குழந்தைகளுக்கான உரை மருந்து தயாரிப்பதற்கான செய்முறைகள் என்ன?

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று வலி, வாயுப் பிரச்சனை என வயிறு சம்பந்தமான வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு இந்த உரை மருந்து. சளி வராமல் தடுக்கவும், செரிமானம் ஆவதற்கும் இந்த மருந்து பெரிதளவில் உதவுகின்றது. குழந்தை பிறந்து முப்பது நாட்கள் ஆனவுடன், தவறாமல் குழந்தைக்கு உரை மருந்து கொடுப்பார்கள்.
எனக்கு நான்கு மாத குழந்தை இருக்கின்றது நான் தினமும் கொடுத்து கொண்டு இருக்கிறேன். அவனுக்கு வயிறு சம்பந்தமான தொல்லைகளை சரி செய்ய எனக்கு கையில் இருக்கும் வீட்டு வைத்தியமாக பயன்படுத்துகிறேன். இந்த பதிவில் உரை மருந்துக்கு என்னென்ன பொருட்கள் தேவை? அதை எப்படி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
உரை மருந்துக்கு தேவைப்படும் பொருட்கள் :
- வசம்பு
- சுக்கு
- பெருங்காயம்
- பூண்டு
- கடுக்காய்
- மாசிக்காய்
- ஜாதிக்காய்
- சித்தரத்தை
- மிளகு
ஆகியவற்றை ஒவ்வொன்றாக உரைக் கல்லில் உரசி அதுவும் இலேசாக ஒரே உரசு உரசி தாய்ப்பாலில் கலந்து ஒரு மாதக் குழந்தைக்கு பாலாடையில் கொடுக்கலாம். அதிகமாக உரசக்கூடாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இரண்டு மாதம் ஆனால் இரண்டு இலேசாக உரச வேண்டும். மூன்று மாதம் என்றால் மூன்று இலேசாக உரசி கொடுக்கலாம். ஆனால் மாதம் கூட கூட அந்த எண்ணிக்கையில் உரசக்கூடாது.
எப்போதெல்லாம் உரை மருந்து கொடுக்கலாம்:
உரை கல் மீது இந்த மருத்துவ குணம் கொண்ட பொருட்களை உரச் தருவதால் இதை உரை மருந்து என்பார்கள். இது காலம் காலமாக பின்பற்றி வரும் நம்முடைய பாட்டி வைத்தியத்தில் ஒன்று. நான் என் குழந்தைக்கு காலையும் மாலையும் உரை மருந்து கொடுக்கிறேன். இது என் குழந்தைக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க , வாயு வெளியேற உதவுகின்றது.
- இதில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல்நலப் பிரச்சனையை சரி செய்கின்றது. பெருங்காயம் – ஜீரணம் ஆக்கும், வசம்பு – வயிற்று வலியைப் போக்கும், கடுக்காய்- மலச்சிக்கலை போக்கும், சுக்கு, மிளகு, சித்தரத்தை – சளிப் பிரச்சனை வராமல் தடுக்கும், மாசிக்காய் மற்றும் ஜாதிக்காய் – செரிமானம், வயிற்றுப் பிரச்சனைகளை தீர்க்கும்.
- சில நேரங்களில் குழந்தை வயிற்று வலியால் தொடர்ந்து அழும். அதற்கு வசம்பை எடுத்து நல்லெண்ணெய் விளக்கு தீபத்துல காட்டும் போது அதன் நுனி கருப்பாகிவிடும். அதை தாய்ப்பாலில் விட்டு ஒரு இலேசாக உரசி குழந்தைக்கு பாலடையில் கொடுக்கலாம். வயிற்று வலி உடனே சரியாகிவிடும். குறிப்பாக வசம்பை அளவுக்கு அதிகமாக தரக்கூடாது திக்குவாய் பழக்கம் வந்துவிடும்.
- அஜீரணக் கோளாறையும் இந்த உரை மருந்து சரி செய்துவிடும். தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் நாம் சாப்பிடும் உணவின் மூலம் நம் குழந்தைக்கு வாயுத் தொல்லை, அஜீரணம் ஏற்படுகின்றது. அதற்காக இந்த உரை மருந்தை தினமும் கொடுக்கும் போது வாயு வெளியேறும் மற்றும் மலம் எளிதாக கழிப்பார்கள்.
- மேலும் பூண்டு, மிளகு, சுக்கு. சித்தரத்தை ஆகியவை சளிப்பிரச்சனைகளுக்கும், இருமல், அஜீரணப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகின்றது.
எவ்வாறு உரை மருந்தை கொடுக்கிறார்கள் ?
இந்த உரை மருந்தை இரண்டு விதமாக கொடுப்பார்கள். அது என்ன என்பதை பார்க்கலாம்.
- இந்த மருத்துவப் பொருட்களை நல்லெண்ணெய் விளக்கு தீபத்துல காட்டி உரை கல்லில் இலேசாக உரசிக் கொடுப்பார்கள்.
- கொட்டாங்குச்சியை அதன் வலுவலுப்புத் தன்மை வரும் வரை நன்றாக சுரண்டி வைத்துக் கொள்ளவும். உரை கல்லுக்கு பதிலாக இந்த கொட்டாங்குச்சிக்குள் இலேசாக உரசியும் கொடுக்கலாம். நான் என் குழந்தைக்கு இந்த முறையில் தான் கொடுக்கிறேன். கல்லை விட இதில் உரசும் போது இலேசாக உரச வசதியாக இருக்கும். ஆனால் உரை கல் எளிதாக கிடைக்கும். கொட்டாங்குச்சியை நாம் தயார் செய்ய வேண்டும்.
- எதுவாக இருந்தாலும் அதிகமாக உரசக்கூடாது என்பது கண்டிஷன். மருத்துவ குணங்கள் நிறைந்ததால் முக்கியமாக பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் மிக குறைவான அளவே இருக்க வேண்டும். இதை அழுத்தமாக உரசி தேய்க்கக் கூடாது.
- நீங்கள் உங்கள் பாட்டியிடமோ அல்லது உரை மருந்து கொடுப்பவரிடமோ இதைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டால் சந்தேகம் இல்லாமல் கொடுக்கலாம்.
- ஆயுர்வேதா மற்றும் சித்தா மருத்துவமனைகளில் இது மாத்திரைகளாகவும் கொடுக்கிறார்கள். உங்களுக்கு அதிக தெளிவு கிடைக்க அவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இது நம் வீட்டில் இருக்கும் முதலுதவி பெட்டி போல் செயல்படும் இதற்கும் கட்டுப்படவில்லை என்றால் அடுத்து மருத்துவரிடம் செல்லலாம். ஆனால் பெரும்பாலான வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நம்மிடம் இருக்கும் மாமருந்து இந்த உரை மருந்து.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...