குழந்தைக்கு தாய்ப்பால் மறக்க வ ...
குழந்தைக்கு தாய்ப்பால் மறக்க வைப்பதற்கான குறிப்புகள்
நம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது இருக்கும் மகிழ்ச்சியும், திருப்தியும் தாய்ப்பாலை மறக்க வைக்கும் போது கிடைப்பதில்லை. இது பல அம்மாக்களுக்கு சங்கடமான தருணமாக இருக்கிறது. குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தாய்ப்பாலை மறக்க வைப்பதற்கு அம்மாக்களுக்கு சவாலாக இருப்பதை அணுகுவதற்கு நிறைய பொறுமையும், மாற்று யோசனைகளும் தேவைப்படுகிறது.
தாய்ப்பால் என்பது குழந்தையின் பசியை மட்டும் ஆற்றுவதில்லை. இந்த அரவணைப்பு, தொடுதல் அவர்களை உளவியல் ரீதியாக மேம்படவும், தாயுடன் பிணைப்பை ஏற்படுத்தவும் உதவுகின்றது. பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை மறக்க வைக்க சில நாட்கள் பாட்டிகளிடம் தூங்க வைப்பார்கள். எவ்வளவு அழுதாலும் அம்மாவிடம் கொடுக்க மாட்டார்கள் 4 அல்லது 5 நாட்களில் சரியாகிவிடும் என்பார்கள்.
ஆனால் இன்றைய அம்மாக்களுக்கு இந்த வழக்கம் பெரும் வருத்தத்தை தருவதால் வேறு வழிகளில் அதாவது குழந்தைக்கும் பெரிய பாதிப்பு இல்லாமல் அம்மாவும் ஏற்றுக்கொள்ளும் வழி இருந்தால் சிறந்ததாக எண்ணுகிறார்கள். உங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்க வைக்க இங்கே சில வழிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தலாம்
Doctor Q&As from Parents like you
உலக சுகாதார நிறுவனம் (WHO) உங்கள் குழந்தைக்கு 2.5 வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இது ஒவ்வோரு அம்மாக்களின் உடல் மற்றும் மன நலம், சூழ்நிலை, ஆதரவு, கரியர் என பல அம்சங்களை பொறுத்தே முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. மேலும் குழந்தையின் பார்வையிலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த முடிவெடுப்பதில் பல காரணிகள் அடங்கியிருக்கிறது.
நாம் தாய்ப்பாலை அதிக காலம் கொடுக்கும் போது அதை நிறுத்தவும் கூடுதல் அவகாசம் எடுக்கும். குழந்தைக்கு ஒரு வயதில் நிறுத்தும் உத்திகளை 3 வயதில் நம்மால் பின்பற்ற முடியாது. ஏன்னென்றால் 12 மாத குழந்தையை ஒப்பிடுகையில் 2 வயது குழந்தை உணர்வு ரீதியாக தாயுடன் அதிக பிணைப்போடு இருப்பார்கள். அதே போல் 2 வயது குழந்தையை விட 3 வயது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது கடினம்.
உங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்க வைப்பதற்கான சில ஆலோசனைகள்
ஒரு வயது குழந்தையை ஒப்பிடுகையில் 2 – 3 வயது குழந்தைக்கு தாய்ப்பால் நிறுத்த அதிக பொறுமையும், நிதானமும் அவசியம். இதில் குழந்தைகள் பிடிவாதம் பிடிப்பதும், ஆர்ப்பாட்டம் செய்வதும் நிகழும். இங்கே உங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்க வைப்பதற்கான சில ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம்.
- அதிக ஈடுபாடு தேவை – 2- 3 வயது குழந்தைகளை தளர்நடைப் பருவம் என்று சொல்வார்கள் அதாவது ஆங்கிலத்தில் டாட்லர் என்பார்கள் இந்த டாட்லர் பருவ குழந்தைகளிடம் தாய்ப்பாலை நிறுத்த நிறைய ஈடுபாடும், அவகாசமும் தேவை. நீங்கள் தாய்ப்பாலை நிறுத்த முடிவு செய்துவிட்டால் அதை பாதியில் நிறுத்தாதீர்கள். உங்களின் எல்லா உத்திகளையும் உங்கள் குழந்தை நன்கு அறிவார்கள்.
- குழந்தையிடம் பேசுங்கள் – உங்கள் குழந்தையிடம் அம்மா தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தப்போகிறேன் என்று சொல்லுங்கள். கூடவே ஏன் நிறுத்தப் போகிறீர்கள் என்ற காரணத்தையும் கூறுங்கள். உதாரணத்திற்கு, நீ இப்போது வளர்ந்துவிட்டாய் அதனால் இந்த பால் உனக்கு பற்றாது, அதனால் மற்ற உணவுகளை நீ அதிகம் சாப்பிட்டால் தான் நன்கு வளர முடியும்,. சக்தி கிடைக்கும் என்று அவர்களுக்கு ஏற்றவாறு பொறுமையாக சொல்லுங்கள். இதை நீங்கள் நிறுத்தப்போவதற்கு முன்னால் சொல்லி அவர்களை தயார் செய்வதன் மூலம் அவர்கள் புரிந்து கொள்ள உடஹ்வியாக இருக்கும்.
- நடவடிக்கைகள் மூலம் பாலூட்டும் நேரத்தை திசைத்திருப்பலாம் – குழந்தைகளுக்கு பாலூட்டும் நேரத்தில் அவர்களுக்கு ஞாபகம் வருவதற்கு முன்னாடியே கதைசொல்லுவது, சேர்ந்து கேம்ஸ் விளையாடுவது, குழந்தைகளுக்கு பிடித்த மற்ற செயல்களில் அவர்களை ஈடுபடுத்தலாம். இன்னொரு வழி பாலூட்டும் நேரத்தில் மற்ற வண்ணம் நிறைந்த, அலங்கரித்த உணவுகளை கொடுக்கலாம். உணவு நேரத்தையே அவர்களுக்கு ஜாலியாக மாற்றி கொடுப்பதன் மூலம் பால் குடிப்பதை மறந்து மற்ற செயல்களில் ஈடுபடுவார்கள். பாலூட்டும் போது அவர்கள் பிணைப்பாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்திருப்பார்கள். அதனால் அந்த பிணைப்பையும், பாதுகாப்பையும், திட உணவு கொடுக்கும் போது, அவர்களோடு விளையாடும் போது உருவாக்குங்கள்.
- கோரிக்கைகளுக்கு நோ சொல்லுங்கள் – முதலில் உங்கள் குழந்தை எந்தெந்த நேரங்களில் பாலூட்ட சொல்லி கோரிக்கை வைப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். சில குழந்தைகள் இரவில் தூங்க செல்லும் முன், பயமாக இருக்கும் போது, விளையாடிய பிறகு என ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுக்கென்று நேரத்தை வைத்திருப்பார்கள். 2அல்லது 3 வயதில் நீங்கள் பால் கொடுப்பதை நிறுத்தும் போது அவர்களின் கோரிக்கைகளுக்கு நோ சொல்லுங்கள். புரிய வைக்க முயற்சி செய்யுங்கள் அல்லது திசைத்திருப்புங்கள். மிரட்டுவது, அடிப்பது போன்று கடினமாக நடந்துகொள்வதை தவிர்த்து விடுங்கள். முதலில் பகலில் பால் கொடுப்பதை நிறுத்துங்கள், அதன் பிறகு இரவு நல்ல வயிறு நிறைய உணவளித்து தூங்க வைத்துவிடுங்கள். மெல்ல மெல்ல இரவிலும் குறைத்து நிறுத்திவிடுங்கள்.
- தூங்க வைக்கும் பொறுப்பை அப்பாவிடம் கொடுங்கள் – குழந்தை பால் கேட்கும் நேரங்களில் அப்பாவின் உதவியை நாடலாம். குழந்தை தூங்க செல்லும் முன் அப்பாவை அரவணைத்து தூங்க வைக்க சொல்லலாம். இரவின் நடுவில் பால் கேட்டாலும் அப்பாவை மார்பில் போட்டு தட்டிக் கொடுத்து தூங்க வைக்க சொல்லலாம்.
எல்லா அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை சுமூகமாக, அமைதியாக நிறுத்த வேண்டும் என்பது தான் ஆசை. நிச்சயமாக நாம் பொறுமையாக, நிதானமாக சில உத்திகள் மூலம் கையாளும் போது ஆர்ப்பாட்டம் இல்லாமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த முடியும் என்பதை என்னோட அணுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உங்களுடைய குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த எடுத்துக் கொண்ட வழிகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
Be the first to support
Be the first to share
Related Blogs & Vlogs
No related events found.