு சேர்க்கும் வகையில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கவேண்டும்.
குழந்தை தத்தி தத்தி நடந்து வரும் அழகைப் பார்க்க யாருக்குதான் ஆசை இருக்காது. அந்த நடையழகு இயல்பாகவும் இயற்கையாகவும் இருக்கவேண்டும். சுவரையும், நாற்காலியின் கால்களையும் தட்டுத் தடுமாறி பிடித்து நடைபழகியவர்கள் நாம்… மாறாக, நான்கு சக்கரத்திற்குள் குழந்தையின் குறும்புப்பருவம் அடைப்படாமல் காப்போம்!