உங்கள் குழந்தையின் செரிமானத்தை எளிதாக்கும் சூப்பர் உணவுகள்

Only For Pro

Reviewed by expert panel
காலை உணவை அரசன் போல் உண்ண வேண்டும்
மதிய உணவை சம்சாரி போல் உண்ண வேண்டும்
இரவு உணவை யாசகன் போல் உண்ண வேண்டும்...
ஆனால் இப்போது இரவு நேரங்களில் தான் உணவகங்கள் சென்று உணவு அதிகமாக உண்கிறோம். நேரமின்மை காரணமாக காலை உணவைக் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிக உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் சமூகமாக மாறிவிட்டோம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இரவு நேர உணவு உண்பதை தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால் நாளடைவில் அது உடம்புக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.. குறிப்பாக குழந்தைகளுக்கு எந்த விதமான உணவுகளை கொடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் எப்போது உணவு கொடுக்க வேண்டும் ?
இரவு உணவை எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துக்கொள்வது நல்லது. சாப்பிட்டுவிட்டு, சிறிது தூரம் மெதுவான நடை மேற்கொண்டபிறகு உறங்கச் செல்வது நலம். இரவு 11 அல்லது 12 மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, தட்டிலேயே கை கழுவிவிட்டு, படுக்கையில் சாய்ந்து உறங்குவது போன்ற மிகப்பெரிய உணவியல் தவறு வேறு எதுவும் இருக்க முடியாது. சாப்பிட்டவுடன் உறங்குபவர்களுக்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் இரைப்பைக் குடலை நோக்கி மேலேறி புண்களை உருவாக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று. தொடர்ந்து இப்படிச் செய்வதால், இரைக்குழல் பகுதியில் ஏற்பட்ட புண், புற்றுநோயாகக்கூட மாற்றம் பெறலாம்.
இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகள் - இரவில் சாப்பிட்டால் விஷ உணவுக் குறிகுணங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் இரவில் ஒதுக்கலாம்.
பொரித்த உணவுகள் - எண்ணெய் அதிகம் நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள், நெஞ்செரிச்சல், உப்பிசம் போன்றவற்றை உருவாக்கும். குறிப்பாக அசைவ உணவுகளுக்கு இரவு உணவில் இடம் தர வேண்டாம். அசைவ உணவுகள் செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், மறுநாள் மலக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் சில உணவுகள் - கீரை வகைகள், தயிர் ரகங்களுக்கு இரவு மெனுவில் தடை விதிப்பது கட்டாயம். கீரை மற்றும் தயிர் உணவுகளால் தலைபாரம், சளி, இருமல் தொந்தரவுகளுடன் ஒவ்வாமை சார்ந்த குறிகுணங்களும் கைகோத்துக் கொள்ளும். குளிர்ச்சித் தன்மையுடைய இவற்றைக் காலத்துக்கேற்ற வகையில் எடுப்பதுதான் அறிவுடைமை.
இரவு நேரங்களில் காபி போன்றவற்றை பருகக் கூடாது.
குழந்தைகள் இரவு நேரத்தில் சாப்பிட சிறந்த உணவு
ஆவியில் வெந்த உணவுகளையும் செரிமானத்துக்குப் பிரச்னை தராத மென்மையான உணவுகளையும் இரவுநேரத்தில் சாப்பிடுவது நல்லது. இட்லி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். எண்ணெய் சூழ்ந்த பரோட்டாக்களும் காரமான குழம்பு வகைகளும், துரித உணவு ரகங்களும் இரவு உணவில் வேண்டாம். இரவில் உணவுகளை அளவாக எடுத்துக்கொண்டால் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கவும் முடியும்.
இரவு நேரத்தில் காய்கள் அடங்கிய சூப் வகைகள், மிளகு மஞ்சள் சேர்த்த பால் போன்றவை உகந்ததாக இருக்கும். பன்னாட்டுக் குளிர்பானங்கள்... இரவில் மட்டுமல்ல எப்போதுமே வேண்டாம்.
உப்புமா, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கான சில இரவு உணவுகள்
அவல் தோசை தேவையானவை:
- கெட்டி அவல் - ஒரு கப்
- அரிசிமாவு - சிறிதளவு
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் _ தேவையான அளவு.
செய்முறை:
அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் இந்த மாவை மெல்லிசாக வார்த்து எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது மிளகாய் சட்னி தொட்டு சுடச்சுட சாப்பிட்டால், அமிர்தமாக இருக்கும்.
கோதுமைமாவு குழிப்பணியாரம் தேவையானவை:
- கோதுமைமாவு - ஒரு கப் உருளைக்கிழங்கு - 1 அல்லது 2
- பெரிய வெங்காயம் -1அல்லது 2
- பட்டாணி - கால் கப்
- மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து, வெங்காயம், மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். கோதுமைமாவில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டை களை, கோதுமைமாவில் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, போட்டு, திருப்பியதும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும். மாலை நேரத்துக்கு சூடாக சாப்பிட ஏற்ற டிபன் அயிட்டம் இது (இதை எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்).
இடியாப்பம்
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 கிலோ
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர்
செய்முறை
- பச்சரிசியை நன்கு களைந்து தண்ணீரில் 3 மணிநேரத்திற்கும் மேலாக ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை நன்கு வடித்து விட்டு, ஒரு பருத்தி துணியில் இந்த அரிசியை போட்டு மின்விசிறி காற்றில் உலர வைக்க வேண்டும்.
- பிறகு இந்த அரிசியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் போதே மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
- பிறகு இந்த மாவை கடாயில் கொட்டி, அடுப்பில் வைத்து இதமான சூட்டில் வைத்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது மாவை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்யாமல் விட்டால் மாவு தீய்ந்து விடும்.
- மாவின் தூள்கள் வெளியே தெரித்தால் மாவில் உள்ள ஈரப்பதம் நீங்கி விட்டது என அர்த்தம். பிறகு வேறொரு பாத்திரத்தில் அந்த மாவை கொட்டி, நன்றாக ஆறவிட்டு, பிறகு சல்லடையில் அந்த மாவை கொட்டி நன்கு சலித்து கொள்ள வேண்டும்.
- இப்படி மாவை தயார் செய்து கொண்ட பிறகு ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, அதில் இந்த இடியாப்ப மாவை போட்டு கலந்து, தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- இட்லி குண்டானில் சிறிது தண்ணீர் ஊற்றி, குண்டாவை மூடி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
- பின்பு பிசைந்த அந்த மாவை முறுக்கு பிழியும் உபகரணத்தில், இடியாப்ப அச்சு தட்டை வைத்து, அதனுள் இந்த மாவு கலவையை போட்டு, இட்லி தட்டில் மாவை பிழிந்து கொள்ள வேண்டும்.
- இப்போது அடுப்பில் இருக்கும் இட்லி குண்டவாவின் மூடியை திறந்து, அதில் மாவு பிழியப்பட்ட இட்லி தட்டுகளை வைத்து மூடி, 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை அவித்து எடுத்தோமேயானால் சுவையான இடியாப்பம் தயார்.
இதை சர்க்கரை அல்லது தேங்காய் சட்னி அல்லது வேறு ஏதேனும் சட்னி, குழம்பு வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சுவையான இடியாப்பம் தயார்.
இது போல் ஆவியில் வேக வைத்து எளிதாக செரிக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களின் தூக்கம் சீராகும். ஆரோக்கியம் பெருகும்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...