என்னுடைய கர்ப்ப கால மனஅழுத்தத்தை எப்படி கையாண்டேன்?

எல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப காலத்துல மன அழுத்தம் வர்றதுக்கு முக்கிய காரணமா ஹார்மோன் சமநிலையை சொல்லலாம். பிறகு வாந்தி, தூக்கமின்மை, அல்லது ரொம்ப நேரம் தூங்கறது, சாப்பிட பிடிக்காம இருக்கறது மற்றொரு முக்கியமான ஒன்று வீட்டுச்சூழல். இப்படி பல காரணம் இருக்குது.
வீட்டுல இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ஒரு மாதிரி பிரச்சனை என்றால் வேலைக்கு போற கர்ப்பிணிகளுக்கு வேறு மாதிரி தொந்தரவுகள் இருக்கு. நான் கர்ப்பமா இருக்கும்போது ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துல வேலை செய்து கொண்டு இருந்தேன் . காலையில் ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வேலை. அதிகாலையில எழுந்திரிக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். அதுக்காக செகண்ட் ஷிபிட் போலாமான்னு பாத்தா சாயங்காலம் ஆயிடுச்சுனா வாந்தி எடுக்க ஆரம்பிச்சிடுவேன். அதுவும் என்னோட உணவு விஷயத்துல ரொம்ப மெனக்கிடுவேன். ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுவேன். மசக்கை என்பதால முதல் மாசமே சாப்பிட பிடிக்காம போய்டுச்சு. அதுவே எனக்கு பெரிய மன அழுத்தமா மாறிடுச்சு.
அதுமட்டுமில்லாம கோபம் அதிகமா வர ஆரம்பிச்சது. தூக்கம் வரல. டாக்டர் கிட்ட கேட்ட போது கர்ப்பமாக இருக்கும் போது இதெல்லாம் பொதுவானதுன்னு சொல்லிட்டாங்க. கர்ப்ப காலத்துல சாப்பிடாம இருக்க கூடாது, நீ சரியாவே சாப்பிடறதல்ல, வேலையை மாத்து அல்லது வேலையை விடு என்று வீட்டுல சொன்னாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. நான் அப்போ தான் யோசிச்சேன் . நம்ம எப்படி இருக்கிறோமோ அதை பொறுத்து தான் நம்ம குழந்தையோட மனநிலையை இருக்கும். அதனால நானே என்னோட மன அழுத்தத்திலிருந்து எப்படி வெளிய வருவதுன்னு கண்டுபிடிக்க ஆரம்பிச்சேன்.
கர்ப்ப நேர அழுத்தத்தை நான் கையாண்ட வழிகள் -
எனக்கு பிடிச்ச விஷயங்களை செய்யறது மூலமா கவனத்தை திருப்ப முடியும்னு தோணிச்சு. மகிழ்ச்சியை கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கை வந்துச்சு.
எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும், அதுமட்டும் இல்லாம புத்தகம் வாசிக்கவும் பிடிக்கும். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகு கண்டிப்பா சோர்வாகத்தான் இருக்கும். ஒரு மணி நேரம் தூங்கிட்டு அப்பறம் அன்றைக்கு தேவையான சாப்பாடு மெனுவை தேர்ந்தெடுப்பது, வித்தியாசமா முயற்சி பண்ணுவது, அலங்கரிப்பது என என்னோட கவனத்தை அதுல செலவிட ஆரம்பிச்சேன். அது எனக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு. ரிலாக்சா உணர்ந்தேன். திருப்தியாகவும் இருந்தது.
பிறகு வரலாறு சம்மந்தமான புத்தகங்களை தேடி வாங்கி படிச்சேன். தெரியாத ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கும் போது ஆர்வம் அதுல போய்விடும் என்பதை அனுபவப்பூர்வமா உணர்ந்தேன்.
அதே மாதிரி இந்த கர்ப்ப காலத்துல நம்மை சுத்தி நல்ல விஷயங்களை மட்டுமே பேசற மாதிரியும் பாத்துக்கனும். ஏன்னா தேவையில்லாத பயத்தை, கோபத்தை ஏற்படுத்துறவங்க கிட்ட கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது. எந்த எதிர்மறையான விஷயங்களும் நம்ம மனசுக்குள்ள போகாம இருக்கும்படி பார்த்துக்கனும் அல்லது அப்படியே போனாலும் அதிலிருந்து உடனே வெளிவர எனக்கு புடிச்ச விஷயத்தை செய்யும் போது எளிதாக அந்த மனநிலையில இருந்து வெளியில வர முடிஞ்சது.
மெல்ல மெல்ல என்னுடைய மனநிலை மன அழுத்தத்திலிருந்து வெளியில வர ஆரம்பிச்சது. என்னோட உணர்ச்சிகளை, எதிர்பார்ப்புகளை எப்படி சரியா கையாளனும், வழிநடத்தனும் போன்ற விஷயங்களை பற்ரி தெரிஞ்சுகிட்டேன்..
நீங்களும் உங்களுக்கு பிடிச்ச அல்லது கத்துக்கணும்னு நினைக்கிற விஷயத்தை கர்ப்பமா இருக்கிற காலத்துல செஞ்சு பாருங்க. அது தையல், மேக்கப், யோகா, எழுத்து இப்படி எதுவாகவும் இருக்கலாம்.
கர்ப்பமாக இருக்கும்போது மன அழுத்தத்தை குறைக்க வேறு சில வழிகள் -
உங்க கணவரோட மாலை நேரத்துல கண்டிப்பா ஒரு நடைப்பயிற்சி போங்க. அவரால வர முடியலனா சண்டை போடாம யார்கூட பேசினா மனசுக்கு நல்ல இருக்குமோ அவங்க கூட மகிழ்ச்சியான விஷயங்கள மட்டும் பேசிட்டு போங்க.
மன அழுத்தத்துல இருந்து வெளிய வர நிச்சயமா உதவுறதுல உணவு ஒரு நல்ல மருந்து. ஒமேகா 3 அதிகமா இருக்கிற வால்நுட் (walnut) , அளவாக டார்க் சாக்லேட் கூட சாப்பிடலாம். இதெல்லம் நம்ம மன நிலைமையை சரி பண்றதுக்கான உணவுகள்
குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மன அழுத்தம் இருக்குன்னா நீங்க கண்டிப்பா யோகா மூச்சு பயிற்சி, தியானம் பண்ணலாம். நடந்த கசப்பான சம்பவங்களை நினைக்காம நம்ம குழந்தைக்காக நேர்மறையான விஷயங்களை மட்டும் யோசிக்கவோ இல்லனா பேசவோ பழகிக்கோங்க. இது நிச்சயமா உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும்.
எப்படி நமக்கு பிடிச்ச விஷயத்தை நம்ம செய்ய ஆரம்பிச்சா கண்டிப்பா மன அழுத்தமோ, சோர்வோ இருக்காதுன்னு நான் நம்பறேன் .
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...