• உள்நுழை
  • |
  • பதிவு
விளையாட்டு மற்றும் விளையாட்டு

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் 8 பாரம்பரிய விளையாட்டுகள்

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 18, 2020

 8
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

இந்த கொரோனா பெருந்தொற்று காலம் என்பது  எல்லா அம்மாக்களையும் போலவே எனக்கும் ஒரு பெரிய சவாலான விஷயமாக இருக்கின்றது. எனக்கு இரண்டு குழந்தைகள் ஒரு குழந்தைக்கு 6 வயது இரண்டாவது குழந்தைக்கு 2 யது. ஒவ்வொரு நாளும் என் மகளை ஈடுபடுத்த பல விதமான திட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறேன்.  அந்த வகையில் எனக்கு கிடைத்த ஒரு ஐடியா பாரம்பரிய விளையாட்டுகள். இந்த விஷயத்தில் போன தலைமுறையினர் பாக்யசாளிகள். எண்ண முடியாத அளவிற்கு விளையாட்டுகள் குவிந்திருக்கும். எப்போது நினைத்து பார்த்தாலும் எனக்கு ஆனந்தம் தரும் அனுபவங்கள் அவை. என் வாழ்க்கையில் நான் கையாள்கிற விஷயங்களுக்கு அடிப்படியாக அமைந்தது அதில் நான் கற்றுக் கொண்ட திறன்கள் என்று சொல்லலாம்.

என் குழந்தைக்கும் வெறும் விளையாட்டாக மட்டுமில்லாமல் உடல் மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு தேவையான திறன்களை வளர்க்கும் விளையாட்டுகளில்  ஈடுபடுத்தவே விரும்புகிறேன்.  கம்ப்யூட்டர் கேம்ஸ் , மொபைல் கேம்ஸ், பில்டிங் ப்ளாக்ஸ், கார் கேம்ஸ், ஸ்கேட்டிங் என எண்ணில் அடங்காத விளையாட்டை வரிசை படுத்திக்கொண்டே போகலாம். ஆனால் பெரும்பாலான விளையாட்டுகள் தனியாக விளையாடி மகிழும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. மேலும் அவர்கள் இதில் விளையாடினால் சுறுசுறுப்பாவதை விட சோர்வாகவே இருக்கிறார்கள்.

பாரம்பரிய விளையாட்டின் நன்மைகள்

 இத்தனை கம்ப்யூட்டர் விளையாட்டுகள் கடந்த தலைமுறையினருக்கு கிடையாது. நண்பர்களுக்கும், குதூகலத்திற்கும் பஞ்சமிருக்காது. அதற்கு காரணம் நமது பாரம்பரிய விளையாட்டுகள் என்று நிச்சயமாக சொல்வேன். 20 வருடங்களுக்கு முன்னர் டிஜிட்டல் யுகமாக இல்லாத காலங்களில் உள்ள விளையாட்டுகள் அறிவுத்திறன், உடல் வலிமை, சக மனிதர்களுடனான உரையாடல், பிணைப்பு, குழு மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல், தோல்வியை கையள்வது, பிரச்சனைகளை தீர்கும் திறன், பகிர்தல் என  நம்  வாழ்விற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது. 

இந்த கால குழந்தைகளுக்கும்  பாரம்பரிய விளையாட்டுகளை அறிய வைக்கும்  சிறந்த தருணம் இந்த பெருந்தொற்று காலம். இந்த பதிவில் நமது பாரம்பரிய விளையாட்டுகளை பற்றியும் அதன் தனிச் சிறப்புகளை பற்றியும்  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த விளையாட்டுகளை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதோடு உங்கள் பழைய இனிமையான நினைவுகளையும் அசைப்போடுங்கள். (இதைப் படிக்க: 3-7 வயது குழந்தைகளுக்கான 13 விளையாட்டு ஆலோசனைகள் - http://www.parentune.com/parent-blog/kuzhanthaikalai-ukkuvikum-13-vilaiyattu-aalosanaigal/4765)

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்  8 பாரம்பரிய விளையாட்டுகள் 

ஏன் பாரம்பரிய விளையாட்டுகள் சிறந்தது?

எவ்வளவோ விளையாட்டுகள் இருந்தும் இன்று வரை அதன் தனிச்சிறப்பை பெற்றிருப்பதற்கான காரணங்கள்

  • விளையாட்டோடு சேர்த்து கலாச்சாரத்தையும், வரலாற்றையும் கற்றுக் கொடுக்கின்றது.
  • வாழ்க்கைக்கு தேவையான பல திறன்களை உள்ளடக்கியது.
  • குடும்பத்தோடு பிணைப்பை ஏற்படுத்துகின்றது. எல்லா வயதினருடன் கலந்து விளையாடும் தன்மையை கொண்டது.
  • கல்வியை விளையாட்டாக கற்றுக் கொள்ளும் கருவியாக விளங்குகிறது. அதாவது கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களை எளிமையாக கற்க முடியும்
  • சுற்றுச் சூழலுக்கு உகந்தது
  • இன்று நவீன விளையாட்டுகள் உருவாவதற்கு அடிப்படை இந்த பாரம்பரிய விளையாட்டுகளே.

பல்லாங்குழி

நமது கிராமங்களில்  இதை விளையாடாத பெண்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இது பிரபலம். மொத்தம் 14 குழிகளை கொண்ட பலகையில் புளியங்கோட்டை, சோழி, குன்னி முத்து  போன்றவற்றை  கொண்டு விளையாடும்  ஆட்டம். இந்த விளையாட்டு விரல்களுக்கு நல்ல பயிற்சி.  பல்லாங்குழி கட்டை இல்லையென்றால் இப்போதைக்கு தரையில் வட்டம் வரைந்து புளியங்கொட்டைகளை வைத்து சொல்லிக் கொடுக்கலாம். கணக்கு பயிற்சிகளை எளிமையாக கற்றுக் கொடுக்கும். இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலை தரும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

ஆடுபுலி ஆட்டம்

எல்லா வயதினரையும் ஈர்க்கும் மற்றொரு பலகை விளையாட்டு இது. அறிவுப்பூர்வமான விளையாட்டு இது. இரண்டு பேர் அல்லது இருக்குளுவினர்களாக இந்த விளையாட்டை ஆடலாம். புலி ஆட்டை வேட்டையாடுவது தான் இந்த விளையாட்டின் அடிப்படை. ஒருவர் 3 புலி காய்களை வைத்தும் மற்றொருவர் 15 ஆடுகளை வைத்தும் விளையாடுவர்கள். புலி ஆட்டை வேட்டையாட ஆடுகள் புலியை முடக்க வேண்டும். இதை ஆடினால் சாதுரியமும், சமயோசித புத்தியும் வளரும்.

தாயம் உருட்டுதல்

இரண்டு முதல் நான்கு பேர் இதில் விளையாடலாம். நாலுமுக தாயக்கட்டை மற்றும் ஆறு சோழிகளை வைத்து விளையட வேண்டும். ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் எவர் பலகையின் மையத்திற்கு சென்று மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு வருவதே விளையாட்டாகும். கைகலுக்கும், புத்திக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டு.

பாண்டியாட்டம் / நொண்டி

சிறுமிகள் தெருக்களில் அல்லது மொட்டை மாடியில் விளையாடும் விளையாட்டு இது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் எட்டு தொடர் பெட்டியை தரையில் வரைந்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் முதல் பெட்டியில் கல்லை போட்டு அந்த பெட்டியையும் கோடுகளையும் தொடாமல் நொண்டி அடித்து கடைசி பெட்டி வரை சென்று திரும்ப வர வேண்டும்.

பரமபதம் (ஏணியும் பாம்பும்)

இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். ஒன்று முதல் 132 கட்டங்கள் கொண்ட அந்த விளையாட்டு அட்டையில் நிறைய சின்ன பாம்புகள் மிகப்பெரிய பாம்பு ஒன்றும், ஏணியும் இருக்கும். பாம்புகள் நம்மை கொத்தினால் கீழே வந்துவிடுவோம். மீண்டும் ஏணி வைத்து மேலே போக முடியும். பாம்பின் வாயில் கடிபடாமல் தப்பித்து பரமபதத்தின் இறுதி நிலையை அடைய வேண்டும். வாழ்க்கையில் வெற்றி தோல்வியை  சமமாக பார்ப்பதை எளிமையாக கற்றுக் கொடுக்கிறது இந்த விளையாட்டு. தோற்றாலும் முயற்சி செய்து வெற்றி பெறலாம் என்ற மிகப்பெரிய வாழ்க்கை மந்திரத்தை இந்த விளையாட்டின் மூலம் பிள்ளைகள் கற்றுக் கொள்ளலாம்.

வீட்டிலேயே தயாரிக்கலாம் இந்த பரமபதம் அட்டையை. ஆன்லைனில் பார்த்து அட்டையில் கட்டங்களை வரைந்து கொள்ளுங்கள். கியூப் செய்து அதை உருட்டி விளையாடுங்கள்.

பம்பரம்

இந்த விளையாட்டை 8 பேர் வரை சேர்ந்து விளையாடலாம், பம்பரம் விளையாட தரையில் ஒரு சிறிய வட்டம் போடவேண்டும். பின் சிறுவர்கள் பம்பரத்தை சுழற்றி ஒரே நேரத்தில் கீழே விட்டு சுழற்றி விட வேண்டும். அதன் பின் சுழன்றுகொண்டு இருக்கும் பம்பரத்தை கையில் எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடித்து வெளியில் எடுக்க வேண்டும். இது போல் பம்பரத்திலே பல விளையாட்டுகள் உண்டு.பம்பரம் விளையாட்டால் கை  வீரர்களில் நுட்பமான செயல்களை செய்யும் திறனை வளர்கிறது, பம்பரத்தை சுழலவைக்க காய் மற்றும் விரலில் வேகம், குறி பார்த்து வீசும் திறன், குழு உணர்வு என பல நன்மைகள் பம்பரம் விளையாட்டில் மறைந்துருக்கிறது.

பச்சை குதிரை

பச்சை குதிரை சிறுவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டு. ஒருவர் குனிந்து கொள்ள, அவர் முதுகில் கையை ஊன்றி தாவி செல்லும் விளையாட்டு இது. இதனால் முதுகு நல்ல பலம் பெறும். இந்த விளையாட்டின் மூலம் வந்தது தான் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டி.

பாடலுடன் கூடிய விளையாட்டுகள்

குலைகுலையா முந்திரிக்காய், ஒரு குடம் தண்ணி ஊத்தி போன்ற விளையாட்டுகள் குழுவாக உரத்த குரலில் பாடியபடி ஆடும் விளையாட்டுகள், இந்த விளையாட்டுகள் சுற்றம் உள்ள நண்பர்கள் கூட்டத்துடன் சிறுவர் சிறுமியர் சேர்ந்த விளையாடும் கலகலப்பான விளையாட்டுகள், பெரும்பாலும் இந்த விளையாட்டுகளில் விளையாட்டு பொருட்கள் தேவையில்லை.  

பொதுவா பார்த்தீங்கனா மின்னனு கேட்ஜெட்ஸ் அதிக நேரம் விளையாடும் குழந்தைகளிடம் எரிச்சல், கோபம், அடம் பிடிப்பது போன்றவை காணப்படும். ஆனால் இந்த மாதிரி குழந்தைகளின் உடலுக்கும் மூளைக்கும் வேலை தரும் விளையாட்டுகளை கொடுத்துப் பாருங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். சுறுசுறுப்புடனும், விறுவிறுப்பாகவும் செயல்படுவார்கள். நல்ல பசி எடுக்கும், நன்றாக தூங்குவார்கள். கூடவே மகிழ்ச்சிக்கு மட்டுமில்லாமல் அவர்கள் வளர்ச்சிக்கு தேவையான திறன்களும் வளரும். என்னடா இது என் குழந்தை இந்த விடுமுறையில் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை என்று நினைப்பவராக இருந்தால் இந்த விளையாட்டுகளை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். பிறகு நீங்களே நம் பாரம்பரிய விளையாட்டின் மகத்துவத்தை அனுபவபூர்வமாக உணர்வீர்கள். உங்கள் குழந்தை ஏதோ ஒன்றை கற்றுக் கொள்கிறார்கள் என்ற திருப்தியும் கிடைக்கும்.

இந்த கொரோனா லாக்டவுனில் உங்கள் குழந்தைகளை எப்படி கையாள்கிறீர்கள்? எவ்வாறு அவர்களை ஈடுபடுத்துகிறீர்கள் என்பதை  கருத்துகள் மூலமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த விளையாட்டு மற்றும் விளையாட்டு Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}