1. ஊட்டத்துள்ள-உணவுகள்

முதல் முறை குழந்தைக்கு உணவு எப்படி கொடுக்க வேண்டும்?

0 to 1 years

Radha Shri

6.1M பார்வை

5 years ago

முதல் முறை குழந்தைக்கு உணவு எப்படி கொடுக்க வேண்டும்?
ஊட்டத்துள்ள உணவுகள்
வளர்ச்சிக்கான உணவு முறைகள்

முதலில் ஒரு அம்மாவாக உங்கள் குழந்தைக்கு வாழ்த்துக்களை கூற நினைக்கிறேன். ஏன்னென்றால் குழந்தை முதன் முதலில் உணவு உண்ணப்போவதை நம் வீடுகளில் விழாவாக கொண்டாடும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியான, பாஸிட்டிவ்வான மனதோடு  உணவு கொடுக்க தயாராகுங்கள்.

Advertisement - Continue Reading Below

இவ்வளவு நாட்கள் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்த குழந்தைக்கு திட உணவு 6 மாதம் தொடங்கும் போது ஆரம்பிக்கலாம். அவர்களின் வளர்ச்சிக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து சில சத்துக்கள் தேவைப்படுகின்றது. இந்த பதிவில் முதல் முறை குழந்தைக்கு எவ்வாறு உணவு அளிக்க வேண்டும்? அவர்களுக்கு என்னென்ன ஊட்டச்சத்துகள் தேவை? என்னென்ன உணவு கொடுத்து துவங்கலாம்? போன்ற விஷயங்களை என்னுடைய அனுபவத்திலிருந்தும், நான் படித்ததிலிருந்தும் எடுத்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

6 மாத குழந்தையின் உணவில் இருக்க வேண்டிய ஊட்டச்சத்து கூறுகள்:

  1. புரதம்: 6 முதல் 24 மாதங்கள் வரையுள்ள குழந்தைகளுக்கு புரதத்திலிருந்து அதிகபட்சமாக 15 சதவிகிதம் ஆற்றல் கிடைக்கின்றது.
  2. இரும்பு - உடலில் வளரும் எல்லா பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை கொண்டு செல்ல இரும்புச்சத்து உதவுகிறது.
  3. கால்சியம் - எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம்.
  4. துத்தநாகம்: துத்தநாகம் செல்களை பழுது பார்க்க மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
  5. கொழுப்பு: குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது.
  6. கார்போஹைட்ரேட்டுகள்: குழந்தையின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.
  7. வைட்டமின்கள்: குழந்தையின் வளர்ச்சிக்கு வெவ்வேறு வைட்டமின்கள் ஒவ்வொரு விதமாக பங்களிக்கின்றன. ஒரு குழந்தைக்கு வைட்டமின் A, B1, B2, B3, B6, B12, C, D, E மற்றும் K அவசியம்.
  8. தாதுக்கள்: சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ஒரு குழந்தையின் வளர்ச்சியை நேரடியாக வடிவமைக்க உதவுகின்றது.

உங்கள் குழந்தைக்கு எவ்வளவு உணவு தேவை ?

குழந்தைக்கு ஏற்கனவே தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் கொடுப்பதால் திட உணவு ஒரு நாளில் இரண்டு வேலை கொடுக்கலாம். உதாரணத்திற்கு காலை மற்றும் மதிய உணவாக கொடுக்கலாம். இதற்கு நடுவில் பால் கொடுப்பது கணக்கில்லை. குழந்தையின் தேவைகேற்ப பால் கொடுத்துக் கொண்டு இருக்கலாம்.

திட உணவு ஆரம்பிக்கும் பொழுது காய்கறி மற்றும் பழங்கள் மட்டும் கொடுக்கலாம். ஏன்னென்றால் குழந்தைகளின் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் காய்கறி மற்றும் பழங்கள் சீக்கிரம் ஜீரணமாகிவிடும். முதல் மூன்று நாட்கள் கொடுத்துப்பாருங்கள், குழந்தைக்கு ஏற்றுக் கொண்டதால் மெல்ல மெல்ல கஞ்சி, சாதம் என மற்ற உணவுகளை ஆரம்பிக்கலாம்.

என் குழந்தைக்கு கொடுத்த சில உணவு வகைகளை இங்கே குறிப்பிடுகிறேன்:

  • பழ வகைகள் - ஆப்பிள், வாழைப்பழம், பேரிக்காய், வெண்ணெய் பழம் (Butter fruit), போன்ற பழங்களை கொடுக்கலாம். பழங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தும் போது அதை வேகவைத்து, மசித்துக் கொடுக்க வேண்டும்.
  • காய்கறிகள் – சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், இனிப்பு பூசணி, போன்றவற்றை வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய்கறி சூப்பாகவும் கொடுக்கலாம்.
  • பருப்பு வகை சூப் - பலவகையான பருப்பு வகைகள், குறிப்பாக பருப்பு வகைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, குழந்தைகளுக்கு சூப்பாக கொடுக்கலாம்.
  • அரிசி கஞ்சி: கை குத்தல் அரிசியை கஞ்சியாக காய்ச்சி  தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலுடன் கலந்து கொடுக்கலாம். இதில் குழந்தைகளுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கின்றது.
  • சிறுதானிய வகைகள் கேழ்வரகு, கோதுமை, ஓட்ஸ் போன்ற பல தானியங்களை கஞ்சியாக தயாரித்துக் கொடுக்கலாம். கேழ்வரகு அல்லது கோதுமையை முதல் நாள் ஊற வைத்து பால் எடுத்து காய்ச்சி கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். என் குழந்தை விரும்பி சாப்பிடும் உணவு இது.

சுவையான சில ரெசிபிகள்

அரிசி கஞ்சி - தேவையான பொருட்கள்:

  • அரிசி (லேசாக வறுத்து அரைத்த) - 1 சிறிய கப்
  • தண்ணீர்
  • தாய்ப்பல்/ஃபார்முலா பால் - தேவைக்கேற்ப

தயாரிப்பது எப்படி:

தண்ணீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.. மெதுவாக, அரைத்த அரிசியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். சமைத்த அரிசியை 2 தேக்கரண்டி பாலுடன் சேர்த்து நன்கு கிளறிய பின் ஆற வைத்து ஊட்டவும்.

Advertisement - Continue Reading Below

மஞ்ச பூசணி கூழ்

  • மஞ்ச பூசணி – தேவைகேற்ப
  • நீர்

தயாரிப்பது எப்படி:

பூசணிக்காயில் உள்ள விதையை நீக்கி சிறிய க்யூப்ஸாக கட் பண்ணவும். கப் தண்ணீரை வேகவைத்து அதில் பூசணி க்யூப்ஸ் சேர்க்கவும். மூடியை மூடி, சில நிமிடங்கள் சமைக்கவும்.

சமைத்த பூசணிக்காயை நன்றாக மசிக்கவும். உங்கள் குழந்தைக்கு உணவளிக்கவும். இதில் இருக்கும் இயற்கையான இனிப்பு நல்ல சுவையை தரும்.

மஞ்ச பூசணிக்கு பதில் ஆப்பிளையும் தோல் நீக்கி இதே போல் சமைத்துக் கொடுக்கலாம்.

ராகிப்பால் /சம்பா கோதுமை பால்

ராகி(கேழ்வரகு) அல்லது சம்பா கோதுமை – 1 கப்

தண்ணீர்

கருப்பட்டி – தேவைகேற்ப

தயாரிப்பது எப்படி:

கேழ்வரகு அல்லது கோதுமையை முதல் நாள் ஊற வைத்து, அதை மிக்ஸ்யில் அரைத்து ஒரு வெள்ளை துணியில் புளிந்து பால் எடுக்கவும். இந்த பாலை காய்ச்சவும். அடிப்பிடிக்காமல் கிளறவும். அல்வா போல் பதம் வரும். இதனுடன் கருப்பட்டி( சிறிது தண்ணீர் விட்டு வடிகட்டிக் கொள்ளவும்) காய்ச்சிய ராகிப்பாலுடன் சேர்த்து ஆற வைத்து உங்கள் குழந்தைக்கு ஊட்டவும். மிகவும் சுவையும் சத்தும் நிறைந்த உணவு இது.

உணவளிக்க உதவும் குறிப்புகள்

குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது தாய்மார்களுக்கு ஒரு சவாலான பணியாகும். உங்கள் குழந்தையின் உணவு நேரத்தை டென்ஷன் இல்லாமலும் மகிழ்ச்சியாக மாற்ற இதோ சில குறிப்புகள்.

  1. குழந்தைக்கு முதன் முதலில் உணவளிக்கும் போது  எப்போதுமே ஒன்று அல்லது இரண்டு கரண்டியுடன் தொடங்கவும், உங்கள் குழந்தை சுவையை விரும்பினால் மட்டுமே அதிகமாகக் கொடுங்கள்.
  2. ஏதாவது ஒரு பழம் அல்லது காய்கறியை மட்டுமே அறிமுகப்படுத்துங்கள், மற்றொரு உணவுப்பொருட்களைத் தொடங்குவதற்கு முன்பு, அவர்களின் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை கவனிக்கவும்.
  3. எந்த உணவாக இருந்தாலும் அனைத்து புதிய உணவுகளை 3 நாள் கொடுத்த கவனித்துக் கொடுங்கள்.
  4. 6 மாத குழந்தைக்கு காய்கறி மற்றும் பழங்களை கட் பண்ணிக் கொடுக்க வேண்டாம். மசித்தே கொடுக்கவும். இல்லையென்றால் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்படும்.
  5. உணவளிக்கும் இடம் அமைதியான மற்றும் ஆரோக்கியமான சூழலாக இருக்கட்டும்.
  6. அதாவது டிவி அல்லது மொபைல் காண்பித்து  உங்கள் குழந்தைக்கு உணவளிக்க வேண்டாம்.
  7. உணவளிக்கும் பாத்திரம் கண்ணாடி அல்லது கூர்மையான விளிம்பு இல்லாததாக பார்த்துக் கொள்ளவும்.
  8. வீட்டு உணவாக இருக்கட்டும். சுத்தமாகவும், எளிதாக செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்கும்.

குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குழப்பம் அதிகம் இருக்கலாம், பெரும்பாலும், குழந்தைகள் மாறுபட்ட சுவை, மற்றும் வண்ணங்களைக் கொண்ட உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள். நம்முடைய ஒரு சிறிய முயற்சியும், மெனக்கிடுதலும், அன்பும் குழந்தைக்கு உணவு நேரத்தை இனிமையாக மாற்றும் என நான் நம்புகிறேன்

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...