சாப்பிட மறுக்கும் குழந்தைகளை எவ்வாறு சாப்பிட வைப்பது?

சாப்பிட மறுக்கும் குழந்தையாக உங்கள் குழந்தை இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு உணவு அளித்தல் ஒரு மிக பெரிய சவாலான காரியமாக பெற்றோர்களுக்கு இருக்கும். உணவு விஷயங்களில் குழந்தைகள் சில வற்றை விலக்குவது என்பது தத்தி நடை பயிலும் குழந்தைகள் மற்றும் பள்ளி பருவத்தை நெருங்கும் குழந்தைகளிடையே பொதுவாக காணக் கூடியது. ஆனால் குழந்தையானது பெரும்பாலான உணவுகளைத் தவிர்க்கும் போது தாய்மார்களுக்கு மிகுந்த சிரமத்தையும் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி குறித்த கவலையையும் உண்டாக்குகிறது.
மேலும் புது உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது அதனை குழந்தைகள் விரும்பி உண்ணுதல் 80% நடக்காத ஒன்றாக இருக்கும். பொதுவாகவே சாப்பிட மறுக்கும் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளுமே புது உணவு வகைகளை உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. தொடர்ச்சியான ஊட்டலின் பிறகே ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றன.
சாப்பாட்டை விரும்பாத குழந்தையை கண்டறிவது எப்படி?
புது உணவு வகைகளை அளிக்கும் போது பாதிக்கும் மேற்பட்ட முறை முழுமையாக உணவினை மறுக்கும் குழந்தைகள் இவ்வகையைச் சேரும். வளர வளர இயற்கையாகவே மாறி விடக்கூடிய தன்மை தான் என்று நிம்மதி கொள்ள வேண்டும். மாறாக இக்கால துரித உணவுகளைக் குழந்தைகளுக்கு பழக்குதல் மூலம் அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை எப்பொழுதும் தவிர்க்கவே விரும்புவார்கள். இத்துரித உணவு பழக்கங்கள் மாற்றிவிடும் என்பது தான் மிகப் பெரிய இடையூறாக உள்ளது. எனவே குழந்தைகள் இயல்பிலே நல்ல உணவுகளை வெறுப்பவர்கள் அல்ல, முறையற்ற உணவு பழக்கங்களால் அவ்வாறு மாற்றப்படுகிறார்கள்.
சாப்பிட மறுக்கும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களிடையே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை அதிகரிக்க செய்தல் எவ்வாறு என்பன பற்றிக் காணலாம்.
சாப்பிட வற்புறுத்தாதீர்கள்
வளரும் பருவத்தில் குழந்தைகளின் பசிக்கும் தன்மை மாறிக் கொண்டே இருக்கும். தனக்கு பசிக்கவில்லை என குழந்தை பல முறை சொன்ன பிறகும் தட்டில் உள்ள மீத உணவையும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். முடிந்த வரை சாப்பிட சொல்லி ஊக்கப்படுத்துங்கள் மற்றும் முழுதாக சாப்பிடும் வேளையில் பாராட்டுங்கள். எப்பொழுதும் உங்கள் குழந்தையினை புது உணவு வகைகளை பிடிக்காத பட்சத்தில் வற்புறுத்தி திணித்தல் மற்றும் தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட சொல்லி மிரட்டுதல் கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய அளவில் உணவினைப் பிரித்து வழங்கலாம். உங்களது குழந்தையை உணவினை ரசிக்க அனுமதியுங்கள். அவ்வாறின்றி மகிழ்ச்சிக்கரமான உணவு நேரத்தை உணவிற்கு எதிரான போராட்டமாக குழந்தையை உணர செய்யாதீர்கள்.
நொறுக்குத்தீனிக்கான நேரங்களை வகுத்து கொள்ளுங்கள்
குழந்தைக்கு சாப்பாட்டின் மீது விருப்பமின்மைக்கு முதன்மையான காரணம் பசியின்மையே ஆகும். குழந்தைகளின் சிறிய வயிற்றிலே அனைத்து வகையான உணவுகள், நொறுக்குத்தீனிகளை திணிக்கிறோம். உணவு வேளைக்கு சற்று முந்திய நேரம் வழங்கப்படும் நொறுக்குத்தீனி மற்றும் பழச்சாறுகளால் குழந்தையின் வயிறு நிரப்பப்படும் போது, ஆரோக்கியமான உணவுக்கு இடமின்றி போகிறது. எனவே உணவு வேளைக்கும் நொறுக்குத்தீனிக்கும் இடைப்பட்ட கால அளவை இரண்டு மணி நேரமாக வைத்துக் கொள்ளுதல் நலம் அளிக்கும். ஊட்டச்சத்து உள்ளீட்டினை அதிகரிக்க , ஊட்டச்சத்து நிறைந்த நொறுக்குத்தீனி வகைகளைத் தேர்வு செய்தல் சிறப்பாகும்.
பழக்கப்படுத்துதல்
சரியான நேர இடைவெளிகளில் உணவினை வழங்குவதைப் பழக்கப்படுத்துதல். ஆரம்பத்தில் குழந்தை உண்ண மறுத்தாலும், தொடர்ந்து ஈடுபடுத்தும் போது குழந்தை அதனைத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுகொள்ள ஆரம்பிக்கும். பழக்கத்தின் ஆரம்பத்தில் உணவினை முழுமையாகவோ அல்லது சிறிதாகவோ தவிர்க்கும் பட்சத்தில் , உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
ஊட்டச்சத்தற்ற உணவு வகைகளைத் தவிர்த்தல்
ஆரோக்கியமற்ற எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுகள் உங்கள் மேஜையில் உள்ள போது குழந்தையிடம் ஆரோக்கியமான வழக்கமான உணவை அளித்தால் எவ்வாறு உண்ணும்? எனவே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை குழந்தைக்கு பழக்க விரும்புவோர், குழந்தை ஆரோக்கியமான உணவைத் தவிர்க்கும் போது உடனே ஆரோக்கியமற்ற உணவுகளை வழங்குதல் கூடாது
அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள்
குழந்தைகள் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் இருந்து தான் எதையும் கற்றுக்கொள்ளும். எனவே உணவு வேளையில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுவதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் உணவினை ரசித்து சாப்பிடுவதைக் கண்டு குழந்தைகளும் அவ்வாறே சாப்பிட முயலும். உங்கள் குழந்தைக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இருப்பின் அவர்களுடன் குழந்தையை அமர வைத்து உண்ண வையுங்கள். உங்கள் குழந்தை தன் சகோதரைப் பார்த்து ஆர்வமுற்று தானாக உண்ண தொடங்குவதைக் காணலாம்.
புதுமைகள் செய்தல்
உங்கள் குழந்தையின் உணவு ஆர்வத்தை அதிகரிக்க வழக்கமான உணவுகள் அன்றி ஆரோக்கியமான புது உணவு வகைகளைச் செய்யலாம். காய்கறிகள் மற்றும் பழங்களை பல விதமான வடிவங்களில் வெட்டித் தருவதன் மூலம் குழந்தையின் கவனத்தை ஈர்க்க முடியும். குழந்தைகளின் புரிதல் திறன் வளரும் இவ்வேளைகளில் ஆரோக்கியமான உணவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குவதன் மூலம் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க செய்யலாம். சமைக்கும் போதும், மளிகைப் பொருள்கள் வாங்கும் போதும் அவர்களை உடன் வைத்திருத்தல் அவர்களுக்கு அவ்விஷயங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவை அவர்களின் உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்
இறுதியாக, சாப்பிட மறுத்தல் என்பது குழந்தைகளினிடையே பொதுவாக காணப்படுவதே. அவர்களின் கவனத்தை உணவுகளின் மீதும் திருப்ப வேண்டியது பெற்றோரின் கடமையாகும். மேலும் இந்த செயல் முறையானது தாமதமாகவே வெற்றி பெறும் என்பதால் பெற்றோர் பொறுமையை பேணுதல் அவசியமாகும்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...