• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

குழந்தைகளுக்கான சிறந்த 7 தாலாட்டுப் பாடல்கள்

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 30, 2022

 7

தாலாட்டுப் பாடல் என்பது நம் மரபோடு ஒட்டி பிணைந்த ஒன்று. தமிழ் மணக்கும் பாடல்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நம் முன்னோர்களும், பாட்டிகளும் மெட்டெடுத்த எத்தனை  பாடல்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளது. என்னோட பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன், தாலேலோ, ஆராரோ என்ற வார்த்தைகளை கொண்டே முழுப்பாடலையும் பாடி உறங்க வைத்தாராம். தாய்க்கும் குழந்தைக்கும் பிணைப்பை உருவாக்கும். மொழியறிவை வளர்க்கும், குழந்தைக்கு தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் கொடுக்கும் தாலாட்டுப் பாடல்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா! ஆனால் தாலாட்டும் ஒரு உரையாடல் தான்.

இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு ஊருக்கும் சில வழக்கம் உண்டு. செட்டிநாடு வழக்கத்தில் வரலாற்றுச் செய்திகளும், முன்னோர் பற்றிய தகவல்களும், குடிப்பெருமை, குலப்பெருமை, முன்னோர்களின் புகழ், வீட்டின் செல்வாக்கு, உறவினர்களின் பாசம், ஒற்றுமை, தெய்வத்தின் துணை, கோயில் சிறப்பு ஒழுக்கம் மற்றும் அறநெறி சார்ந்த விஷயங்களும் இந்த பாடல்களில் இடம் பெற்றிருக்கும்.

'ரே.. ரே.... ஆராரோ.. ஆரிராரோ...' எனத் தொடங்கி முடியும் பாடல்கள் செட்டிநாடுகளில் உண்டு. `லூ..லூ....லூ..' என ஆரம்பமாகி முடிவது நாஞ்சில் வட்டாரப் பகுதிகளில் உண்டு.

குழந்தைகளுக்கான சில தாலாட்டுப் பாடல்கள் அதாவது பழைய பாடல்கள் மற்றும் சில சினிமா பாடல்களின் தொகுப்பு கீழே பகிர்ந்து உள்ளேன். உங்களுக்கு தெரிந்த மெட்டிலே பாடினாலும் சரி அல்லது அதே மெட்டை எடுத்துப் பாடினாலும் சரி உங்கள் குழந்தைக்கு எது பிடிக்கிறது என்பதை பார்த்து பாடுங்கள்.

குறிப்பு: பாரம்பரிய தாலாட்டு பல நூறு ஆண்டுகளாக உள்ளது. தாலாட்டுப் பாடல்கள்  குழந்தையை அமைதிப்படுத்தவும், தூங்கச் செய்யவும் உதவுகின்றன என்று அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஏன் தாலாட்டு பாடினால் குழந்தைகள் தூங்கிறார்கள்?

UNICEF இன் கூற்றுப்படி, தாலாட்டுப் பாடல்கள் குழந்தையின் மூளையின் பல பகுதிகளை எரியூட்டுகின்றன, இது உங்கள் குழந்தையை மொழியைப் பெறுவதற்கும் வாசிப்புத் திறனுக்கும் தயார்படுத்தும். கூடுதலாக, தாலாட்டின் தாளம் குழந்தைகளின் இதயத் துடிப்பைக் குறைப்பதன் மூலம் அவர்களை அமைதிப்படுத்துகிறது.

தாலாட்டின் இசையும் ராகமும் குழந்தைகளின் மனதையும் மூளையையும் ரொம்பவே ரிலாக்ஸ் செய்து உறங்க வைக்கக்கூடியது. யாருடைய குரல் என்பதை குழந்தைகளால் எளிதில் அடையாளம் காணமுடியும். திடீரென வேறொருவர் பாடல் பாடினால்  தலையை தூக்கிப் பாடுபவரைக் கவனிக்கும். அந்த அளவுக்கு குழந்தைகளின் மனதில் அந்தக் குரலும் இசையும் ஆழமாகப் பதிந்திருக்கும்.

தாலாட்டு "கணக்கிடப்படும்" என்பதற்கு எந்த ஒரு வரையறையும் இல்லை என்றாலும் - நீங்கள் மெதுவாகவும் மென்மையாகவும் பாடும் வரை உங்களுக்குப் பிடித்த பாடலைப் பயன்படுத்தலாம். பொதுவாக, பாடல் மிகவும் மென்மையாகவும், தாளமாகவும் இருந்தால், உங்கள் குழந்தையை ட்ரீம்லேண்டிற்கு அனுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

1. ஆராரோ ஆரிராரோ

ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூச் செண்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

2. ஆயர்பாடி மாளிகையில்!

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ...
அவன் வாய்நிறைய மண்ணையள்ளி மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
(ஆயர்பாடி)
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து
மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி)
நாகப்பதம் மேதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொன்டான் தாலேலோ- அவன்
மோகநிலை கூட ஒரு யோகநிலை போல் இருக்கும்
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ
கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காற்றினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகைக் காண்பதர்கும் போதை முத்தம் கேட்பதர்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி)

3. காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்

4. கண்ணன் வருவான் கதை சொல்லுவான்!

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

5.ஆனை விற்கும் வர்த்தகராம்

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !

6. மார்கழி மாசத்திலேதான்

மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீ
மாராசாவைப் பார்க்கையிலே
தைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீ
தயிரும், சோறும் திங்கையிலே
மாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீ
மாமன் வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே - கண்ணே நீ
பங்குச் சொத்தை வாங்கையிலே
சித்திரை மாசத் துவக்கத்திலே - கண்ணே நீ
சீர் வரிசை வாங்கையிலே,
வைகாசி மாசத்திலே - கண்ணே நீ
வயலைச் சுற்றிப் பார்க்கையிலே
ஆனி மாசக் கடைசியிலே - கண்ணே நீ
அடியெடுத்து வைக்கையிலே
அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணே நீ
அரண்மனைக்குப் போகையிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே - நீ
அப்பன் வீடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும் - கண்ணே
கடவுளுக்குக் கையெடடி

7.ஆராரோ ஆரீராரோ…

ஆராரோ ஆரீராரோ…
அம்புலிக்கு நேரிவரோ… ஓ… ஓ…
தாயான தாய் இவரோ…
தங்கரத தேரிவரோ… ஓ… ஓ…

மூச்சுப்பட்டா நோகுமுன்னு…
மூச்சடக்கி முத்தமிட்டேன்…
நிழலுப்பட்டா நோகுமுன்னு…
நிலவடங்க முத்தமிட்டேன்…

தூங்கா மணி விளக்கே…
தூங்காம தூங்கு கண்ணே…
ஆச அகல் விளக்கே…
அசையாம தூங்கு கண்ணே…

ஆராரோ ஆரீராரோ…
ஆரீரோ ஆரீராரோ…
ஆராரோ ஆரீராரோ… ஓ… ஓ… ஓ…
ஆரீரோ ஆரீராரோ… ஓ… ஓ…

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}