தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் சந்தேகங்கள்? தாய்மார்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்

குழந்தைக்குத் தேவையான தாய்ப்பாலை முழுமையாக அளித்துவிட வேண்டும் என்று இளம் தாய்மார்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் முறையான வழிகாட்டுதல் இல்லாமலும் உணர்வுத் தடுமாற்றங்களாலும் (Mood Swing) தாய்ப்பாலை சரியாக கொடுக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.
இரண்டு தலைமுறைக்கு முன்னர், நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டிலேயே பிறந்தவர்கள்.வீட்டிலேயே பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் கவனிக்க குழந்தை பெறுவதில் அனுபவமிக்க பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால் நம் தலைமுறைக்கு மருத்துவமனையில் தான் பிரசவம் அதுவும் பெரும்பாலும் சிசேரியன். நார்மல் டெலிவரி ஆவது அரிதான ஒன்றாகி விட்டது.
தாய்ப்பால் முறையாக கொடுக்க இன்றைய இளம் அம்மாக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
இளம் தம்பதிகள் மருத்துவமனை வந்து பிரசவம் முடித்து செல்கின்றனர். வீட்டுப் பெரியவர்கள் ஊரில் இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். இது மிகவும் அரிதான ஒன்றாகும்.பெரும்பாலும் பெண் வீட்டில் இருந்து மகளைப் பார்த்து கொள்ள வந்து விடுவார்கள். பெரியவர்கள் துணையின்றி பிரசவத்திற்கு வரும் இளம் தாய்மார்களுக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. எவ்வாறு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? ஏன் குடிக்க மறுக்கிறது என்பது பற்றிய என்னுடைய அனுபவம் மற்றும் அறிவிற்கு எட்டியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஏன் முக்கிய உணவாக உள்ளது?
பிரசவத்துக்கு பின் தாயிடம் சுரக்கும் பாலில்தான் குழந்தையின் ஒட்டுமொத்த வாழ்வுக்கான முதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தையின் செரிமான சக்தியை வளரச் செய்யவும் தாய்ப்பால் தான் உதவுகிறது. பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்கும் தாயின் ஸ்பரிசத்தால் அவர்களுக்கு இடையே ஒரு நெருக்கமான பந்தம் ஏற்படுகிறது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் குறைவாகவே ஏற்படுகிறது, மேலும் அவை மற்ற உணவுகளையும் பானங்களையும் உண்டு வளர்ந்த குழந்தைகளை விட ஊட்டமாகவே இருக்கின்றன. பிறந்து ஆறு மாதம் வரை எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
குழந்தைக்கு சரியாக பால் கொடுக்கப்படவில்லை என்றால், பால் கட்டிவிடும், பால் சுரப்பதும் குறைய ஆரம்பித்துவிடும். எனவே, இதை சாதரணமாக ஒதுக்கிவிடக்கூடாது. இது குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்கிறது.
பிரசவத்துக்குப் பின் சுரக்கும் முதல் கட்டியான பால் கடம்பு எனப்படும். இது கட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் ஊட்டச்சத்துக்களும் நோயெதிர் பொருட்களும் அடங்கி இருக்கும். இது குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்துக்களை அளித்து குழந்தையை நோய் மற்றும் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.
குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டத் தொடங்க வேண்டும்
முதலில் மார்பகத்தைக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்துவிட்டுப் பால் கொடுக்கவேண்டும். ஈரம் இருக்கக் கூடாது. ஒரு மார்பகத்தில் உள்ள பாலை முழுமையாகக் கொடுத்து விட்டுத்தான் அடுத்த மார்பில் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். ஏனெனில் முதலில் தண்ணீர் போன்ற பாலும் (Foremilk) கடைசியில் கொழுப்பு நிறைந்த பாலும் (HindMilk) சுரக்கும். மார்பகங்களில் மாற்றி மாற்றிப் பால் கொடுக்கும் போது கொழுப்புச் சத்து குழந்தைக்கு செல்லாது.
பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.
குழந்தையின் தலை, தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும். குழந்தையின் வாயின் மேல்புறத்தில் மார்பகக்காம்பு படும்படி இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் இது குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே கடினமாகத் தோன்றும். மாதங்கள் செல்ல செல்ல இது அத்தனை பெரிய சவாலாக தோன்றாது. குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்கும் படியான நிலை அதிகப்படியான பாலை சுரக்க வழிவகுக்கும். குழந்தையின் முழு உடலையும் தாயின் கை தாங்க வேண்டும்.
பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்:
- குழந்தையை நன்றாக குறுக்காகப் பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைத்துப் பிடித்திருக்க வேண்டும், அதன் வாயில் மார்பு நன்றாக பொருந்தி இருக்க வேண்டும்.
- குழந்தைக்கு எத்தனை தடவை வேண்டுமோ, எவ்வளவு நேரம் வேண்டுமோ, மற்றும் இரவிலும் கூட தாய்ப்பாலூட்ட வேண்டும்.குழந்தையின் முழு உடம்பும் தாயின் பக்கம் திரும்பி இருக்க வேண்டும்.
- எப்போதும், உட்கார்ந்த நிலையில்தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக் கொண்டு பால் கொடுத்தால் சவுகரியமாக இருக்கலாம். ஆனால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது சில நேரங்களில் தாயும், குழந்தையும் உறங்கிவிடக்கூடும். இதனால், குழந்தைக்கு பால் மூச்சுக்குழலில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
- குழந்தைக்குப் பசி எடுக்கும் போதெல்லாம் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம்.
- குழந்தை தாயின் அருகில் இருக்கும் போது ஓய்வாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.
குழந்தை சரியாக பால் குடிக்கிறது என்பதற்கான 4 அறிகுறிகள் :
- குழந்தையின் வாய் அகலமாக விரிந்திருக்கும்.
- குழந்தையின் முகவாய் தாயின் மார்பை தொட வேண்டும்.
- மார்புக்காம்பின் கரிய பகுதி குழந்தையின் வாயின் மேற்பகுதியில், கீழ்பகுதியைவிட அதிகமாக காணப்படுகிறது.
- குழந்தை நீண்ட ஆழமாக உறிஞ்சுகிற போது தாய்க்கு மார்புகாம்பில் வலி ஏற்படுவதில்லை.
குழந்தைக்கு பால் போதுமானதாக உள்ளதா என்பதை எப்படி அறிவது?
மற்ற பால் கொடுக்கும் தாய்மார்களில் 99% பேர் சொல்வது, பால் போதவில்லை என்பதுதான். எப்படி இதைக் கண்டுபிடிக்கலாம்? ஒவ்வொரு மாதமும் குழந்தை அரை கிலோ எடை கூடியிருக்க வேண்டும். தினந்தோறும் குறைந்தது 6 முறை வழக்கமான நிறத்தில் சிறுநீர் கழிக்கவேண்டும். இவை இரண்டும் சரியாக இருந்தாலே, போதுமான பால் குழந்தைக்குக் கிடைத்திருப்பதாக அர்த்தம் கொள்ளலாம்.
அடுத்ததாக குழந்தை அமைதியாக, திருப்தியுடன் இருப்பது, குடித்துவிட்டுத் தூங்கிவிடுவது ஆகிய அறிகுறிகளைக் கொண்டும் பால் போதுமானது என்று உணரலாம்.
குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுப்பதற்கான காரணங்கள்:
குழந்தை பிறப்பில் இருந்து பால் புகட்டுவதில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி பல நாட்கள் கழிந்த பின்னரும் கூட இப்பிரச்சனை எழலாம். இதற்குப் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் நிறைய உள்ளன.
- சில சமயங்களில் கைக்குழந்தைகள் பால் புகட்டும் போது மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள். பாலை உறிஞ்சிக் குடித்து முழுங்குவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதனால் பால் அருந்த மறுப்பார்கள்.
- நோய்தொற்றினால் காதில் ஏற்படக்கூடிய வலி அல்லது வேறு ஏதேனும் அசௌகரியம் காரணமாக குழந்தை அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். குழந்தைகள் தங்களின் அவஸ்தையை அழுகையின் மூலமும், பால் அருந்த மறுப்பதன் மூலமுமே பெரும்பாலும் வெளிப்படுத்துவர்.
- வயிற்றுப் பிடிப்பினால் உண்டாகும் வலியினால் அவதிப்படும் பெரும்பாலான குழந்தைகள் அழுவார்கள். அவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். இது பொதுவாக அஜீரணக் கோளாறு, உணவு வகைகளுக்கு கூரிய உணர்வுத் திறனுடன் இருத்தல் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலேயே ஏற்படுகிறது.
- அதிக அளவிலான வெளிச்சம் அல்லது சத்தம் அல்லது உங்கள் குழந்தையை அசௌகரியப்படுத்தும் ஏதோ ஒன்று பால் அருந்தும் செயலை நிம்மதியாக செய்யவிடாமல் அதனை தடுக்கக்கூடும்.
- சில நேரங்களில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். அதனால் கூட பால் அருந்த மறுக்கலாம்.
- சில வேளைகளில் பாலின் வரத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதை தாய் அறிவதில்லை. அதனால் கூட குழந்தை பால் அருந்த மறுக்கலாம்.
- சில குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது அதிக சேட்டை செய்வார்கள். குறிப்பாக கடிக்கவும் செய்து விடுகிறார்கள். இது மாதிரியான சூழலில் தாய்மார்கள் குழந்தைகளை அளவுக்கதிகமாக கண்டிக்கவும், அடிக்கவும் செய்து விடுவார்கள். இதனால் குழந்தை மிகவும் பயந்து போய் விடும். அடுத்த முறை பால் அருந்த மறுக்கும்.
எப்படி தாய்ப்பால் குடிக்க வைப்பது?
* பசி எடுத்து குழந்தை அழுவதற்கு முன்பே பால் கொடுத்து விட வேண்டும்.
* இரவில் தூங்கும் போது கூட இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்து விட வேண்டும்.
* பால் கொடுக்கும் தாய்மார்கள் அமைதியான மனநிலை உடன் மிகவும் பொறுமையாக பால் கொடுக்க வேண்டும்.
* குழந்தை பால் குடிக்க குடிக்க தான் அதிகமாக சுரக்கும்.ஆகவே குடிக்க மறுக்கிறது என பவுடர் பால் கொடுக்க ஆரம்பித்து விடாதீர்கள்.விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..
அம்மா ஒருவர் கூறிய உண்மை சம்பவம் ஒன்று கூறுகிறேன்
ஒரு அம்மா தன் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் உள்ள ஒருவரிடம் அதிக கோபத்துடன் பேசிக் கொண்டே பால் கொடுத்துள்ளார். சில நேரம் ஆகியும் குழந்தை பால் குடிப்பதை தாயால் உணர முடியவில்லை. என்ன ஆயிற்று என்று பார்த்தால் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. குழந்தை முற்றிலுமாக பால் குடிக்க மறுத்தது. என்ன காரணம் என்று ஆராய்ந்தால் பால் கொடுக்கும் போது கோபப்பட்டதால் குழந்தை மறுக்க தொடகிவிட்டது.
நினைவில் வைத்துக் கொள்ளவும்
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அமைதியான மனநிலை கொண்டு பால் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- தாய்ப்பால் முறையாகக் கொடுத்து வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்தை உறுதி செய்வோம்.
உலகில் எந்த ஒரு கலப்படம் இல்லாத ஒரே பால் தாய்ப்பால்... குழந்தைக்கு தடை இல்லாமல் தொடர்ந்து கொடுக்க இந்த குறிப்புகள் உதவும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...