• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

பாலியல் கொடுமைகளை தடுக்கும் திறன்களை பிள்ளைக்கு கற்பிக்கும் வழிகள்

Jeeji Naresh
1 முதல் 3 வயது

Jeeji Naresh ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 08, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

வீட்ல குழந்தைகளுக்கு எவ்வளவோ பாதுகாப்பு முறைகளை பற்றி சொல்லி கொடுப்போம் ஆனால் நிறைய பெற்றோர்கள் பாலியல் தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி நம்ம குழந்தைகளிடம் பேசுவது என்பது கடினமாக உணர்கிறார்கள். அப்படியே பேசினாலும் மிகவும் தாமதமாக தான் பேசுவோம். ஆண் பெண் இரு பாலருக்கும் ஆரம்பத்திலேயே  இதனை பற்றிய புரிதலை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். குழந்தைகள் தாங்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றோம் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். இதனால் யாரிடம் உதவி கேட்பது என்பதில் பயம் ஏற்படுகின்றது.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் நினைத்தால் இதனை நம் குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதன் மூலம் அவர்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளிலிருந்து காக்கலாம்.

குழந்தைகள் பாலியல் கொடுமைகளை தடுக்கும் திறன்கள் என்னென்ன?

என்னுடைய குழந்தைக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் வாரது என்று யாரும் நினைக்க முடியாது. இதற்காக அவர்களின் அழகிய உலகத்தை நாம் சுறுக்குவது என்பது நல்ல அணுகுமுறை இல்லை. எல்லா இடங்களிலும் ஏன்! குடும்பத்தில் நெருங்கி சொந்தங்களால் கூட குழந்தைகளுக்கும் பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இதற்கான தீர்வு குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தொடர்பான புரிதல் அவர்களின் வயதுகேற்றபடி பெற்றோர் சொல்லிக் கொடுப்பதே. கூடவே இந்த கொடுமைகளை தடுப்பதற்கு திறன்கள் அவசியம். அந்த திறன்களை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். என்னென்ன திறன்கள் என்பதை பார்க்கலாம்.

சுயமதிப்பை உணர உதவுவோம்:

ஒவ்வொரு குழந்தையும் தன்னை பற்றிய வலிமையை உணர வேண்டும். தன்னை உயர்வாக என்னும் குணத்தை பெற்றோர்களான நாம் தான் வளர்க்க வேண்டும். அதற்கான திறன்களை சிறு வயது முதலே வளர்க்க வேண்டும். வீட்டில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க கற்றுத் தர வேண்டும். அவர்களின் தனித் திறமையை அறிந்து கொண்டு அதன் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் செயல்பாட்டில் ஈடுபடுத்தலாம்.

குழந்தைகள் பேசும்போது நாம் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்ல வேண்டும். குழந்தைகளை மரியாதையுடன் நடத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் மனவலிமையும், உடல் வலிமையும் அதிகரிக்கும்.

சுய பாதுகாப்பு விதிமுறைகளை கற்று தருவோம்:

 1. குழந்தைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்
 2. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வெளிப்படையாகவும் , நேர்மறையாகவும் பதில் சொல்ல வேண்டும்
 3. ஒரு கண்டிப்பான பெற்றோராக இல்லாமல் குழந்தைகள் எதிர்பார்க்கிற மாதிரி ஒரு ஃப்ரெண்டா இருப்போம். அப்போதான் எல்லா விஷயத்தையும் எளிதாக நம்மிடம் பகிர்வார்கள்.
 4. உங்கள் குழந்தை எப்போதும் எங்கேயும் யார் யாருடன் தனியாக இருக்க நாம் அனுமதிக்கும் போது கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
 5. அன்னியரிடம் தங்களை பற்றிய சொந்த விவரங்களை சொல்லுவதை ஊக்குவிக்க கூடாது
 6. தொடுதல் பற்றிய சுய பாதுகாப்பு முறைகளை பற்றி கற்று தர வேண்டும்
 7. இரகசியங்களை மறைக்கக் கூடாது என்றும் தங்களிடம் (பெற்றோர்) எதை வேண்டுமானாலும் மறைக்காமல் பகிர்ந்து கொள்ள குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும். அவர்கள் பேசுவதை அனுமானிக்காமல், தவறை மட்டுமே சுட்டிக்காட்டாமல் முதலில் அவர்களை பேசுவதை கேட்பதன் மூலம் நடந்ததை பற்றி தெளிவாக அறிய முடியும்.
 8. எந்த ஒரு பிரச்சனையும் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று கற்றுத் தர வேண்டும்
 9. குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பணியில் உள்ளவர்களின் மற்றும் ட்ரைவர், சமையல்காரர், ஆட்டோ காரர்கள்,தோட்டக்காரர்கள் ஆகியோரின் பின்னணியையும் அத்தாட்சியையும் கவனமாகப் பரிசீலனை செய்ய வேண்டும்.
 10. பள்ளி சென்று வந்த பின்னும், விளையாடி விட்டு வந்த பின்னும் குழந்தைகளை கவனி்ப்பது அவசியமாகும். அவர்களின் அனுபவங்களைப் பொறுமையாகக் கேட்பதோடு அவர்களை குறை சொல்வதையும் தவிர்க்க வேண்டும்.
 11. பதட்டம் அல்லது சோகமாகக் குழந்தைகள் காணப்பட்டாலோ, உடலில் வித்தியாசமான காயம் அல்லது தழும்பு காணப்பட்டாலோ குழந்தையிடம் மென்மையாகப் பேசிக் காரணத்தை அறிய வேண்டும்.

குழந்தைகளை தொடுவதில் உள்ள வேறுபாடு பற்றி புரிய வைப்பது:

 • தனிப்பட்ட உடல் உறுப்புகளைக் குறிக்கும் சரியான சொற்களை குழந்தைகளுக்குக் கற்றுத் கொடுக்க வேண்டும்
 • பெற்றோரை தவிர மற்றவர்கள் குழந்தைகளை தொட்டு பேசுவது குறித்து விளக்கும் போது ’Safe Touch’, ’Unsafe Touch’. தொடுதலில் உள்ள நல்லது கெட்டதை குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் பயிற்றுவிப்பது மிக அவசியம்
 • அன்பு, கனிவு மற்றும் அக்கறை இதை உணர்த்தும் விதத்தில் குழந்தைகளை தொடுவது, ’பாதுகாப்பான தொடுதல்’ ஆகும். அம்மாவின் முத்தம், தந்தையின் அணைப்பு, தாத்தா பாட்டி உடன் கை கோர்த்துக் கொள்வது, மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது ஏற்படும் இணக்கம் இவை அனைத்தும் ’பாதுகாப்பான தொடுதல்’.
 • ஒருவரது தொடுதல் குழந்தைக்கு ஏதோ ஒரு வகையில் சிரமம் தருவதாக இருப்பதே பாதுகாப்பற்ற தொடுதல். மற்றவர் தொடுவதால் உடலில் வலி ஏற்படுவது, தொட வேண்டாம் என்று எண்ணும் போது ஒருவர் தொடுவது, அந்தரங்க பகுதிகளை காரணமின்றி தொடுவது, தொடப்படும் போது அதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரிப்பது ஆகியவை பாதுகாப்பற்ற தொடுதல் ஆகும்.
 • தொடுதலை ஏற்கவும், மறுக்கவும் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். பிறப்புறுப்புகளின் பெயர்களையும், உடலில் மற்றவர் தொடும் போது தைரியமாக மறுக்கவும் அதை மீறியும் அவ்வாறு செய்யும் போது அவர்களை பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்பதை தவறாமல் அறிவுறுத்த வேண்டும்
 • தொடுதலில் உள்ள வேறுபாட்டை குழந்தைகள் அவர்களாகவே சொல்ல கேட்க வேண்டும். இப்படி செய்வது தொடுதல் குறித்த உரையாடலின் பலனை உணர்த்தும்.

அவர்களுக்கு நீங்கள் இதைப்பற்றிய தெளிவான மனநிலையை உருவாக்கி விட்டால், உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை அறிந்து மனநிம்மதியுடன் இருக்க முடியும். தெளிவு ஏற்பட்ட பிறகு , அத்தகைய சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வது என்பதை உங்கள் பிள்ளைகள் நன்றாக அறிந்திருப்பர்.

எந்த வயதிலிருந்து தொடுதல்(பாதுகாப்புள்ள மற்றும் பாதுகாப்பற்ற) பற்றி கற்றுத் தர ஆரம்பிக்கலாம்?

குழந்தைகள், நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில் (3-4 வயது ) தொடுதல் பற்றிய விழிப்புணர்வைப் பற்றி நீங்கள் கற்பிக்கத் தொடங்கலாம்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள உங்கள் பிள்ளை மிகவும் இளமையாக இருப்பது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பிள்ளைகள் தங்களின் உடலின் சில பகுதிகள் அந்தரங்கமானது என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே உணர்கிறார்கள். அவர்கள் வளரும் போது வளர்ச்சிக்கேற்ற விழிப்புணர்வை படிப்படியாக நீங்கள் அதிகரிக்க வேண்டும்.

குழந்தைகள் "நோ" சொல்ல கற்றுத் தர வேண்டும்

குழந்தைகள் உங்கள் நண்பரை அல்லது உறவினரையோ பார்க்கும் பொழுது கட்டிபிடிக்கவோ அல்லது முத்தமிடவோ பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுவது நல்லது. யாராவது தங்கள் மடியில் உட்கார கேட்கையில் , அவர்கள் "வேண்டாம்" என்று தைரியமாக சொல்ல பழக்க வேண்டும். இந்த மாதிரி "நோ " சொல்லிப் பழகும் பொழுது இதைப்பற்றி இன்னும் ஆழமான புரிதல் அவர்களுக்கு வரும்.

உங்கள் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகாமல் இருக்க தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை அறிதல் மற்றும் தேவையான புரிதலைக் கொண்டிருக்க வேண்டிய கடமை/பொறுப்பு பெற்றோர்களுடையது என்பதை மறவாதீர்கள். அப்படியே ஆளானாலும் அதை பெற்றோரிடம் கூறும் அளவுக்கு புரிதலையும், தைரியத்தையும், தன்னுடைய பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் ஒவ்வொரு பெற்றொரும் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}