உளுந்தின் நன்மைகள் மற்றும் உணவு வகைகள் - குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகைகள்

உளுந்து விதைக்கயிலே..
சுத்தி ஊதக்காத்து அடிக்கயில...
இந்த பாடல் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதற்காக இந்த பாடல் என்று யோசிக்கிறீர்களா... நான் இன்று உளுந்து பருப்பு பற்றி எழுத போகிறேன்.
தென் இந்திய உணவில் உளுந்தின் பங்கு மிக முக்கியமானது. இங்குள்ள முன்னோர்களிலிருந்து இப்போதுள்ள உள்ள இளைஞர்கள் வரை உளுந்தின் அருமை தெரிந்து வளர்பவர்கள். தற்போது எல்லா வீடுகளிலும் இட்லி இன்றியமையாத ஒரு உணவாக உள்ளது. முந்தைய காலங்களில் ஏதேனும் பண்டிகை நாட்களில் தான் இட்லி, தோசை உண்டு. உளுந்தில் உள்ள சத்துக்கள் எண்ணிலடங்காதவை.
உளுந்தின் பயன்கள்
- உளுந்து எலும்பு வலுப்பெற உதவுகிறது.
- குழந்தையின் உடல் சூட்டை தணிக்கும்.
- குழந்தையின் உடல் எடை கூடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இதில் புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து (குழந்தைகளுக்கு இரும்புச்சத்து ஏன் அவசியம்) அதிகம் உள்ளது.
தற்போது உளுந்து வைத்து செய்யும் ருசியான உணவிற்கான குறிப்புகளை எழுதப் போகிறேன்.
உளுந்து களி
உளுந்து களி பெண் வயதிற்கு வந்த மூன்றாவது நாளில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுப்பது வழக்கம்.நம் வீடுகளிலும் வாரம் ஒருமுறை செய்து சாப்பிடலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - 1 கப்
கருப்பட்டி - 3 கப்
தண்ணீர் - 3 கப்
நல்லெண்ணெய் - 150 மில்லி
வெந்தயம் - 10 கிராம்
பச்சரிசி - 25 கிராம்
செய்முறை
1. முதலில் உளுந்து, அரிசி மற்றும் வெந்தயத்தை ஊற வைத்து கொள்ளவும்.
2. 3-4 மணி நேரம் கழித்து ஊற வைத்ததை நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3. பின்னர் அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இடித்து வைத்துள்ள கருப்பட்டியை சேர்க்க வேண்டும்.
4. நன்றாக கரைந்து பின்னர் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
5. வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டி தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அரைத்த உளுந்து மாவும் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
6. அவ்வப்போது எண்ணெய் விட்டு கிளறி விடவும்.
7.அல்வா பதத்திற்கு வரும் வரை எண்ணெய் விட்டு நன்றாக கிளறி விடவும்.
8. தண்ணீர் கைகளில் தொட்டு அதை தொட்டு பார்த்தால் ஒட்டாமல் இருக்கும்.
9. பின்னர் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
10.கொஞ்சம் ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
11. சுவையான உளுந்து களி தயார்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அனைவரின் உடல் நலத்திற்கும் நல்லது.
உளுந்து பருப்பு சாதம்
இது மிகவும் சுவையாக இருக்கும்.எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
உடைத்த கருப்பு உளுந்து - 1/4 கப்
பூண்டு - 10 பல்
காயம் - ஒரு சிறிய துண்டு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
தேங்காய் பூ - அரை கப்
செய்முறை
1. முதலில் வாணலியை வைத்து சூடு செய்து கொள்ளவும். பின்னர் உளுந்து சேர்த்து லேசாக வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும்.
2. பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் அரிசி, வறுத்து வைத்த உளுத்தம்பருப்பு, பூண்டு, வெந்தயம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
3. 5-6 விசில் விட்டு இறக்கவும்.மிகவும் குழைவாக வேண்டாம் என்றால் 4 விசில் போதும்.
4. குக்கரை திறந்து பின் துருவிய தேங்காய் பூ சேர்த்து நன்கு கிளறவும்.
5. உளுத்தம்பருப்பு சாதம் தயார்.
6. வத்தல் உடன் பரிமாறவும்.
முழு உளுந்து தோசை
தேவையான பொருட்கள்:
முழு உளுந்து ( அ )
கருப்பு உளுந்து - 1 கப்
அரிசி - 1 கப்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. முதலில் உளுந்து, அரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும்.
2. 5 மணி நேரம் கழித்து கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. 6 மணி நேரம் கழித்து தோசை ஊற்றி சாப்பிட்டால்...ஆஹா என்ன ஒரு ருசி...
4. காரமாக தோசை வேண்டும் என்றால் மிளகு சீரகம் இரண்டையும் சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு அதை மாவோடு கலந்து தோசை வார்க்கவும்.
முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...