ஏன் குழந்தைகள் அதிகம் கேள்விகள் கேட்கிறார்கள்?

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் கேள்வி கேட்பது என்பது முக்கிய பங்காற்றுகிறது. குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லும் பெற்றோர்களே குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவுபவர்களாவர். அவர்களின் கேள்வி கேட்கும் திறனை நாம் சரியாக ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குள் எல்லையில்லா கற்றல் நிகழ்கிறது. குழந்தைகள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்ன கேட்க கூடாது என்று பெற்றோர்கள் நாம் சில வரையறை அமைத்து வைத்துக் கொள்கிறோம். ஆனால் குழந்தைகளோ கேள்விகள் மூலமாகவே இந்த உலகத்தை புரிந்து கொள்ள முயற்சி எடுக்கிறார்கள்.
முதலில் அம்மாவிடம், அப்பாவிடம், பிறகு எல்லோரிடமும் கேள்விகள்
குழந்தைகள் அவர்கள் வாழ்க்கை முழுதும் கேள்விகளால் நிரம்பிக்கிடக்கிறது. 4 வயது குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 300 கேள்விகள் கேட்கும், 2 வயதிலிருந்து 5 வயது வரை சுமார் 4000 கேள்விகள் கேட்கும். ஆனால் 5 வயதிற்கு மேல் குழந்தைகள் கேள்வி கேட்பதை முற்றிலுமாக நிறுத்திவிடுவதாக ஆய்வுகள் கூறுகிறது. இதற்கு காரணம் பள்ளி, வீடு எல்லாமே தான். கேள்வி கேட்க ஊக்கப்படுத்துறதை விட அதிகமாக கேள்வி கேட்க சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும் பழக்கம் இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஆனால் இது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை.
ஜெனிபர் தனது மூன்று வயதில் தன் அப்பா எட்வர்ட் அவர்களிடம் கேட்ட கேள்வி ”கேமராவில் போட்டோ எடுத்த உடனே நம்மால் ஏன்ப்பா அந்த படத்தை பார்க்க முடியவில்லை? தனது மகள் கேட்ட கேள்வியின் தூண்டுதலால் கண்டுபிடித்தது தான் போலராய்டு கேமரா (Instant Camera). ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் தான் இன்று நாம் அறிவியல், இலக்கியம், கலை, தத்துவம், அரசியல், தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் வளர்ச்சியடைய அடிப்படை காரணம்.
கேள்விகளைக் கேட்க ஒரு குழந்தையை ஏன் ஊக்குவிக்க வேண்டும்?
மேலும் கேள்விகளைக் கேட்க குழந்தையை ஊக்குவிப்பதற்கான நன்மைகள் இங்கே. இதை படிக்கவும்
- குழந்தைகள் கேள்வி கேட்பதனால் கருத்து வளம், புலணுர்வு அறிவு, மொழி கற்றல் போன்ற திறன்கள் மூலம் மூளை வளர்ச்சியடைகிறது.
- குழந்தைகள் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளும்போது அதில் குழப்பமோ, சீரற்றத்தன்மையோ இருந்தால் கேள்வி எழுப்புவார்கள். அதில் தெளிவு கிடைக்கும் வரை கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள், அவர்கள் கேள்வி கேட்டு தெரிந்து கொண்ட விஷயத்தில் ஆழமான புரிதல் ஏற்படுவதுடன் அறிவாற்றல் மேம்படுகின்றது. எதிர் காலத்தில் தங்களுக்கு ஏற்படும் சவால்களையும், பிரச்சனைகளையும் ஏன்? எதனால் என்று தனக்குள் ஆழமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள்.
- தங்கள் சந்தேகத்தை தெளிவுப்படுத்திக் கொள்ளும் போது குழந்தைகளுக்கு ஒருவித மனநிறைவு கிடைப்பதுடன், தான் கற்றுக் கொள்ளும் எல்லா விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.
- கேட்கும் கேள்விகளின் அடிப்படையில் குழந்தைகளின் மனநிலையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆர்வத்தின் அடிப்படையில் எழுந்தவையா, பயம் காரணமாகவா, சிக்கலான கேள்விகளா, ஏக்கத்தால் எழுந்தவையா என்று கவனித்து அதன்படி அவர்களை வழிநடத்தலாம்.
- பெரியவர்கள் நமக்கு சினிமா, அரசியல், கிரிக்கெட் போன்ற விருப்பமான துறையை பற்றி பல விதங்களில் தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம். அந்த துறை சார்ந்த நபர்களை சந்திக்கும் போது அந்த துறையை பற்றி கேள்விகள் கேட்பதும், கலந்துரையாடுவதும் நமது இயல்பு. இதே போல தான் குழந்தைகளும் தங்களுக்கு விருப்பமான விஷயங்களை பற்றி சிந்திப்பதும், கேள்வி கேட்பதும், அதற்கேற்ப செயல்படுவதையும் வைத்து அவர்கள் எந்த துறையில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
- தாய், தந்தை யார் தன் கேள்விகளுக்கு தெளிவாக, பொறுமையுடன் பதில் அளிக்கிறார்களோ, அவர்களிடமே குழந்தைகள் தங்களின் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள். அதை பற்றி வெளிப்படையாக முறையிடுவார்கள். இதனால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆரோக்கியமான பந்தம் ஏற்படுகிறது. அவர்கள் வளர்ந்து பெரியவர்களானாலும் பெற்றோர்களிடம் ஆலோசனைகளை கேட்க விருப்பப்படுவார்கள்.
- குழந்தைகள் சில நேரம் விசித்திரமாக கேள்வி கேட்பார்கள். ‘கோழி முட்டை ஏன் இந்த வடிவத்தில் இருக்க வேண்டும்? ‘தண்ணீரைத் தொட்டால் கைகளில் ஏன் ஈரம் ஒட்டிக் கொள்கிறது? பம்பரம் ஏன் மண்ணுல சுத்தாமல் இருக்கிறது? வானத்துக்குள்ள எப்படி இருக்கும்? நட்சத்திரங்கள் கீழே விழுமா? நான் எப்படி பிறந்தேன்? உங்கள் குழந்தைக்குள் ஓர் ஆராய்ச்சியாளன் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது.
குழந்தைங்க தங்களோட கேள்விகளுக்கு சரியான பதில்களைப் பெறுவதோடு நின்று விடுவதில்லை. தான் பெற்றதை தன் நண்பர்களிடமும் சொல்ல முயற்சிக்கிறார்கள். பல இடங்களிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள இந்த அறிவு குழந்தைக்கு உதவுகிறது. கேள்விக்கு விடை கிடைக்கும் போது குழந்தையின் சிந்தனை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறது. யோசிக்கும் திறன் மேம்படுகிறது. மேலும், எந்த இடத்திலும் தெரியாது என்று தயங்கி நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் குழந்தைக்கு ஏற்படுவதில்லை. இது போன்ற குழந்தைகள் பிரச்னைகளுக்கு எளிய தீர்வுகளை வைத்திருப்பார்கள். சமூகத்தில் ஒரு முக்கியமான பொறுப்பில் நிர்வகிப்பார்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...